கடந்த ஐந்தாறு ஆண்டுகளாகவே பல கல்யாண வாழையிலை சாப்பாடு விருந்துகளில் எல்லாமே அவசரம் தான். இருபது, முப்பது பண்டங்களை வேக வேகமாகப் பரிமாறி நம்மை திணறடித்து, உணவை வீணடிக்கிறார்கள்.

நான் போகும் கல்யாணங்களில் ஒப்பந்தச் சமையல்காரர்கள் அவர்களுக்கு வேலை சீக்கிரம் முடிய வேண்டும் என்பதால் இலையில் முதலில் போட்ட பழங்களை, இனிப்பைச் சாப்பிடும் முன்பே, சப்பாத்தியும் குறுமாவை வைக்கிறார்கள் அதோடு கட்லேட்டும் தயிர்வடையும், அதை என்னவென்று பார்க்கும் போதே ஒயிட் ரைஸ் (சோறு என்று சொன்னால் தமிழ்நாட்டில் அதென்ன என்று கேட்பார்கள்) மற்றும் சாம்பார் வந்து விழுந்திருக்கும், சரி கட்லேட்டுக்கு பின்னர் வரலாம் என்று சாம்பார் சாதம் சாப்பிட்டால், அதன் பாதியில் இருக்கும் போது மீண்டும் ஒயிட் ரைஸ் மற்றும் ரசம் ஊற்றப்படும், “ஒயிட் ரைஸ் ரசத்துக்கு மட்டும், பகாலாபாத் வருகிறது” என்று எச்சரிக்கையோடு, இலையின் இடது சாம்பார் சோற்றுக்கு, வலது ரச சோற்றுக்கு என்று இட ஒதுக்கீடு செய்து அவசர அவசரமாக விழுங்கிக் கொண்டிருக்கும் போதே, பாயசம் (திரு கண்ணன் அமுது) இலையின் கோடியில் அல்லது காகிதக் கோப்பையில் வந்திருக்கும், அதோடு ஏதோ புது வடிவில் வண்ணமயமான ஒரு பண்டமும் விழுந்திருக்கும். அதென்ன இனிப்பா என்று ஆராயத் தொடங்கியிருக்கும் போதே, ரச சோற்றுக்கு மேலேயே தயிர்ச் சாதம் (மன்னிக்கவும் பகாலாபாத்) போடப்பட்டிருக்கும். அப்பாடா எல்லாம் வந்துவிட்டது, இனி நம்மை நிம்மதியாகச் சாப்பிட விடுவார்கள் என்று எண்ணி சாம்பார் சோற்றை முடித்தால், நம் பின்னே அடுத்த பந்திக்கு ஆட்கள் நிற்பார்கள், அதோடு நமக்குப் பக்கத்தில் சாப்பிட்டவர் எப்பொழுதோ எழுந்து சென்றதால் அவர் சாப்பிட்ட இலையைத் துப்புரவுப் பணியாளர் எடுக்கத் தொடங்கியிருப்பார். இதற்கு மேல் அங்கே அமர்ந்திருந்தால் மரியாதையில்லை என்று நாமும் எழுந்து, வெளியில் இருக்கும் பீடா ஸ்டாலுக்கு வந்து பீடா வாங்கி வாயில் போட்டுக் கொண்டு வெளிவர வேண்டியது தான்.

இப்போதெல்லாம் நான் கவனமாக வாயில் இருக்கும் உணவை முழுவதும் கடித்து, மசித்துத் தான் விழுங்குகிறேன். வேகமாகச் சாப்பிட்டு, அப்படியே விழுங்கினால் வயிறு உபாதைகளும், மலப் பிரச்சனைகளும் வரும் என்பதால் மருத்துவர் அறிவுரையின் படி இது. இருந்தும் நான் ஒன்றும் ஆமை வேகத்தில் சாப்பிடுபவன் அல்ல. இப்படி மற்றவர்கள் என்னைவிட வேகமாகச் சாப்பிடுவதால் எனக்கு இதெல்லாம் கண்ணில் படுகிறதா? உங்கள் அனுபவம் என்ன?

#tamilweddingfood #marriagefood #eatslowly

Tagged in: