நமக்கு முன்னர் “Prompt Engineering” (பிராம்ப்ட் இன்ஜினியரிங்) என்பதைத் தமிழில் மற்றவர்கள் எப்படிச் சொல்லியிருக்கிறார்கள் என்று தேடினேன். ஏன் தேடினேன் என்று ஆகி விட்டது. இந்த நிலை புதிது இல்லை என்றாலும் உண்மையிலேயே மனது வலிக்கிறது.

“தமிழில் Prompt Engineering”, “Prompt Engineering in Tamil” என்று தேடினால் கூகுள் பல ஆயிரம் பதில்களைத் தருகிறது. மகிழ்ச்சியாகச் சென்று ஒவ்வொன்றாகப் பார்த்தால் தான் பிரச்சனையே ஆரம்பிக்கிறது. பல ஆங்கிலப் பக்கங்களைக் கூகுள் தானாகவே “உடனடி பொறியியல்” அதாவது Instant Engineering என்கிற பொருளில் விடையாகக் கொடுக்கிறது. பல நூறு யூட்யூப் காணொலிகள் தமிழில் அல்லது in Tamil என்று தலைப்பிட்டு, தமிழில் தான் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் முழு உரையிலும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் என்கிறார்களே தவிரத் தப்பித்தவறிக் கூட செயற்கை நுண்ணறிவு என்று சொல்ல மாட்டேன் என்கிறார்கள், கம்ப்யூட்டர் என்கிறார்களே தவிரக் கணினி என்று சுட்டாலும் வருவதில்லை. வழக்கில் இருக்கும் செல்பேசி, கைப்பேசி, கணினி, கட்டளை, திரை, வரி, எழுத்து இந்த வார்த்தைகளுக்குக் கூட ஆங்கிலம் வேண்டுமா? அவர்களின் பேச்சில் ஆங்கில வார்த்தைகளை இணைக்க மட்டுமே தமிழ் வினைச் சொற்கள் வருகிறது. தமிழ் வழிக் கற்பவர்கள், பாவம், எப்படி இதையெல்லாம் புரிந்து கொள்வார்கள்? ஆங்கில வழியிலேயே முழுவதும் கற்ற எனக்கே, சில கடினமான விஷயங்களை நல்ல தமிழில் படித்தால் உடனடியாகப் புரிந்துவிடுகிறது – தாய் மொழியில் உள்வாங்கினால் மட்டுமே அடையக்கூடிய ஒரு பரவசம் இந்த உணர்வு.

YouTube videos explaining Prompt Engineering in Tamil

YouTube videos explaining Prompt Engineering in Tamil

இங்கே கொடுத்துள்ள காட்சிகளைப் பாருங்கள். ஒருவர், புதிய செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களைத் திறமையாக விளக்குகிறார், ஆனால் தங்கலிஷ் என்றே கணினிக்கும் இயற்றறிவுக்கும் கட்டளை இடுகிறார், விடையும் தங்கலிஷில் வரும்படி நிரலை எழுதியுள்ளார் – அவர் தங்கலிஷ் என்று சொல்லுவது ரோமன் வடிவில் தமிழை எழுதுவதை – படித்துப் பாருங்கள். மற்றவர்களோ அதிக ஆங்கிலக் கலப்பில் தமிழில் பேசுகிறார்கள், எதற்கு வம்பு என்று திரையில் எல்லாமே ஆங்கிலத்தில் எழுதிவிடுகிறார்கள். அங்கங்கே ஆங்கில வார்த்தைகள் வந்தால் பரவாயில்லை, இங்கேயிருக்கும் கணினிப் பொறியாளர்கள் எல்லோரும் ஆங்கில வாடிக்கையாளர்களுக்கு அல்லது ஆங்கில மொழியில் மென்பொருட்களை உருவாக்குவதால் இது தவிர்க்க முடியாது, ஆங்கிலப் புரிதல் வருமானத்திற்கு அவசியம் என்பதையெல்லாம் நான் மறுக்கவில்லை. தொழில்நுட்பத்தைப் பற்றிப் பேசும்போது எனக்கும் நிறைய ஆங்கில வார்த்தைகள் வருவது நடைமுறை இயல்பு, இல்லையென்று சொல்லவில்லை, ஆனாலும் நான் அதைக் குறைக்கப் பல ஆண்டுகளாக முயன்று கொண்டேயிருக்கிறேன். ஆனால் இந்த ரோமன் வடிவில் தமிழ் மொழியை எழுதியிருப்பதைப் பார்த்தாலே ஏனோ கடுப்பாகிறது. உங்களுக்கு எப்படி?

இதுவும் கடந்து போகும் என்ற நம்பிக்கையில், இந்த வாரம் நடக்கும் பன்னாட்டு கணித்தமிழ்24 மாநாட்டில் சந்திப்போம், உரையாடுவோம்.

குறிப்பு: சரி, பிராம்ப்ட் இன்ஜினியரிங் என்பதைத் தமிழில் நான் எப்படிச் சொல்லுவேன் – “உள்ளீட்டு வடிவமைப்பு”. விக்கிப்பீடியா சொல்லியுள்ள “Prompt engineering is the process of structuring text that can be interpreted and understood by a generative AI model.” பொருளை உள்வாங்கி இதை முயன்றுள்ளேன். மொழி அறிஞர்கள் தங்களின் கருத்துக்களைப் பகிரலாம், நன்றி.

Categorized in: