முதலில் மெட்ராஸ் பேப்பரில் நான் சென்ற ஓராண்டாக எழுதிய ஐம்பத்திரண்டு கட்டுரைகளையும் தொகுத்து, வரிசைப்படுத்தி, சேர்த்து ஒரே கோப்பாக்கி, அதில் சொல்லியுள்ள செயலிகள், கருவிகள் மாறியிருப்பின் அவற்றை டிசம்பர் 2023 நிலவரத்திற்குப் புதுப்பித்து முடித்தேன். அதைத் தொடர்ந்து உதவி ஆசிரியர் எழுத்துப் பிழைகளை நீக்கிக் கொடுத்து, பின் டைப்செட் ஆசாமி அதை அச்சுக்குத் தயார் செய்து, அவர் கொடுத்த ப்ரூஃப்களை இரண்டு மூன்று முறை நான் சரி பார்த்து, நிறைவாக அச்சாகி தயாராக இருக்கிறது, எனது முதல் தமிழ் நூல் ‘நுட்பம்’.

இப்படி மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்த போது, நானே சில தொழில்நுட்ப விசயங்களை இன்னும் ஆழமாகப் புரிந்து கொண்டேன். நாம் வெறுமனே படிப்பதை விட, படித்ததை அடுத்தவருக்கு சொல்லிக் கொடுக்கும் போது மேலும் கற்றுக்கொள்வோம் என்பார்களே அதுபோல. மொத்தமாகப் புத்தக வடிவில் படிக்கும் போது நன்றாகவே எழுதியிருக்கிறேன் என்று தோன்றியது, பெருமையாகவும், வாய்ப்புக்கு நன்றியுள்ளவனாகவும் உணர்ந்தேன்.

இந்தப் புத்தகம் சிறப்பாக வந்துள்ளதற்குக் காரணம் ஆசிரியர் பா.ரா. அவர்களே. என்னாலும் அதுவும் தமிழில் 250க்கு மேல் பக்கங்கள் அளவு கட்டுரைகளை (நூலை) எழுத முடியும் என்று எப்படி அவர் நம்பினார் என்று இன்றுவரை தெரியவில்லை – அதுவும் நான் அவரின் எழுத்துப் பயிற்சி மாணவனும் இல்லை. அவருக்கும் மெட்ராஸ் பேப்பர் குழுவுக்கும், ஜீரோ டிகிரி பதிப்பாளர்களுக்கும் எனது நன்றி.

நான் கட்டாயம் நன்றி சொல்ல வேண்டியது எனது முதல் வகுப்பு பள்ளி தமிழ் ஆசிரியை திருமதி அலமேலு அவர்களுக்கும், நான் சி.பி.எஸ்.சி.இல் இரண்டாம் மொழியாகத் தமிழைப் படித்தாலும் தாய் மொழியின் மேல் ஆர்வம் வர, அதை ரசிக்கச் சொல்லிக்கொடுத்த எனது மதிப்பிற்குரிய தமிழ் ஆசிரியர், புலவர், எழுத்தாளர் திரு பெ. கி. பிரபாகரன் அவர்களுக்கும்.

புத்தகத்தை வாங்க ஜீரோ டிகிரி இணைய முகவரியை அல்லது அமேசான் தளத்தைத் தொடர்பு கொள்ளவும். 2024ஆம் ஆண்டு, 47ஆவது சென்னை புத்தகக் காட்சியிலும் ஜீரோ டிகிரி கடையில் (எண் 598 C)  கிடைக்கும். கிண்டில் பதிப்பை அதன் பிறகு செய்யத் திட்டம்.

புத்தகத்தைப் பற்றிய குறிப்பு

செல்பேசி, கணினி, இவை இரண்டும் இல்லாத வாழ்க்கை இல்லை என்றாகிவிட்டது. அன்றாடப் பயன்பாட்டில் இந்த இரண்டுமே எதிர்பாராத சிக்கல்களைத் தரவல்லவை. தவிர இரு துறைகளுமே ஒவ்வொரு நாளும் புதுப்பிறவி எடுப்பவை. அவை புதுப்பிக்கப்படும் போது நாமும் நம்மைப் புதுப்பித்துக் கொள்ளத்தான் வேண்டியிருக்கிறது.

இந்தப் புத்தகம், இந்த இரண்டு எளிய கருவிகளை, அதில் இருக்கும் செயலிகளை – உதாரணமாக வாட்ஸ்-அப், கூகுள் டாக்ஸ், சாட்-ஜி.பி.டி. போன்றவற்றைப் பயன்படுத்துவோருக்கு உதவும் நுணுக்கமான தகவல்களால் ஆனது. இதனைக் கொண்டு எந்த வல்லுநரின் உதவியும் இன்றி யார் வேண்டுமானாலும் தமது செல்பேசியையும் கணினியையும் திறமையாகப் பயன்படுத்தலாம். பிரச்சனை வரும்போது பதறாமல் சரி செய்யலாம். ஒரு வகையில் இது ஒரு தொழில்நுட்பக் கையேடு. இன்னொரு பார்வையில் இக்காலத்துக்கான ‘வேதம்’.

மெட்ராஸ் பேப்பர் இணைய வார இதழில் தொடராக வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு இந்நூல்.

நூலாசிரியர் தி.ந.ச.வெங்கடரங்கன், அடிப்படையில் ஒரு மென்பொருள் வல்லுநர். தொடர் தொழில்முனைவர், மற்றும் தலைமை நிர்வாகிகளின் பயிற்சியாளர். 1999-ஆம் ஆண்டிலிருந்து மைக்ரோசாப்ட் பிராந்திய இயக்குநர் என்கிற கவுரவப் பதவியிலும், உலகளாவிய மின்-நுட்ப அமைப்பான IEEE-இன் மூத்த உறுப்பினராகவும் உள்ளார்.
Nutpam by T.N.C.Venkatarangan published by Zero Degree Publishing, Chennai

புத்தகத்தைப் பற்றிய ஆசிரியர் திரு பா. ராகவன் அவர்களின் அறிமுக உரை:

நுட்பம்.

மெட்ராஸ் பேப்பரில் இதனை முதலில் ஒரு கேடகரி தலைப்பாகத்தான் வைத்தேன். எந்த நுட்பமும் எளியோருக்கானதே என்கிற என் நிலைபாட்டிலிருந்து சற்றும் விலகாமல் வெங்கட் இந்தப் பகுதியில் எழுத ஆரம்பித்த சில வாரங்களிலேயே இந்தத் தலைப்பு அவரது கட்டுரைகளின் அடையாளமாகிப் போனது.

மொபைல் போனும் கம்ப்யூட்டரும்தான் சப்ஜெக்ட். இதில் கம்ப்யூட்டரை அறியாத சிலர் இருக்கலாம். ஆனால் மொபைல் இல்லாதவர்கள் யாருமில்லை என்ற நிலை வந்துவிட்டது. வெங்கட் ஓர் உயர் ரகத் (ஆம். ரக.) தொழில்நுட்ப தாதா. இந்த இரு கருவிகள் சம்பந்தமாக அவர் அறியாதது அநேகமாக ஏதுமில்லை என்று நினைக்கிறேன்.

ஆனால் அவர் இது மட்டுமல்ல. சார்லஸ் பேபேஜ் காலம் தொடங்கி இன்றைய ஏஐ காலம் வரை நுட்ப உலகில் நிகத்தப்பட்டு வரும் ஒவ்வொரு புதிய சாகசத்தையும் எடுத்து வைத்துக்கொண்டு அக்கு வேறு ஆணி வேறாக அலசித் தெளியும் இயல்புடையவர். உலகப் புகழ்பெற்ற மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிராந்திய இயக்குநர் என்னும் கௌரவப் பதவியில் இருபத்தைந்தாண்டு காலமாக உள்ளவர். மென்பொருள் வல்லுநர்.

அவரைத் தமிழில் எழுத வைக்க வேண்டும் என்று பத்து, பதினைந்தாண்டுகளுக்கு முன்பிருந்தே எண்ணிக்கொண்டிருந்தேன். மெட்ராஸ் பேப்பர் தொடங்கிய பின்புதான் அது சாத்தியமானது. இயல்பிலேயே தமிழ்க் கணிமை ஆர்வலர் என்பதால் பல்லை உடைக்கும் பல கடினமான பிரயோகங்களுக்கு மிக அழகிய தமிழ்ச் சொற்களை அவரால் எடுத்தாளவும் உருவாக்கவும் முடிந்திருக்கிறது என்பது இந்நூலின் மிக முக்கியமான அம்சம். இந்நூலின் ஒரு சொல் கூட உங்களுக்குப் புரியாமல் போகாது.

கம்ப்யூட்டர் குறித்தும் மொபைல் போன் குறித்தும் ஒன்றுமே தெரியாதவர்கள் அவற்றைக் கையாளும்போது எதிர்கொள்ள நேரிடும் சிக்கல் என்னவானாலும், உடனே கடைக்குத் தூக்கிக்கொண்டு ஓடாமல் அவரவரே பிரச்னையைப் புரிந்துகொண்டு ஆகக் கூடியவரை தமக்குத்தாமே சரி செய்துகொள்ள இந்தப் புத்தகம் நிச்சயம் உதவும்.

தமிழில் வெங்கடரங்கனுக்கு இது முதல் நூல். அடுத்த வருடம் அவரே நினைத்துப் பார்த்திருக்க வாய்ப்பில்லாத ஒரு விவகாரம் பிடித்த சப்ஜெக்டில் அவரைக் கொண்டு தள்ள நினைத்திருக்கிறேன். பார்ப்போம். எம்பெருமான் சித்தம்.

திரு. த. உதயசந்திரன், இ. அ. ப.

இன்று (1 மார்ச் 2024), தமிழக அரசின் தலைமைச் செயலகத்தில் நிதித் துறையின் மூத்த செயலரும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தின் தலைவருமான திரு த. உதயசந்திரன், இ. அ. ப. அவர்களைச் சந்தித்து எனது நுட்பம் நூலை அவருக்கு அளித்தேன். அவரே ஓர் எழுத்தாளர் என்பதால் மிகுந்த மகிழ்ச்சியோடு நூலைப் பெற்றுக் கொண்டார். அவர் படித்தவுடன் அவரின் கருத்தை அறிய ஆவலாக இருக்கிறேன்.

Presenting my book Nutpam to Mr T Udhayachandran, IAS

Presenting my book Nutpam to Mr T Udhayachandran, IAS

திரு. அருண் மகிழ்நன், சிங்கப்பூர்

சில வாரங்களுக்கு (8 பிப்ரவரி 2024) முன்பு, எனது நண்பரும், நலன் விரும்பியுமான சிங்கப்பூரின் திரு. அருண் மகிழ்நனைச் சந்தித்து, அவருக்கு எனது “நுட்பம்” புத்தகத்தின் பிரதியை வழங்கியதில் நான் பெருமை கொள்கிறேன்.

திரு. அருண், பல்துறை வித்தகர். தற்போது அவர் சிங்கப்பூர் பொதுத் தொடர்புத் துறைக் கழகம், லீ குவான் யூ பொதுக்கொள்கை பள்ளியின் கொள்கை ஆய்வுகள் நிறுவனத்தின் சிறப்பு ஆய்வு ஆலோசகர். அதோடு சிங்கப்பூர் தமிழ்க் கலாச்சார மையத்தின் தலைவர் என்பதால், இந்தச் சந்திப்பு எனக்கு மிக மகிழ்ச்சியளிப்பதாக இருந்தது. அவருக்கு என் நன்றிகள்.

Mr Arun Mahizhnan, Special Research Advisor, Institute of Policy Studies, Lee Kuan Yew School of Public Policy, National University of Singapore; Chief Executive, Centre for Singapore Tamil Culture.

Mr Arun Mahizhnan: Special Research Advisor, Institute of Policy Studies, Lee Kuan Yew School of Public Policy, National University of Singapore; Chief Executive, Centre for Singapore Tamil Culture.

திரு. சுரேஷ் சம்பந்தம், சென்னை

நடந்த கணித்தமிழ் 2024 மாநாட்டில் (பிப்ரவரி 2024), கிஸ்ஃபுலோ மென்பொருள் நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அதிகாரியும் எனது நண்பருமான திரு சுரேஷ் சம்பந்தம் அவர்களிடம் நுட்பம் புத்தகத்தை வழங்கியதில் எனக்கு மிக மகிழ்ச்சி. அவரே ஓர் எழுத்தாளரும் கூட, பல ஆண்டுகளாக ஜூனியர் விகடனில் “கனவு” என்ற தலைப்பில் தமிழ்நாட்டில் இருக்கும் பல்வேறு தொழில் வாய்ப்புகளை அலசி, ஆராய்ந்து எழுதி வருகிறார். நன்றி திரு சுரேஷ்.

Mr Suresh Sambandam, Founder & CEO of Kissflow

Mr Suresh Sambandam, Founder & CEO of Kissflow

சிங்கப்பூர் தேசிய நூலக இயக்குநர் திரு அழகிய பாண்டியன்

பல ஆயிரம் கிலோ மீட்டர் பறக்கும் எனது நுட்பம் புத்தகம்!

சென்னை வந்திருக்கும் எனது நண்பரும் சிங்கப்பூர் தேசிய நூலக இயக்குநரும் ஆன திரு அழகிய பாண்டியன் அவர்களை இன்று காலை காப்பிக்குச் சந்திக்கச் சென்ற போது அவர் கையில் எனது நுட்பம் புத்தகம். சிங்கப்பூரிலிருந்து வந்து போகும் பயணத்தில் அவரின் வாசிப்புக்காகக் கொண்டு வந்திருந்தார். கையில் வைத்திருந்தது மட்டுமில்லாமல், புத்தகத்தைப் படித்து, பல பகுதிகளில் அவருக்குப் பிடித்ததை என்னுடன் பகிர்ந்த போது, எனக்குப் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருந்தது. அவருக்கு என் மனமார்ந்த நன்றி.

அவர் குறிப்பிட்டுச் சொன்ன சில கட்டுரைகள்: கூகுள் தேடுபொறியில் தெரியாத விசயங்கள், புளூடூத் இயர்போன் எப்படித் தேர்வு செய்வது, மற்றும் வைஃபை. அவர் ரசித்த கட்டுரைகளில் அங்கங்கே வரும் வேடிக்கையான சில வரிகளையும் சுட்டிக் காட்டினார், பக்கங்களில் அவற்றைக் குறிப்பிட்டும் இருந்தார். அதோடு நூலின் ஒவ்வொரு கட்டுரையின் தலைப்புகளை மிகவும் ரசித்தாக சொன்னார் – அதற்கு முழு நன்றியும் மெட்ராஸ் பேப்பர் ஆசிரியர் திரு பா. ரா. அவருக்கும், துணை ஆசிரியர்களுக்கும் தான் சேரும்.

திரு. சிவா பிள்ளை, இலண்டன்

இன்று (14 ஜனவரி 2024), எனது அருமை நண்பரான லண்டனில் வாழும் திரு. சிவா பிள்ளை அவர்களிடம் எனது ‘நுட்பம்’ எனும் நூலை வழங்கியபோது எடுத்த படத்தைப் பகிர்ந்துள்ளேன்.

சுமார் இருபத்தைந்து வருடங்கள் முன் (1998ல்) நடந்த எனது முதல் வெளிநாட்டுப் பயணம் லண்டனுக்கு அமைந்தது. அப்போது, கோல்டுஸ்மித் கல்லூரியில் பேராசிரியராக இருந்த சிவா அவர்கள், கணினி ஆராய்ச்சிக் கூடத்தில் விரிவுரையாளராகவும் பணிபுரிந்து கொண்டிருந்தார். அங்கே, அவர் ஆண்டுதோறும் பல நூறு மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் விண்டோஸ் கணினியையும், மைக்ரோசாப்ட் ஆபீஸ்ஸையும் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைக் கற்பித்தவர். மறைந்த மாண்புமிகு இங்கிலாந்து ராணியின் விருது பெற்றவர்.

அவ்வாறான வல்லுநர் சிவா அவர்களுக்கு இன்று எனது செல்பேசியும், கணினியும் சம்பந்தப்பட்ட ‘நுட்பம்’ நூலை வழங்கியது எனக்குப் பெருமையும், மகிழ்ச்சியும் அளிக்கிறது.

நண்பர் இலண்டன் திரு சிவா பிள்ளை

நண்பர் இலண்டன் திரு சிவா பிள்ளை

இப்படியாகச் சுமார் ஒன்பதாயிரம் கிலோ மீட்டர் (சென்னை-சிங்கப்பூர்-சென்னை-சிங்கப்பூர்) பறக்கிறது நுட்பம் புத்தகம்!

