இந்த வசதி யூட்யூப்பில் கொஞ்சக்காலமாக இருக்கிறது என்று நினைக்கிறேன். ஆங்கிலத்தில் நாம் பார்க்கும் காணொலிகளின் கீழே தானாகவே தமிழ் துணையுரைகளாகக் கொடுக்கும் வசதியைத் தான் சொல்கிறேன். தற்போது இந்த வசதியைச் செயல்படுத்தும் செயற்கை நுண்ணறிவைப் புதுப்பித்திருப்பார்கள் போல, ஓரளவுக்கு மேலேயே புரிந்து பயன்பெறும் முறையில் இருக்கிறது மொழிபெயர்ப்பு. பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் கூகுள் ஆங்கிலத்திலிருக்கும் (பிறகு மற்ற மொழிகளில்) இணையப்பக்கங்களைத் தானாகவே தமிழில் கொடுக்கும் வசதியை அறிமுகப்படுத்தினார்கள், இது அதன் தொடர்ச்சி.

இது வரும் காலங்களில், தமிழ் போன்ற இந்திய மொழிகளுக்கு மிகப் பயனுள்ளதாக இருக்கும். உலகம் முழுக்க மற்ற மொழிகளில் இருக்கும் அறிவுக் களஞ்சியங்களைத் தமிழில் புரிந்து கொள்ள இது பயன்படும். குறிப்பாக மற்ற இந்திய மொழிகளில், சீனம் போன்ற ஆசிய மொழிகளில் இருக்கும் இலக்கியப் படைப்புகளை, அறிவியல் செல்வங்களை, கதைகளை, செய்திகளை (ஆங்கில கண்கொண்டில்லாமல், நேரடியாக), அறிவை எப்படி நெட்பலிக்ஸ் இன்று திரைப்படங்களை, தொலைக்காட்சி தொடர்களை வழங்குகிறதோ அதைப் போல ஆனால் இலவசமாகப் பெற முடியும். ஜென்-ஆல்ஃபா என்னும் இன்றைய தலைமுறை இளைஞர்களால் ஒரு சில பத்திகளுக்கு மேல் படிக்க முடிவதில்லை – அவர்களுக்கு எல்லாமே வீடியோக்கள் தான்.

செய்தது நாம் இல்லை, கூகுள் தான் என்றாலும் பரவாயில்லை, பயன்படுத்துவோம், நம் அறிவை வளர்ப்போம். செயற்கை நுண்ணறிவில் வந்துக் கொண்டிருக்கும் வளர்ச்சியால், சில ஆண்டுகளிலேயே திறன்மூல வடிவில் இதே வசதி வந்துவிடும், கவலை வேண்டாம்.

பாரதி சந்தோஷப்படுவார்: ‘சென்றிடுவீர் எட்டுத்திக்கும்; கலைச் செல்வங்கள் யாவும், கொணர்ந்திங்கு சேர்ப்பீர்’ என்றாரே!