Archive

பாஸ் (எ) பாஸ்கரன்

டிவியில் படத்தைப் பற்றிய நிறைய கிளிப்பிங்க்/பேட்டிகள் பார்த்து, படம் நல்ல நகைச்சுவையாக இருக்கிறது என்று கேள்விப்பட்டு இந்தப் படத்தை இன்று சத்யம் திரையரங்கில் பார்த்தேன். படத்தை பற்றி பலர் நிறைய சொல்லிவிட்டதால் சுருக்கமாக என் கருத்து.

படத்தின் ஒரே பலம் அதில் இருப்பதைவிட இயக்குனர் அதில் விட்டுவிட்டது தான் – சண்டை, ஆபாசம், குடும்பத்தை குளைக்கும் சதிகள் போன்றவை இல்லாமல் இருந்தது தான். இதைவிட சிறந்த முழுநீள நகைச்சுவைப் படங்கள் தமிழில் பல உண்டு, அதனால் எனக்கு இது எதிர்ப்பார்த்த அளவிற்கு எனக்கு இல்லை என்று தான் சொல்ல வேண்டும். நான் ரசித்ததில் ஒரு காட்சி, ஆர்யா வாழ்க்கையில் உருப்படுவார் என்று பொருத்திருந்து, வெறுத்துப் போய் நயன்தாரா சொல்வது, “வா வீட்டை விட்டு வெளியே போய் கல்யாண் செய்துக் கொண்டு, நான் உன்னையும் சேர்த்து காப்பாத்துகிறேன்” என்பது – அந்த காட்சியில் நல்ல எதார்த்தம்.

கிளைமாக்ஸ் பேத்தல், ஜீவாவை இன்னும் சரியாக பயன்படுத்தியிருக்கலாம். மொத்தத்தில், படம் கண்டிப்பாக பார்க்கலாம், பார்க்காவிட்டாலும் தவறட்டது ஒன்றுமில்லை.

Boss-Engira-Baskaran

எல்லைகள் இல்லா இராம காதை

elaigal illa irama kaathai

திரு.பழ.கருப்பையா எழுதியுள்ள ”எல்லைகள் இல்லா இராம காதை” என்ற இந்தப் புத்தகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது.  தனக்கு மிகவும் விருப்பமான கம்ப இராமாயணத்தை எளிமையான முறையில், உதாரணங்கள் பலக்கொடுத்து அனைவருக்கும் எட்டும் வகையில் தந்துள்ள ஆசிரியரை நாம் எவ்வளவு பாராட்டினாலும் தகும். இராமாயண கதை நம் அனைவருக்கும் தெரியும், அதனால் ஆசிரியர் கதை சொல்லிக் கொண்டு போகாமல், நுனுக்கமான இடங்களையும், இராமனின் சிறப்பையும், கம்பனின் ஆற்றலையும் காட்டும் இடங்களை மட்டுமே குறிப்பிடுகிறார். இருநூறு பக்கங்களில் இவ்வளவு தான் சொல்ல வேண்டும் என்று உணர்ந்து செய்துள்ளார். இது ஒரு அலசல் தானே தவிர முழு இராமாயணம் அல்ல.நல்லதொரு புத்தகம், அனைவரும் படித்து மகிழலாம்!.

புத்தகத்தில் இருந்து சில உதாரணங்கள்:

“எவனுடைய ஆட்சியில் அரசு ஒவ்வொரு காரியமும் செய்து முடிக்கும்போது, மக்கள் அதைத் தாங்களே செய்ததாக நினைக்கிறார்களோ … , அவனுடைய ஆட்சியே சிறந்த ஆட்சி என்று சீனத்துத் தாவோயியம் கூறும்!”

“இத்தாலிய நாட்டு மாக்கியவேலி உலகப் பெரும் அரசியல் விற்பன்னன். அவன் மன்னன் என்னும் உலகப் புகழ்பெற்ற ஒரு நூலினை எழுதினான். அரசியலில் வெற்றி ஒன்றுதான் குறிக்கோள்; அதை அடைய எந்தப் பித்தலாட்டமும் செய்யலாம்; யாரை வேண்டுமானாலும் பலியிடலாம்; கருவுத்தை எந்த வகையாலும் நிரப்பிக் கொள்ளலாம்; அரசியலுக்குச் சூதும் வாதும் சூழ்ச்சிகளும் தான் முக்கியம்”

”ஏதோ திருவிழாக் கூட்ட நெரிசலில் சந்தித்த ஒருவரோடு பேச முடியாமல் கழிவதுபோல், இராமன் கைகேயி சந்திப்பு கழியக்கூடாதே!ஆனால் அப்படித்தானே நடந்தது”

“பழைய ஏற்பாட்டின் (old testament) இறுதிக் காலத்திலும் புதிய ஏற்பாட்டின் தொடக்க காலத்திலும் ஏரோது என்ற மன்னன் இருந்தான். அவனுக்கு ஓர் ஆசைநாயகி இருந்தாள்… ஒரு நாள் அந்த ஆசைநாயகியின் மகள் நடனமாடி மன்னன் ஏரோதை மகிழ்வித்தாள். ஏரோது தன்னிலை மறந்த பெரு மகிழ்ச்சியில் ‘நீ என்ன கேட்டாலும் தருகிறேன், கேள்! என்று பலர் முன்னிலையில் ஆணையிட்டு வாக்குக் கொடுத்தான்”

“குடியாட்சிகளிலும் இளவரசுப் பட்டங்கள் உண்டு; மணிமுடி மட்டும் தலையில் வைத்துக் கொள்வதில்லை. குடும்பங்களின் ஆட்சிதான் இப்போதைய குடியாட்சி. குடி என்பது குடும்பங்களையும் குறிக்கும் தானே! … ஆகவே அன்றும் இன்றும் அதிகாரம் என்பது அரசபோகமே!”

”வால்மீகி இராமனையும் சீதையும் முன்கூட்டியே ஒருவரை ஒருவர் கண்டுகொள்ளும்படி செய்யவில்லை… கம்பன் சங்ககாலம் போற்றிய அன்பின் ஐந்திணையைத் தானும் போற்றுபவன். தமிழினத்தின் வாழ்வை ஒழுங்குபடுத்த ஒல்காப் புகழ்த் தொல்காப்பியன் எழுதிய பொருளதிகாரத்தைப் பெரிதும் போற்றுபவன்”

“…குடியாட்சி முறைக்குக் கொள்ளி வைக்க வந்தவன் சீசர் என்பதனால் புருட்டசு சீசரை எதிர்க்கிறான்… ஒன்றுக்கொன்று நேர்மாறான வாழ்க்கைப் போக்கினர் குடியாட்சிக்கான போரில் ஒன்றாக இணைகிறார்கள்…. இங்கே சீதையை மீட்கவும் அறத்தை நிலைநிறுத்தவுமான ஒரு பெரும்போரில் சுக்கிரீவனோடு வருகின்றவர்களையோ, தன்னோடு இதில் இணைய விரும்புகின்றவர்களையோ தராதரம் பார்த்துக் கொண்டிருப்பது இயலக்கூடிய செயலுமில்லை; அறிவான செயலுமில்லை”

’குழு அரசியல் (groupism) ஒரு கட்சியை மொத்தமாக வலுவிழக்கச் செய்துவிடும்! எதிர்க்கட்சியின்மீது ஒன்றுபட்டுப் பாயவேண்டிய அம்புகள் பிளவுபடுவதால், ஒருமைப்பட்ட தாக்குதல் நடக்காது”

“எல்லாப் புகழும் அல்லாவுக்கே என்று இறைமையைத் துதிப்பது வேறு; எல்லாப் புகழும் தலைவனுக்கே என்று தன் புகழை மட்டுமே பாடியாக வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்துவது வேறு!”

‘கொல கொலயா முந்திரிக்கா’

kola kolaya mundrikka

இந்த பதிவும் கிரேஸி மோகன் பற்றியது தான்.

சமீபத்தில் வெளிவந்த ‘கொல கொலயா முந்திரிக்கா’ படத்தை இன்று பார்த்தேன். கிரேஸி மோகன் கதை, வசனம் எழுதும் படங்களில் நிறைய கடி ஜோக்குகள் இருக்கும், நாமும் அதை ரசிப்போம், சிரிப்போம். ஆனால் இந்தப் படமே ‘கடியாக’ தான் இருந்தது. ஜெயராம், பாஸ்கர், நீலுப் போன்ற பல சிறந்த நகைச்சுவை நடிகர்கள் இருந்தும், வசனம் பல இடங்களில் கைக் கொடுத்தும் கதையில் சுத்தமாக ஒன்றுமே இல்லாததால் அனைத்தும் வீணடிக்கப்பட்டுவிட்டது.

கார்த்திக்குமார், ஷீகா நன்றாக பண்ணியுள்ளார்கள், வாழ்த்துக்கள். இதற்கு மேல் படத்தைப் பற்றிச் சொல்ல எனக்கும் ஒன்றுமே இல்லை.

முழுமையான விமர்சனம் வேண்டும் என்றால் இங்கே படிக்கலாம்.

கே.பி.டி.சிரிப்புராஜ சோழன் (K.P.D. Sirippuraja chozhan by Crazy Mohan)

K.P.D. Sirippurajachozhan

கிரேஸி மோகனின் “கே.பி.டி.சிரிப்புராஜ சோழன்” என்ற இந்த சரித்திர (திரிக்கின்ற) நகைச்சுவைப் புத்தகத்தைப் படித்தேன், சிரித்தேன், சிரித்துக் கொண்டேயிருந்தேன். அருமை! ஒரு விஷயத்தை முழுக்க கதைவிட்டுவிட்டு கீழே அதற்கு ஆதாரம் என்று வேறு மேலும் கதைவிடுகிறார் கிரேஸி.  அதே போல பெயர்களிலே நம்மை சிரிக்க வைக்கிறார், உதாரணம்: கே.பி.டி.சிரிப்புராஜ சோழன்… அதாவது தந்தையின் பெயர் கேணக்கிறுக்கசிம்மன் (முதல் எழுத்து கே) தலைநகரம் பித்துப்பிடிச்சான்பாளையம் முதல் எழுத்து பி), ஆராய்ச்சி மணியின் சத்தம் டிங்டாங் (முதல் எழத்து டி) இப்படி. மற்ற கதாப்பாத்திரங்களின் பெயர்களையும் விட்டுவைக்கவில்லை “ராஜகுரு படுகிழதோப்பனார்”, படைத் தளபதி “அவசரக் குடுக்கை அரையர்” என்பது போலப் பல.

ஒரே காமெடி கதையில் ஒரு போர், காதல், தேர்தல், பழிவாங்குதல், தந்தைப்பாசம் என்று அனைத்துயும் கலந்து அடித்திருக்கிறார் கிரேஸி, நிச்சயம் கிரேஸியானது தான் இது. தற்கால இந்தியாவில் நடக்கும் தேர்தல் குளறுப்பாடுகளை, நல்ல நகைச்சுவையாகவும் அதுவும் ஒரு புராண கதையில் சொல்லி சாடமுடியம் என்றால் அது கிரேஸியால் மட்டும் தான் முடியும். அதையும் இந்தப் புத்தகத்தில் செய்கிறார்.

கிழக்கு பதிப்பகத்தின் ஒரு வெளியிடு இது, படிக்கவும், சிரிக்கவும் – கண்டிப்பாக உங்கள் ரத்த ஆழுத்தம் ஒரு பத்து புள்ளிகளாவது இதை படிந்தநாளில் குறையும்.

கலைவாணி: ஒரு பாலியில் தொழிலாளியின் கதை

kalaivani

இப்புத்தகத்தின் வலைப்பக்கம் இப்படி தான் தன்னை அறிமுகம் செய்கிறது “உண்மையில் ஒருவருக்கும் பாலியல் தொழில் செய்கிற பெண்களின் வலி புரிவதில்லை. “என்னைக் கல்யாணம் பண்ணிக்கிறியா?” இது வழக்கமாக வாடிக்கையாளர்களில் பாதிப் பேர் கேட்கிற வாசகம். எல்லாமே அந்தப் பத்து நிமிட மயக்கத்துக்கு மட்டுமான பரிவால் வருவது. இது கலைவாணியின் துயரம் நிரம்பிய சுயசரிதை. உயிர்த்துடிப்பு மிகுந்த எளிமையான வரிகளால் இதயத்தை உலுக்கிவிடுகிறார். இந்நூலைப் படிக்கும் யாரும், வயிற்றுப் பிழைப்புக்காக தெருவோரமாக நிற்கும் ஒரு பாலியல் தொழிலாளியை, இனிமேல் மரியாதைக் குறைவாகப் பார்க்க மாட்டார்கள், பார்க்க முடியாது”

இது சென்ற ஆண்டு சென்னை புத்தகக்காட்சியில் நான் வாங்கிய புத்தகம். எப்படி இருக்குமோ என்று தயக்கத்துடன் தான் வாங்கினேன்.  (உண்மை) கதை என்பதால் சன் டிவியின் ‘நிஜம்’ போல மொக்கையாக இருக்கும் என்று சந்தேகத்தோடு படிக்க தொடங்கினேன். புத்தகத்தை படிக்க அரம்பித்து சில மணி நேரங்களிலேயே முடித்தும் விட்டேன். அந்த அளவுக்கு எளிமையான, சீரான நடையில் நல்ல சுவாரஸ்யமான ஒரு தொடக்கத்தோடு எழுதியுள்ளார் ஜோதி நரசிம்மன். இந்த அளவுக்கு ஒரு உண்மை கதையை அதுவும் தன் சொந்த கதையை, வெளிப்படையாக சமுதாயம் என்ன சொல்லுமோ என்று தயங்காமல் எழுதிய கலைவாணி அவர்களுக்கு வாசகர்களின் சார்ப்பில் என் நெஞ்சார்ந்த பாராட்டுக்கள்.  பாலியல் பற்றி புத்தகமாக இருந்தாலும், ஆபாச வர்ணனைகளோ, கதையின் ஓட்டத்திற்கு, நடக்கும் வாழ்வின் நிகழ்வுக்கு தேவையில்லாத எதுவும் இல்லை.

கண்டிப்பாகப் படிக்க வேண்டிய புத்தகம் என்று சொல்ல முடியாது, ஆனாலும் தமிழில் இது ஒரு நல்ல முயற்சி. பாராட்டுக்கள்.

Angadi Theru (அங்காடி தெரு)

angadi theru

நான் பிறந்ததில் (70களின் நடுவே) இருந்து என் பள்ளி பருவம் முடியும் வரை ரங்கநாதன் தெருவில் தான் (எங்கள் லிப்கோ நிறுவனம் அப்போது அங்கே தான் இருந்தது) வசித்தோம், அதனால் படத்தின் கதைக்களம் எனக்கு நன்றாக தெரிந்த ஒன்று.   அதனால் இந்த படத்தை பற்றி கேள்விப்பட்டதில் இருந்து இதைப் பார்க்க விரும்பினேன். கடந்த பல மாதங்களாகவே நான் மீண்டும் மீண்டும் கேட்டுகும் ஒரு பாட்டு படத்தில் வரும் “அவள் அப்படி ஒன்றும் அழகில்லை” பாட்டு, அதனால் மேலும் கூடுதல் எதிர்ப்பார்ப்பு. இன்று தான் ஐநாக்ஸ்’ல் பார்க்க முடிந்தது. வந்து பலவாரங்கள் ஆன படத்திற்கு முக்கால்வாசிக் கூட்டம் இருந்தது வியப்பு – இயக்குனரை அதற்குப் பாராட்டலாம். புதுமுக நாயகன், நாயகி அருமையாக செய்துள்ளார்கள், தங்களின் பாத்திரங்களாகவே நம் கண்ணிலும் மனத்திலும் வந்துப் போகிறார்கள் – அவர்களுக்கு நல்ல எதிர்க்காலம் தெரிகிறது, அவர்கள் இல்லையே படம் தோல்வியடைந்திருக்கும்.

சென்னை ரங்கநாதன் தெருவில் எவ்வளவோ நடக்கிறது, எவ்வளவோ நபர்கள் இங்கே வந்து வாழ்க்கையில் ஓரளவுக்கு முன்னேறியிருக்கிறார்கள் (அனைத்தும் நல்லப்படியாக நடக்கிறது என்று நான் சொல்லவேயில்லை) அவர்களை எல்லாம் பின்னுக்கு தள்ளிவிட்டு இயக்குனர் ஒரு கடையில் நடக்கும் தவறுகளை மட்டும் குறியாக காட்டுகிறாரே என்று நமக்கு படுவதை தவிர்க்க முடியவில்லை.

இயக்குனருக்கு வாழ்க்கையின் மீது ஏன் இவ்வளவு வெறுப்போ, அவநம்பிக்கையோ தெரியவில்லை. என்ன தான் கிராமத்தில் (கிராமங்கள் எல்லாம் இப்போது தனியாக ஒதுங்கி ஒன்றும் இல்லை) இருந்து முதல் வேளைக்கு வந்தாலும் எதுவுமே தெரியாமல் யாரும் வருவதில்லை, இன்றைய இளைஞர்கள் வேலைக்கு வரும் போதே அல்லது வந்து சில நாட்களிலேயே  அவர்களின் உரிமைகள் அவர்களுக்கு நன்றாக தெரியும். அவர்களை ஒரளவுக்கு நல்ல முறையில் கடைக்காரர்கள் நடத்தி, நல்ல சாப்பாடு கொடுக்கவில்லை என்றால் அவர்கள் வேலைவிட்டு வேறு வேலைக்குப் போய் கொண்டே இருப்பார்கள், அது தான் எதார்த்தம், உண்மையும் கூட. இதை எல்லாம் விட்டு இயக்குனர் ஏனோ எம்.ஜி.ஆரின் ”ஆயிரத்தில் ஒருவன்” காலத்து அடிமைகள் போல மிகைப்படுத்தி காட்டியுள்ளதை மனம் ஏற்க மறுக்கிறது. ஏனோ இயக்குனரின் பார்வையில், கதையில் வரும் எல்லா பாத்திரங்களும் (நாயகன், நாயகி அவர்களின் நண்பர்கள் இருவரைத் தவிர்த்து) கெட்டவர்களகவே இருக்கிறார்கள் – அது அண்ணாச்சி ஆகட்டும், மேல்பார்வையாளராகட்டும், உடன் வேலை செய்யும் பெண்ணை காதலிக்கும் நபராகட்டும், தெருவில் இருக்கும் ஆட்டோகாரர்களாட்டும், தங்கச்சியை வீட்டு வேலைக்கு வைத்திருக்கும் மாமியாகட்டும். நாயகன், நாயகி இவர்களுக்காகவே பார்த்து பார்த்து தேடி தேடி கெட்டவர்கள் மட்டுமே அதிகமாக வருகிறார்கள், விதியும் விளையாடிக் கொண்டே இருக்கிறது, புரியவில்லை. முடிவிலும் ஏனோ ஒரு பெரிய இழப்பு, இயக்குனர் சோகமாக மட்டுமே இருக்க வேண்டும் அப்போது தான் படம் வெற்றி பெரும் என்று கங்கணம் கட்டி கொண்டு எடுத்ததுப் போல் தோன்றுகிறது.  Over Dramatizationஐ முழுவதுமாக தவிர்த்திருந்தால் இந்தியா அளவில் ஒரிரு விருதுகள் படத்திற்கு கிடைத்திருக்கும்.

கடையில் வேலை செய்பவர்களை மோசமாக நடத்தப்படுவதையும், அரசாங்கத்தை ஏமாற்றுவதைப் பற்றியும் இவ்வளவு கீழ்தரமாக கடையின் உறுமையாளரான அண்ணாச்சியை சித்தரிக்கும் ஒரு படத்தை முழுவதும் எப்படி அவர்கள் கடையில் எடுக்கவிட்டார்கள் “சரவணா ஸ்டோர்ஸ்” மற்றும் ”சௌந்தரப்பாண்டியன் ஸ்டோர்ஸ்”  என்பது தான் எனக்கு ஆச்சர்யம்!

(Disclosure: I did happen to read  few days before the review of this film written by Mr.Charu Nivedita through a friend’s tweet)

ஆயிரத்தில் ஒருவன்

ஆயிரத்தில் ஒருவன் (ayirathil oruvan)

செல்வராகவன் இயக்கத்தில் படப்பிடிப்பிலேயே பல காலம் பேசப்பட்ட படம் இது – ஆயிரத்தில் ஒருவன். கார்தி, ரீமா சென், ஆண்ட்ரியா, பார்த்திபன்  ஆகியோர் நடித்துள்ளார்கள். சரித்திரமும் நவீனயுகமும் சேர்ந்த கலவை என்பதால் நடிப்பது கடினம், ஆனால் அனைவரும் பாத்திரம் அறிந்து அருமையாக செய்துள்ளார்கள். கவர்ச்சியாகவும், தைரியமாகவும், அந்தக்கால இளவரசி போலவும், கத்தி சண்டை, துப்பாக்கிப் சுடுதல் என்று படம் முழுவதும் வந்து தன் நடிப்பு திறமையை வெளிப்படுத்தி இருக்கிறார் ரீமா சென் – அவரை நிச்சயம் பாராட்ட வேண்டும். அவருக்கு ஒரு அருமையான வாய்ப்பு இந்த படம், அதை நன்றாக பயன்படுத்திக் கொண்டுள்ளார். உண்மையில் படத்தின் நாயகன் அவர் தான். கார்தி பாத்திரம் அறிந்து அடக்கி வாசித்திருக்கிறார், இயக்குனர் இன்னும் கொஞ்சம் அடக்கியிருந்தால் கதைக்கு மேலும் வலுக்கூட்டியிருக்கும்.

செல்வராகவன் மற்றும் அவரின் குழுவின் உழைப்பு ஒவ்வொரு காட்சியிலும், விவரத்திலும்  நன்றாக உணர முடிகிறது.  தமிழில் கடைசியாக இப்படியான ஒரு படம் (சரித்திரத்தையும் கற்பனையும் கலந்து) எப்போது வந்தது என்று எனக்கு நினைவு இல்லை. Computer Graphicsஐ நன்றாக பயன்படுத்தியுள்ளர்கள், இதற்கு மேல் சிறப்பாக செய்ய ஹாலிவுட் அளவு பணம் தேவை, அதனால் இது போதும்.

படத்தின் குறைகள் என்று பார்த்தால்  ரொம்ப இழுத்துவிட்டார்கள், இரண்டு படம் பார்த்த மாதிரி ஒரு உணர்வு. இடைவேளைக்கும் அடுத்த பகுதிக்கும் துளிக் கூட ஒட்டாதது கதையின் பலவீனம். செல்வராகவன் தான் பார்த்த மூன்று, நான்கு ஆங்கிலப் படங்களை (Gladiator, Return of Mummies) ஒரே தமிழ் படத்தில் காட்ட முயற்சி செய்துள்ளதுப் போல தோன்றுவதை தவிர்க்க முடியவில்லை – என்னை பொருத்தவரை இது தான் படத்தின் மிகப் பெரிய பலவீனம். இதை தவிர்த்திருந்தால் பலக்காலம் பேசப்படும் படமாக இது அமைந்திருக்கும்.

எனக்கு படத்தின் கதை பெருமளவு புரிந்தது என்று நினைக்கிறேன்,  என் மனைவிக்கு சுத்தமாகப் புரியவில்லை (எங்கள் இருவருக்கும் இதனால் படம் முடிந்தவுடம் வாக்குவாதம்),  தமிழ் ரசிகர்களுக்காக இதில் இன்னும் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் வசூலை அதிகரித்திருக்கும்.

ஆயிரத்தில் ஒருவன் – பார்க்கலாம், ஆனால் எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்திருந்தால் ஏன் தன் படத்தின் தலைப்பை இதற்கு வைத்தார்கள் என்று சிறிது வருந்திருப்பார்.

தமிழ் படம்

தமிழ் படம் (thamizh padam)

தமிழ் படம் இன்று பார்த்தேன். முழுப்படமும் உங்களை கண்டிப்பாக வயிறு குலுங்க சிரிக்க வைக்கும். தமிழில் போதுவாக தமிழ் சினிமைவை, அதுவும் பிரபல நடிகர்களை நையாண்டி(Spoof) செய்யும் படங்கள் மிக குறைவு, அதுவும் வெற்றி பெறுவது இல்லை, ஆனால் இந்தப் படம் வெற்றி என்று தான் தோன்றுகிறது. அந்த வகையில் ஒரு நல்ல முயற்சி. மேலும் சிறப்பாக, கதையில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்திருக்கலாம், ஆனால் நையாண்டி படம் தானே என்று விட்டுவிட்டார் போல இயக்குனர்.

நாயகன் சிவாவின் நண்பர்களாக எம்.எஸ்.பாஸ்கர், வெண்ணிறை ஆடை மூர்த்தி, மனோபாலா ஆகட்டும், பாட்டியாக பறவை முனியம்மாவாகட்டும் ஒவ்வொரு கதாப்பாத்திரத்துக்கும் நடிகர்கள் தேர்வு பிரமாதம் (நாயகியை தவிர). அதற்காகவே  இயக்குனர் அமுதம் அவர்களை பாராட்டலாம்.  ஒரே பாட்டில் நாயகன் பணக்காரர் ஆவதாகட்டும், முடிவில் வரும் நீதிமன்றக் காட்சியாகட்டும்,  சினிமாப்பட்டி கிராமத்தின் அறிமுகமாகட்டும், மிதிவண்டியை சுற்றியே பத்து வயதிலிருந்து பெரியவன் ஆவதாகட்டும், வில்லன்களை எதிர்க்கும் ஒவ்வொரு காட்சியாகட்டும் எல்லாமே அருமை.

நாயகன் சிவாவுக்கும், இயக்குனர் அமுதம் அவர்களுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது, அடுத்தப் படத்தையும் வித்தியாசமாக செய்தால்!

இனி இது சேரி இல்லை

இனி இது சேரி இல்லை

திரு.பத்ரி சேஷாத்ரி அவர்களின் வலைப்பூவில் படித்து விட்டு இந்த ஆண்டு சென்னை புத்தக கண்காட்சியில் வாங்கிய மற்றுமொரு புத்தகம் – “இனி இது சேரி இல்லை”. சென்னையில் சேரியாய் இருந்த ஒரு இடத்தை எப்படி சென்னை விலிங்டன் கார்பரேட் ஃபவுண்டேஷன் என்ற அமைப்பு சிறப்பாக மாற்றியமைத்தது என்பது தான் புத்தகம். நம் ஊரில் போதுவாக எப்போதுமே எதுவும் சரியாக செய்யவில்லை, ஏமாற்று வேலை என்பதைப் பற்றியே படித்து பழகிய நமக்கு இது ஒரு வித்தியாசமான புத்தகம் – எது நல்ல முறையில் தன்னார்வத்தில் வணிக நோக்கமின்றி நடைப்பெற்றது என்பதைப் பற்றி. வணிகரிதியாக அவ்வளவு வரவேற்பில்லாத இந்த மாதிரியான ஒரு தலைப்பை, தைரியமாக ஒருவித சமுக நலன் கருதி பதிப்பித்தற்கு நண்பர் திரு.பத்ரி அவர்களுக்கு தமிழ் வாசகர்கள் சார்பில் என் நன்றி.

சுத்தம், சுகாதாரம் மட்டுமில்லாமல் அரோக்கியம், வாழ்க்கை தரம், அடிப்படைக் கல்வி, சுயத் தொழில், குடிப்போதையில் இருந்து மீட்பு, முதியோர் கல்வி, சேமிப்பு – ஏமாற்று வட்டியிலிருந்து மீட்பு என்று பல வகையில் ஒரு ஒருங்கிணைந்த நடவடிக்கையாக இதை நூலின் ஆசிரியர் திரு.பைரவன் அவர்களும் ஃபவுண்டேஷனின் திரு. நாராயணன் அவர்களும் செய்துள்ளார்கள். மிகவும் பாராட்ட வேண்டிய முயற்சி, தொடர வேண்டிய முயற்சி.

புத்தகம் ஒரு செய்தி தொகுப்பு என்ற முறையிலேயே பெருவாரியான பகுதியில் செல்கிறது. இதனால் படிக்கும் போதுப் பல இடங்களில் பொதுவான வாசகர்களுக்கு (என்னையும் உட்பட) ஒரு தொய்வு எற்படுவது உண்மை. தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிவோர்களுக்கும், சம்பந்தப்பட்ட துறைகளில் உள்ள மாணவர்களுக்கும் இந்த புத்தகம் கண்டிப்பாக படித்து கற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று என்றால் மிகையல்ல.

Interviews for our School journal for SAARC Women Children year – 1991

இன்று தமிழ் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் ஐயா அவர்களைப் பார்த்தப் போது தான் அவரின் தூண்டுதலில் நாங்கள் பதினொன்றாம் வகுப்பில் எடுத்தப் பேட்டி பள்ளி இதழில் வந்தது நினைவிற்கு வந்தது. அதை தேடி எடுத்தேன்.

இப்போது தான் மத்திய அரசில் பெண்கள் இட ஒதுக்கீடு என்று பேசுகிறார்கள், ஆனால் சார்க் நாடுகள் 1991ம் ஆண்டே பெண் குழங்தைகள் ஆண்டாக அறிவித்திருந்தது. இதைப் பற்றி மக்கள் சமுதாயத்திற்காகப் பாடுபடும் நல்லோர்களின் கருத்தையறிய முற்பட்டோம். எங்கள் பள்ளி செயலாளர், முதல்வர், கவிஞர் பொன்னடியான், தாமரைத் திரு ஜெயா அருணாசலம், எழுத்தாளர் அனுராதா ரமணன் ஆகியப்பலரை நாங்கள் நேரில் சென்று பேட்டி எடுத்தோம். அத்தொகுப்பு அந்த ஆண்டு (1991) எங்கள் பள்ளியின் இதழில் (Voice of Vailankanni) வெளிவந்தது. இப்படி ஒரு வலுவான தலைப்பை கொடுத்து கவிஞர்களை, எழுத்தாளர்களை நாங்கள் பயப்படாமல் கேள்விகள் கேட்கவும், அதைத் தெளிவாக எழுதவும் வைத்தவர் ஆசிரியர் திரு.பெ.கி.பிரபாகரன் அவர்கள் தான். எங்களிடம் கொடுத்துவிட்டு அவரே எல்லாவற்றையும் செய்யவில்லை, பேட்டியெடுக்கும் போது எங்களை நம்பி தனியாக தான் விட்டார், நாங்கள் தான் கடைசிவரைக் கட்டுரையை எழுதி முடித்தோம் – இது எல்லாம் இப்போது நினைத்துப் பார்க்கையில் எவ்வளவு சிறந்த வாய்ப்பு, பயிற்சி என்று விளங்குகிறது. அத்தொகுப்பை சுமார் இருபது ஆண்டுகள் கழித்து உங்களுக்காக இப்போது வருடியில்(Scanner) வருடி இங்கே தந்துள்ளேன்.

Freedom for Women 1991 - Voice of Vailankanni School
(முழுக்கட்டுரையும் சுமார் பதினைந்துப் பக்கங்கள்)

Adobe Acrobat (PDF)ஆக தரமிறக்க இங்கே சொடுக்கவும்.