இன்று ஒரு கிறிஸ்துவக் குடும்ப நண்பர் இல்லத் திருமணத்தில் பங்குபெறும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. தஞ்சாவூரில் இருக்கும் புனித இருதயத் தேவாலயத்தில், நண்பர்கள், உறவினர்கள் சூழ, இறைவன் அருளோடு, திருச்சபையின் ஆசீர்வாதத்தோடு திருமணம் நடந்தது. இதற்கு முன்னரும் நான் தேவாலயத்தில் திருமணத்திற்குப் போயிருக்கிறேன், ஆனால் நினைவில் இல்லை. அதனால் நிகழ்ச்சி நடக்கையில் எனக்குப் பக்கத்தில் அமர்த்திருந்த திருச்சபையின் பக்தரிடம் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

ஆங்கிலப் படங்களில் பார்ப்பது போல மோதிரம் மாற்றம் இல்லை, ஏனெனில் அது நேற்று நடந்த நிச்சயத்திலேயே நடந்துவிட்டதாம். தமிழ்ச் சமூக மரபின்படி, மணமகன் மணமகளின் கழுத்தில் திருமாங்கல்யம் அணிவித்தார், அதன் பின்னர் மாலையை மாற்றிக் கொண்டார்கள். அதற்குப் பிறகு இரு வீட்டாரும் திருச்சபைக்கு முன்னர் சீர் கொண்டு சென்றார்கள்.

நிகழ்ச்சியின் பல இடங்களில் குருமார்கள் புனிதப் பைபிளிலிருந்து வாசகங்கள் படித்தார்கள், கல்யாணத்தின் புனிதத்தை, இறைவன் இணைத்ததை மனிதர்கள் பிரிக்காமல் இருக்க வேண்டிக் கொண்டார்கள். எல்லாமே தமிழில் இருந்தது, கோயர் பாடகர்கள் குழு பாடிய இறைவன் துதி பாடல்களும் தமிழ் தான். குருமார்கள் சொற்பொழிவில் வெகு சில இடங்களில் மட்டும் சில ஆங்கில / லத்தீன் வார்த்தைகள். ஒரு பாதிரியார் இருப்பது நவக்கிரகம், எட்டுத் திசை, ஏழு ராகம், ஆறு சுவை, ஐந்து தமிழ் திணைகள், நான்கு வகை நிலங்கள், மூன்று முக்கிய கடமைகள் (அன்பு/அமைதி, கடவுள் நம்பிக்கை, அவரின் மீது விசுவாசம்), இரண்டு பால்கள் மற்றும் ஓர் இறைவன் என்று அழகாக எண்ணிக்கைகளைக் கொண்டு மணமக்களுக்கு அறிவுரை வழங்கினார். இறுதியில் புனித ஏசு கிறிஸ்துவின் ஆசியோடு கொடுக்கும் ‘அப்ப’ பிரசாதம் கத்தோலிக்க விசுவாசிகள் மட்டும் வந்து பெற்றுக் கொள்ளவும் என்றவுடன், எல்லோரும் அமைதியாகப் பெற்றுக் கொண்டார்கள் – ஒரு சில குரல்கள் மட்டுமே கேட்டது, ஓரிருவர் மட்டுமே பிரார்த்தனை நடக்கும் போது செல்பேசியில் பேசினார்கள், முழு நிகழ்ச்சியிலும் இரைச்சல் பெரியதாக எதுவுமில்லை, அது நன்றாக இருந்தது.

இரண்டு மணி நேரம் நடந்த பிரார்த்தனை நிகழ்ச்சி முடிந்தபின், இறைவனை உலக அமைதிக்கு வேண்டி, மணமக்களுக்கு வாழ்த்துக்கள் சொல்லி வெளியேறினேன்.

#sacretheartcathedral #tanjore #tamilchurchwedding

Categorized in:

Tagged in: