எனக்குப் பிடித்த பண்டிகைகளில் நவராத்திரி விழா முக்கியமானது. வேடிக்கையாகச் சொன்னாலும், அதற்கு முக்கிய காரணம் ஒன்பது நாட்களும் மாலை வேலை பசிக்கு ருசியாகவும், ஆரோக்கியமாகவும் கிடைக்கும் பல விதச் சுண்டல்கள். இதை மாற்றி, கிரீக் சாலட் (காய்க்கலவை) தர நான் எடுத்த முயற்சி படு தோல்வி அடைந்தது என்று ஏற்கனவே எழுதியிருந்தேன். அதைவிடுங்கள். அடுத்த காரணம், இன்று உறவினர்கள், நண்பர்களைப் பார்த்து, நிதானமாகப் பேசி பழகும் வாய்ப்புகள் இல்லவே இல்லை என்றே சொல்லலாம். எல்லோரும் ஓடிக் கொண்டேயிருக்கிறோம், இல்லை ‘ரில்ஸ்களை’ பார்த்து பொழுதைக் கழித்துக் கொண்டியிருக்கிறோம். கல்யாணம் மற்றும் சுப நிகழ்ச்சிகளிலும், வந்தோமா, சாப்பிட்டோமா, உடனே கிளம்பிவிடுகிறோம். அப்படியில்லாமல் இந்த நவராத்திரி விழாவில் தான் ஒருவர் வீட்டுக்கு ஒருவர், கொஞ்சம் நிதானமாகப் போய், இருந்து வருகிறோம். இதை மகளிர் பண்டிகை என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன், குடும்ப பண்டிகை என்பது தான் சரி.

முன்பெல்லாம் எங்கள் வீட்டில் ஒவ்வொரு ஆண்டும் பெரிய அளவில் நவராத்திரிக்குக் கொலு வைப்போம். இரண்டு அல்லது மூன்று படித்தட்டுகள், ஒவ்வொன்றிலும் ஏழு தட்டுகள் செய்து, அதில் நிறையப் பொம்மைகள் வைப்போம். நானும், என் சகோதரிகளும் படிக்கும் காலத்தில், நாங்கள் தி.நகர் ரங்கநாதன் தெருவில், எங்கள் பதிப்பக நிறுவனமான லிப்கோ கிடங்குக்கு மேல் இருந்த வீட்டில் இருந்தப்படியால் (தற்செயலாகச் சிலேடை அமைந்தது) படித்தட்டுகளை புத்தக மூட்டைகளை (பண்டில்களை) கொண்டு அமைத்துவிடுவோம், மகிழ்ச்சியாக இருக்கும். செய்து முடித்தவுடன், ஏதோ எகிப்து பிரமிகளைக் கட்டிய பொறியாளர்களைப் போல உணர்ந்தது வேறு கதை. பிறகு, பூங்காக்கள், குளங்கள் என்று சிறிய அமைப்புகளைத் தரையில் செய்வோம் – இதற்காகவே ரங்கநாதன் தெருவில் நடைபாதை கடைகள் இருக்கும், அவர்களிடம் பல நூறு விதமான சிறு சிறு பொம்மைகள் விற்பனைக்கு இருக்கும் – சின்ன பையனாக இருந்தாலும் அம்மாவைக் கேட்பதெல்லாம் கிடையாது, எல்லாம் தெரிந்த கடைகள் அதனால் கடன் சொல்லி அள்ளிக் கொண்டு வந்துவிடுவேன், பின்னர் அப்பாவோ, அக்காவோ போய் காசுக் கொடுப்பார்கள். சில சமயங்களில், நான் அடி வாங்கி, அழுது கொண்டே வாங்கியதைத் திரும்பக் கொடுத்த நிகழ்வுகளும் சரித்திரப் பக்ககங்களில் இருக்கிறது.

இப்போதெல்லாம் மரத்தில் செய்த படித்தட்டுகள், ஐந்து தட்டுகள் மட்டும் தான். போன சில ஆண்டுகளில் எங்கள் வீட்டில் அமைத்த நவராத்திரி கொலு அமைப்புகளின் படங்கள் இங்கே: 2021, 2020, 2019, 2018, 2016, 2015, 2014, 2007 & 2004. இந்த ஆண்டு 2023 எங்கள் வீட்டில் அமைத்த நவராத்திரி பண்டிகைக்கான கொலு அலங்காரத்துப் படங்கள் கீழே.

மொத்தம் ஐந்து தட்டுகள், ஒவ்வொன்றும் எட்டு அடி

மொத்தம் ஐந்து தட்டுகள், ஒவ்வொன்றும் எட்டு அடி

கண்ணனுடன் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், பிள்ளையார் மற்றும் பலர்

கண்ணனுடன் ஸ்ரீ ராகவேந்திர ஸ்வாமி, ஸ்ரீ நரசிம்ம ஸ்வாமி, ஸ்ரீ லக்ஷ்மி ஹயக்ரீவர், பிள்ளையார் மற்றும் பலர்

தசாவதாரம், ஸ்ரீ அத்தி வரதர் மற்றும் ஸ்வாமி தேசிகரின் கண்டாவதாரம் மற்றும் பல ரூபங்களில் விநாயக ஸ்வாமி

தசாவதாரம், ஸ்ரீ அத்தி வரதர் மற்றும் ஸ்வாமி தேசிகரின் கண்டாவதாரம் மற்றும் பல ரூபங்களில் விநாயக ஸ்வாமி

இந்த ஆண்டு புது வரவு - ஒன்பது (பெருமாள்) தாயார்கள் மற்றும் ஏற்கனவே இருந்த அஷ்டலக்ஷ்மி

இந்த ஆண்டு புது வரவு – ஒன்பது (பெருமாள்) தாயார்கள் மற்றும் ஏற்கனவே இருந்த அஷ்டலக்ஷ்மி

ஆழ்வார்கள், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார், அரையர் சேவை

ஆழ்வார்கள், ஸ்ரீ ஆண்டாள் மற்றும் ரங்கமன்னார், அரையர் சேவை

பிள்ளையார், திருப்பதி பாலாஜி மற்றும் கேரளக் கதகளி

பிள்ளையார், திருப்பதி பாலாஜி மற்றும் கேரளக் கதகளி

தலையாட்டி பொம்மைகள்

தலையாட்டி பொம்மைகள்

இந்த ஆண்டு, பொம்மைகளை வைக்கும் முன்னர் கொலுப் படி தயார் செய்த பின் எடுத்த படம்

இந்த ஆண்டு, பொம்மைகளை வைக்கும் முன்னர் கொலுப் படி தயார் செய்த பின் எடுத்த படம்

இப்பொழுதெல்லாம் கொலுவுக்கு வீட்டுக்கு வரும் விருந்தினர்களில் பெரும்பலனோர் எது சாப்பிடக் கொடுத்தாலும் வேண்டாம் என்று நழுவிக் கொள்கிறார்கள், ஏன்?

Categorized in:

Tagged in:

,