9 மார்ச் 2024 அன்று கலைஞர் உலகம் சென்று பார்த்தேன். மிக நன்றாக அமைத்திருக்கிறார்கள். மக்கள் வரிப் பணத்தில் இதைப் போன்றவற்றை (புரட்சித் தலைவி செல்வி ஜெ. ஜெ.வின் அருங்காட்சியகம் உட்பட) செய்ய வேண்டுமா என்று பலருக்கு மாற்றுக் கருத்து இருக்கலாம், ஆனால் நம் சென்னையில் இப்படி உலகத் தரத்தில், அமெரிக்க யூனிவர்சல் ஸ்டுடியோ போன்றவற்றை நினைவுபடுத்தும் வகையில் (சிறியதாக) வடிவமைத்து உருவாக்க முடியும் என்பது ஒரு சாதனை தான்.

நண்பரின் அழைப்பை ஏற்று, சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா மற்றும் கலைஞர் சமாதிகளுக்குக் கிழக்கில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் உலகம் என்கிற அருங்காட்சியகம் சென்றேன். கலைஞர் நினைவிடத்திற்குச் செல்ல நுழைவுச் சீட்டு எதுவும் தேவையில்லை, எப்போதும் போலக் கூட்டம் எல்லா நாட்களிலும் மாலை வேளைகளில் அலை மோதுகிறது. ஆனால், சென்ற மாதம் (26 பிப்ரவரி) மாண்புமிகு முதல்வர் திரு மு. க. ஸ்டாலின் திறந்துவைத்த இந்த புதிய அருங்காட்சியகத்தினுள் செல்ல இணையத்தளத்தில் இலவசமாக முன் பதிவு செய்து துலங்கல் குறியீட்டை (QR Code) செல்பேசியில் காட்டினால் மட்டுமே உள்ளே போக முடியும். இது நல்ல முறை என்றே தோன்றுகிறது. ஒரு நேரத்தில் குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே பார்வையாளர்களை உள்ளே அனுமதிப்பதால் நின்று நிதானமாகப் பார்க்க முடிகிறது, தள்ளு முள்ளு இல்லை, காட்சிப் பொருட்களுக்கும் சேதாரம் இல்லாமல் பார்த்துக் கொள்ள முடியும். இலவச நுழைவு என்பதால் எந்த விதப் பாகுபாடும் இருக்க வாய்ப்பில்லை – நமக்கும் இப்படியான அருங்காட்சியகங்களில் எப்படி அமைதியாக, ஒழுக்கமாக நடக்க வேண்டும் என்கிற பயிற்சி இதன் மூலம் வரலாம்.

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி

சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா சமாதி

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம்

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம்

குளிரூட்டப்பட்ட உள் அரங்கங்கள்

கலைஞர் உலகம் என்பது, தரைக்கு இரண்டு மாடி கீழே, முழுவதும் குளிரூட்டப்பட்ட உள் அரங்கங்கள். முதலில் நுழைந்தவுடன் கண்ணில்படுவது முன்னால் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் எழுத்துக்கள், சுவர்களில் பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு, இங்கிலாந்து ராணி, ஜாக்கி சான் போன்ற தலைவர்கள், பிரபலங்களோடு அவரின் புகைப்படங்கள், சுதந்திர தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகளின் போது கலைஞர் அங்கே இருந்த படங்கள் என்று இருக்கிறது. பல்வேறு வயதில் இருக்கும் அவரின் முழு உருவச் சிலைகளும் இருக்கிறது, அவற்றை உயிரோட்டமாகச் செய்திருக்கிறார்கள்.

கலைஞர் உலகம் தரைக்கு இரண்டு மாடி கீழே, முழுவதும் குளிரூட்டப்பட்ட உள் அரங்கங்கள்

கலைஞர் உலகம் தரைக்கு இரண்டு மாடி கீழே, முழுவதும் குளிரூட்டப்பட்ட உள் அரங்கங்கள்

திரு மு.கருணாநிதி அவர்களின் எழுத்துக்கள்

திரு மு.கருணாநிதி அவர்களின் எழுத்துக்கள்

பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்களோடு அவரின் புகைப்படங்கள்

பல்வேறு உள்நாட்டு வெளிநாட்டு தலைவர்கள், பிரபலங்களோடு அவரின் புகைப்படங்கள்

தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகளின் போது கலைஞர் அங்கே இருந்த படங்கள்

