ஆரம்பக் காட்சி முதல் கடைசிக் காட்சி வரை, சிறு நிறுத்தம் கூட இல்லாமல் பல நூறு கெட்டவர்களைத் தனியாளாகக் கதாநாயகன் அடித்து, வெட்டி, சுட்டு துவம்சம் செய்யும் பழக்கப்பட்ட கதை தான் நடிகர் விஜய்யின் லியோ. ரசிகர்களைத் தாண்டி சாதாரணப் பார்வையாளர்களையும் கவரும்படி இருந்தது முதல் பாதி, நல்ல விறுவிறுப்பு, இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெற்றி பெற்ற பகுதி இது.
ரம்மியமான இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு மலை ஊர், அங்கே காப்பிக் கடை நடத்தும் நடுவயது விஜய், அவரின் மனைவி திரிஷா, இவர்களுக்கு ஒரு பெரிய பையன், ஒருசின்ன பெண் என்று அழகான குடும்பமாக வரும் காட்சிகளில் விஜய் தனது உண்மையான வயதுக்கேற்ற தோற்றத்தில் வருவது ரசிக்கும் படி பொருத்தமாக இருந்தது. இவர்களின் முன் நிகழ்வுகள் என்று எந்த இழுவையும் இல்லை. ரத்த வெறிபிடித்த கழுதைப்புலியைப் பிடிக்க விஜய் துரத்தி சண்டை போடுவது, நம்ப முடியாதது என்றாலும் நன்றாகவே இருந்தது. முதல் பாதியில் எதிரி கும்பல் கதாநாயகனைக் கொல்லத் துடிப்பது ஏனென்று அழுத்தமாக வெளிப்பட்டது நம்மைத் திரையில் நடந்த நிகழ்வுகளோடு ஊன்ற வைத்தது. படத்தின் முன்னோடி காணொலிகளில் வரும் வசனத்தைப் படத்தில் வரும் காட்சிகளில் இடம் பெற வைத்தவிதம் அருமை.
இரண்டாம் பாதிக்கான மூலக் காரணம் வலுவற்றதாக இருந்தது, அதனால் படம் எப்படி முடியப்போகிறது என்று ஊகிக்க முடிந்தது கொஞ்சம் தொய்வைத் தந்தது உண்மை – இருந்தும் படம் முழுக்க விஜய் தனது திறமையான சண்டையால் நம்மை உக்கார வைத்துவிடுகிறார். முடிவு காட்சி வேறுமாதிரி இருந்திருந்தால் இன்னும் நன்றாக இருந்திருக்கும் என்று எனக்குத் தோன்றியது. படத்தில் சஞ்சய் தத், அர்ஜுன், கௌதம் வாசுதேவ் மேனன், மடோனா சபஸ்டியன், மன்சூர் அலிகான் என்று பலர் வருகிறார்கள், யாரும் பெரியதாக மனதில் நிற்கவில்லை. ஒரு சில காட்சிகள் வந்தாலும் தனது தனித்துவத் தோற்றத்தில் மிஷ்கின் நம்மைக் கவர்கிறார். அனிருத் இசையில் பாட்-ஆஸ் பாடல் பொருத்தமாக இருந்தது, மற்றபடிச் சொல்ல எதுவுமில்லை. விஜய்யிடம் தன்னைப் பற்றிய விளக்கும் அளிக்கும் உருக்கமான சிறிய காட்சியில் ஜார்ஜ் மரியன் என்னை ஒரு துளி கண்ணீர் சிந்த வைத்துவிட்டார், அவரின் நடிப்புக்குப் பாராட்டுக்கள்.
முதல் பகுதியில் வரும் நீதிமன்றக் காட்சிகள் சலிப்பூட்டும் சினிமாதனம், நம்பும்படியே இல்லை. கைதி படத்தில் வந்த ஜார்ஜ் மரியனின் பாத்திரம் இந்தப் படத்தில் வருகின்ற விதம், எல்லோருக்கும் பிடித்திருந்தது என்பதை அரங்கில் வந்த விசில் சத்தம் காட்டியது. மற்றபடி இதுவும் லோகேஷ் சினிமா அண்டம் என்பதெல்லாம் விளம்பரம் மட்டுமே. இதற்குப் பிறகு சில ஆண்டுகளாவது, லோகேஷ் வெறு அண்டங்களை நோக்கி நகர்வது அவருக்கு நல்லது.
மொத்தத்தில் விஜய் ரசிகர்களுக்கு இது தீபாவளி விருந்து என்பதில் சந்தேகமில்லை!

Trisha and Vijay in Leo (2023)
துணுக்கு தகவல்:

Onondaga Kodaikanal, Coaker’s walk, Kodaikanal.
படத்தின் முதல் காட்சியில் ஆட்சியர் வீடு என்று காட்டப்படும் மலை பங்களா, நம்மூரில் தான் இருக்கிறது – கொடைக்கானல் கோகர்ஸ் வாக் பகுதியில் இருக்கும் இங்கே தான் இந்த ஆண்டு கோடை விடுமுறைக்கு நாங்கள் குடும்பத்தோடு சென்று தங்கியிருந்தோம், நல்ல வசதியாக இருந்தது, ஏர்-பி-என்-பி மாதிரியான விடுதி அது.
Comments