தமிழகத்தில் பழம்பெரும் பெருமாள் கோயில்கள் பல்லாயிரம், அதில் சிலவற்றைத் தவிர மற்றதை நமக்குத் தெரிந்திருப்பதில்லை. அவற்றில் பலவும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்டவை, அதிலும் குகைக் கோயில்கள் என்றால் இன்னும் பழமையானவையாக இருக்கும், பார்க்கவே அற்புதமாகவிருக்கும்.

நேற்று தஞ்சாவூரில் இருந்து திருச்சிச் செல்லுகையில் நண்பரின் பரிந்துரையில் இந்தக் குகைக் கோவிலுக்குச் செல்லும் பாக்கியம் கிடைத்தது. நெடுஞ்சாலையில் செல்லாமல், கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் உள்ளூர் சாலையில் சென்றால் ஒரு சிறிய மலையின் கீழேயிருக்கிறது “மலையடிப்பட்டி அருள்மிகு ஶ்ரீ கமலவள்ளி தாயார் சமேத கண் நிறைந்த பெருமாள் திருக்கோயில்”, புதுக்கோட்டை மாவட்டம், குளத்தூர் தாலுகா. மிக அழகான கோயில், அமைதியான சூழல், உள்ளே சென்றாலேயே மனது அமைதியாகிவிடுகிறது. சாலையில் இருந்து வேகு சில அடிகளே நடந்து சென்று ஒரு சில படிகள் மட்டுமே ஏறவேண்டும், நிழல் குடையோ மரங்களோ கிடையாது, அதனால் வெயில் ஆகாதவர்கள் தொப்பியோ குடையோ கொண்டுவரலாம்.

திருவனந்தபுரத்தில் எப்படி மூன்று தூண்களுக்கு நடுவில் பெருமாள் பள்ளி கொண்டு காட்சியளிப்பாரோ அது போலவே இங்கேயும் இருக்கிறார். எட்டாம் ஆண்டுக்கு முன்னர் கட்டப்பட்டக் கோயிலிது. சென்னையை அடுத்த மஹாபலிப்புரத்தில் இருக்கும் ஸ்தலச் சயனப் பெருமாளை ஒட்டி இங்கே இருப்பவரும் இருக்கிறார் என்கிறார்கள். மூலவர் ஶ்ரீ அனந்தப் பத்மநாப ஸ்வாமி, உடனுறை ஶ்ரீ கமலவள்ளி தாயார். இங்கு பெருமாள் நின்றகோலம், அமர்ந்த கோலம், சயனக் கோலம் என்று மூன்று நிலையில் காட்சியளிக்கிறார். அதோடு சதுர்புஜ ஹயக்ரீவர் மற்றும் மலோல நரசிம்மர், வைகுண்ட நாதனாக ஶ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார் – இப்படி அவரின் முக்கிய அவதாரக் காட்சிகள் பலவற்றை ஒரே சன்னிதியில் சேர்த்து வணங்குவது அரிது, பெரிய பெரு இது.

இங்குப் பள்ளி கொண்டிருக்கும் ஸ்ரீ கண் நிறைந்த பெருமாளிடம் வேண்டிக் கண்மலர் சாற்றி ப்ரார்தனை செய்தால் கண்நோய்கள் குணமாகும் என்பது இங்கே ஐதிகம். இங்கு ஶ்ரீ திவாகர ரிஷிக்குக் காட்சி கொடுத்து அவரின் சாபத்தை நீக்கியதாகச் சொல்கிறது கோயில் தலப்புராணம். கோயில் வாயிலுக்கு அருகிலேயே சிறு புனிதப் புஷ்கரணி இருக்கிறது – இங்கேயிருக்கும் தீர்த்தத்தைக் கால்படாமல் எடுத்து தலையில் தெளித்துக் கொண்டு பெருமாள் சேவிக்கச் செல்வது விஷேசம்.

Kan Niraintha Perumal Cave Temple Malayadipatti

Kan Niraintha Perumal Cave Temple Malayadipatti

மூலவர் ஶ்ரீ அனந்தப் பத்மநாப ஸ்வாமி. அவ்ரோடு சதுர்புஜ ஹயக்ரீவர் மற்றும் மலோல நரசிம்மர், வைகுண்ட நாதனாக ஶ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார்.

மூலவர் ஶ்ரீ அனந்தப் பத்மநாப ஸ்வாமி. அவ்ரோடு சதுர்புஜ ஹயக்ரீவர் மற்றும் மலோல நரசிம்மர், வைகுண்ட நாதனாக ஶ்ரீதேவி, பூதேவியுடன் சேவை சாதிக்கிறார்.

மலையடிப்பட்டி அருள்மிகு ஶ்ரீ கமலவள்ளி தாயார் சமேத கண் நிறைந்த பெருமாள் திருக்கோயில்

மலையடிப்பட்டி அருள்மிகு ஶ்ரீ கமலவள்ளி தாயார் சமேத கண் நிறைந்த பெருமாள் திருக்கோயில்

கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் சாலையில் இருந்து வேகு சில அடிகளே கோயில், அருகிலேயே சிறு புனிதப் புஷ்கரணி இருக்கிறது

கீரனூரிலிருந்து கிள்ளுக்கோட்டை செல்லும் சாலையில் இருந்து வேகு சில அடிகளே கோயில், அருகிலேயே சிறு புனிதப் புஷ்கரணி இருக்கிறது

புதுக்கோட்டைத் தேவஸ்தானம், தமிழக அரசின் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் இருக்கும் இந்தக் கோயில் தற்போது நன்றாகப் பராமரிக்கப்படுவதாகத் தோன்றுகிறது – இணையத்தில் பார்த்ததில் இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்படியிருக்கவில்லை என்று அன்றைய செய்திகள் சொல்கிறது. இந்த இடம் இந்தியத் தொல்லியல் துறையின் பாதுகாக்கப்பட்ட சின்னமும் ஆகும்.

#TamilNaduTemples #HinduTemples #Pudukottai #CaveTemples

Categorized in:

Tagged in:

,