தமிழ்நாட்டின் முக்கிய நிகழ்வுகளின் போது கலைஞர் அங்கே இருந்த படங்கள்

அவரின் முழு உருவச் சிலைகள்

அவரின் முழு உருவச் சிலைகள்

திரையரங்குகள்

அடுத்து புது டெல்லி அக்ஷயர்தமில் பார்த்தது போன்ற வசதிகள், அதைவிடப் புதுமையாக இருந்தது. அக்ஷயர்தமில் ஸ்வாமி நாராயண் என்கிற அவதாரப் புருஷரின் வாழ்க்கை கதை எப்படி விதவிதமான வடிவில், அரங்கங்களில் சொல்லப்படுமோ அது போல இங்கே கலைஞர் அவர்களின் வரலாறு சொல்லப்படுகிறது. முதலில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் எப்படி முதல்வர் கொடியேற்றும் உரிமையைக் கலைஞர் போராடிப் பெற்றார் என்கிற முப்பரிமாணப் படிவில் அவரே பேசுவது போன்ற ஓர் அரங்கம்.

அடுத்து ஐ-நோக்ஸ் போன்ற (ஆனால் உயரம் குறைந்த) 180 கோண மிகப் பெரிய திரையில் முப்பது நிமிடங்களுக்குக் கலைஞரின் ஆரம்பக்காலப் பொதுநல, திரையுலக, எழுத்துலக, அரசியல் வரலாறுகள் சொல்லப்படுகிறது – குறிப்பாகத் தமிழ்நாட்டு அரசியலில் அவரின் இன்றியமையா பங்கு, இந்திய அரசியலில் பிரதமர்களைப் பல்வேறு தருணங்களில் தீர்மானிக்கும் கிங்-மேக்கராக எப்படி அவர் திகழ்ந்தார் என்று விரிகிறது – அவரின் தனிப்பட்ட குடும்ப விவரங்கள் எதுவும் இல்லை. அடுத்த அரங்கில் இரண்டு நிமிடங்கள் ஓடும் குறும்படம் சுவரிலும் தரையிலும் சேர்ந்த மாதிரி தெரிகிறது, இது வித்தியாசமாக இருந்தது.

முப்பரிமாணப் படிவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கொடியேற்ற வேண்டிய உரை

முப்பரிமாணப் படிவில் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையில் முதல்வர் கொடியேற்ற வேண்டிய உரை

இரண்டு நிமிடங்கள் ஓடும் குறும்படம் சுவரிலும் தரையிலும் சேர்ந்த மாதிரி தெரிகிறது

இரண்டு நிமிடங்கள் ஓடும் குறும்படம் சுவரிலும் தரையிலும் சேர்ந்த மாதிரி தெரிகிறது

முன்னால் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் நூல்கள் அவரின் குரலில்

முன்னால் முதல்வர் திரு மு.கருணாநிதி அவர்களின் நூல்கள் அவரின் குரலில்

 ஐ-நோக்ஸ் போன்ற 180 கோண மிகப் பெரிய திரை

ஐ-நோக்ஸ் போன்ற 180 கோண மிகப் பெரிய திரை

6-டி திரை

அடுத்தது, இது தான் இந்த அருங்காட்சியகத்தின் சிறப்பு, இதற்காகவே சிறுவர்கள் அதிகம் வருகிறார்கள் – அது திருவாரூரிலிருந்து கலைஞர் சென்னைக்கு வந்த அந்த முதல் இரயில் பயணத்தில் இருந்த பெட்டி போன்ற வடிவில் அமைக்கப்பட்டுள்ள அரங்கம் – இது ஓர் 6-டி திரை. அப்படியென்றால்?. இதைப் பார்க்க 3-டி திரைப்படங்களில் முப்பரிமாணக் காட்சிகளை நாம் பார்க்கக் கொடுக்கப்படும் கறுப்புக் கண்ணாடி போன்ற ஒன்றைக் கொடுக்கிறார்கள், ஒவ்வொன்றும் 15,000 ரூபாயாம் அதனால் குழந்தைகள் அதை உடைக்காமல் திரும்பக் கொடுக்கும்படி பெற்றோர்களை அங்கேயிருந்த ஊழியர்கள் வேண்டிக் கேட்டுக் கொண்டேயிருந்தார்கள். இந்த இரயில் பெட்டியில் அமர்ந்தவுடன், மொத்த மேடையே நகர்வது, மேலே எழுவது போன்று உணரும் வகையில் சிறப்பு மோட்டார்களை அமைத்திருக்கிறார்கள். அருவி வரும் ஒரு காட்சியில் நம் மேலே தண்ணீர் தெளிக்கப்படுகிறது. கோவை கல்லூரிக்கு உள்ளே செல்லும் காட்சியில் அங்கேயிருக்கும் பூக்களிலிருந்துவரும் வாசம் நம் நாசிக்கு எட்டுகிறது. இதை தவிர ஸ்டீரியோ ஒலி. ஆக மொத்தம் ஆறு வகைப் பரிமாணங்கள் இந்த அரங்கில். இங்கே ஓடும் காட்சி சுமார் பதினைந்து நிமிடங்கள், அந்த இரயில் பயணத்தில் தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுக்கு நாம் செல்கிறோம், ஒவ்வொரு நகரிலும் கலைஞர் செய்த சாதனைகள் சொல்லப்படுகிறது. பார்வையாளர்களைக் கட்டிப்போடும் வகையில் சொல்லப்பட்டுள்ள கதை அனுபவம் இது.

திருவாரூரிலிருந்து கலைஞர் சென்னைக்கு வந்த அந்த முதல் இரயில் பயணத்தில் இருந்த பெட்டி மாதிரி

திருவாரூரிலிருந்து கலைஞர் சென்னைக்கு வந்த அந்த முதல் இரயில் பயணத்தில் இருந்த பெட்டி மாதிரி

6-டி திரை - 3டி கண்ணாடி, நகரும் உணர்வு, ஒலி, தண்ணீர், வாசனை

6-டி திரை – 3டி கண்ணாடி, நகரும் உணர்வு, ஒலி, தண்ணீர், வாசனை

இவற்றைத் தவிரக் கலைஞரோடு தம்படம் (செல்பி) எடுத்துக் கொள்ளும் வகையில் ஓர் அறை – இதில் நான் எடுத்துக் கொண்டப்படம் நாளை எனது வாட்ஸ்-ஆப் எண்ணுக்கு வரும் என்று சொன்னார்கள் இரண்டு வாரங்களுக்குப் பிறகு இந்தச் செவ்வாய்க் கிழமை (19 மார்ச் 2024) தான் எனக்குக் குறுஞ்செய்தியாக வந்தது. இது மிகுதிப்படுத்திய மெய்ம்மை (ஆக்மென்டட் ரியாலிட்டி) மென்பொருள் கொண்டு செய்யப்படுகிறது என்பதால் தொகுப்பாகக் கணினி செய்து அனுப்புகிறது என்று நினைக்கிறேன். இதைப் போலவே கலைஞரோடு உரையாடும்/பேட்டியெடுக்கும் அறையும் இருந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எடுத்த படம் இந்தச் செவ்வாய்க் கிழமை (19 மார்ச் 2024) தான் எனக்குக் குறுஞ்செய்தியாக வந்தது.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் எடுத்த படம் இந்தச் செவ்வாய்க் கிழமை (19 மார்ச் 2024) தான் எனக்குக் குறுஞ்செய்தியாக வந்தது.

ஒரு மணி நேரம் தேவை

நாங்கள் அருங்காட்சியகத்தின் உள்ளே சென்றது மாலை 3:30 மணிக்கு, எல்லாவற்றையும் பார்த்துவிட்டு மீண்டும் நினைவிடத்திற்கு வந்தது சுமார் ஐந்து மணி, ஒன்றரை மணி நேரம் ஆனது, நிச்சயம் ஒரு மணி நேரமாவது தேவையாக இருக்கும். இணையத்தில் உங்களுக்கு ஒதுக்கிய நேரத்தில் தான் உள்ளே அனுமதிக்கப் படுவீர்கள், ஓர் ஐந்து நிமிடங்கள் முன்னர் சென்றால் போதும், அருகில் நிற்க நிழல் எதுவும் பெரியதாகக் கிடையாது, அதனால் வயதானவர்கள் குடைக் கொண்டு போகலாம், அல்லது நினைவிடத்திலேயே நின்றுவிட்டு வரலாம். நாங்கள் போன போது செல்பேசி, பை என்று எடுத்துச் செல்ல எந்தக் கட்டுப்பாடும் இல்லை. அருங்காட்சியகத்தின் ஊழியர்களே வயதானவர்கள் கேட்டுக் கொண்டால் படமெடுக்கவும் உதவுகிறார்கள், பாராட்டுக்கள்.

இவ்வளவு செலவு செய்து, பார்த்துப் பார்த்து அமைத்த இந்த அருங்காட்சியகத்தை பொது மக்கள் நல்ல முறையில் வைத்துக் கொள்ள வேண்டும், அரசும் இதைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறேன். நேரமிருந்தால் முன்பதிவு செய்து இப்போதே போய் பார்த்துவிட்டு வரவும் – ஒரு நல்ல அனுபவத்தைத் தவறவிட வேண்டாம்.

Categorized in:

Tagged in:

,