சிங்கப்பூர் திரு அழகிய பாண்டியன்

சிங்கப்பூர் திரு அழகிய பாண்டியன்

புத்தகத்தைப் பற்றி திரு அழகிய பாண்டியனின் 20 பிப்ரவரி 2024 ஃபேஸ்புக் பதிவிலிருந்து:

தேசிய நூலக வாரியத்தில் இணைந்தபிறகுதான் வாசிப்பின் மகிமையையும் அதன் முக்கியத்துவத்தையும் முழுவதுமாக உணரத் தொடங்கினேன். புனைவுகளையே அதிகம் விரும்பி வாசித்தாலும் கட்டுரைத் தொகுப்புகளையும் அவ்வப்போது வாசித்து மகிழ்ந்திருக்கிறேன்.

இதுவரை நான் வாசித்த கட்டுரைத் தொகுப்புகளில் “நுட்பம்” தனித்து நிற்கிறது. தொழில்நுட்ப விஷயங்களைப் பழகிப் புரிந்துகொள்வது வேறு. அதனை மற்றவர்கள் எளி​தில் புரிந்துகொள்ளுமாறு எடுத்துக்கூறுவது வேறு. அதனையும் போரடிக்காமல், எளிமையாகவும் சவாரசியமான முறையிலும் எடுத்துக்கூறுவது வேறு. அதற்குத் தனித்திறமை வேண்டும். அந்தத் திறமையைத்தான் இந்த நூலில் மிக ‘நுட்ப’மாக வெளியிட்டிருக்கிறார் வெங்கட் 😀

சில கட்டுரைத் தலைப்பு​களே புருவங்களை உயர்த்த வைக்கின்றன. உதாரணத்திற்கு, எல்லாம் ‘சிம்’ மயம், wife-இனும் முக்கியம் wifi, செயலிகள் என்னும் செயல் புலிகள், எங்கெங்கு காணினும் போலிகளடா, சிங்கிளாக வந்த சிங்கம் போன்றவை.

நான் தகவல் தொழில்நுட்பத்தில் பட்டம் பெற்றிருந்தாலும், தகவல் தொழில்நுட்பம் என்னை அச்சுறுத்தாது என்றாலும், ஒவ்வொரு கட்டுரையி​லும் எனக்குத் தெரியாத பல விஷயங்கள் இடம்பெற்றிருப்பது ஆச்சரியத்தைத் தந்தது.

உதாரணத்திற்கு, டென்மார்க்கின் பத்தாம் நூற்றாண்டு மன்னரின் பெயர் புளூடூத். அவரது நினைவாகத்தான் Bluetooth தொழில்நுட்பத்திற்கு அந்தப் பெயர் சூட்டப்பட்டது என்ற தகவல்.

கட்டுரைகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமி​​ல்லை. விமானப் பயணத்தில் ஒருமுறை இயர்போனைத் தொலைத்துவிட்டு அதைப்பற்றி பணிப்பெண்ணிடம் விசாரித்தபோது, “அவனவன் பெண்டாட்டியையே விமானத்தில் விட்டுவிட்டு வந்து தேடுகிறான். கேவலம், ஒரு இயர்போன் சார்ஜர் டட்பாவை உங்களுக்குத் தேடிக் கொடுக்கணுமா,” என்பது போல அவர் ஒரு பார்வை பார்த்ததாக ஆசிரியர் குறிப்பிடம் இடம்.

கூகளில் தேடுவது எப்படி? என்ற கட்டுரை என்னை வியப்பிலும் வெட்கத்திலும் ஆழ்த்தியது. இத்தனை ஆண்டுகளாக கூகள் தேடலை நான் தொடக்கப்பள்ளி மாணவன் போல் கையாண்டிருக்கிறேன் என்பதைப் புரிய வைத்த கட்டுரை அது. இப்படி ஒவ்வொரு கட்டுரையு​ம் சுவாரசியத்தை அள்ளித் தெளிக்கிறது.

மெட்ராஸ் பேப்ப​ர் இணைய​ வார இதழில் இதனைத் தொடராக வெளியிட ஊக்கமளித்த ஆசிரியர் பா ராகவனுக்கும், 52 வாரங்கள் பல தலைப்புகளைத் தேடி, சுவைபட எழுதியிருக்கும் நண்பர் வெங்கடரங்கனுக்கும் என் வாழ்த்துகள்.

Nutpam by T.N.C.Venkatarangan published by Zero Degree Publishing, Chennai

Categorized in:

Tagged in:

,