வெளிவந்து ஒன்பது வருடமான ஒரு படத்தின் ஒவ்வொரு காட்சியாக நினைவு கூர்ந்து, அதைத் துல்லியமான விவரித்தார் ஒரு பார்வையாளர் – தன் குடும்பத்தோடு அடிக்கடி மீண்டும் மீண்டும் பார்க்கும் படம் அது என்றும் தொடர்ந்தார். தனக்கு எப்பொழுதெல்லாம் சோர்வாக இருக்கிறதோ அப்பொழுதெல்லாம் அந்தப் படத்தைப் பார்ப்பேன் என்றார் இரயில்வே துறையில் வேலையில் இருக்கும் இன்னொருவர். பன்னிரண்டாம் வகுப்பு மாணவன் தானே சில குறும்படங்கள் எடுத்துள்ளேன் அதற்கு உங்களின் அந்தப் படம் தான் உந்துதல் என்றான். இந்த வெள்ளிக் கிழமைப் பார்த்த தமிழ்ப் படம் அடுத்த நாள் சனிக்கிழமைகூட நம் நினைவில் இல்லாத இன்றைக்கு மேலே சொல்லியதெல்லாம் எங்கே, யாரை நோக்கி என்றா கேட்கிறீர்கள்?

திரைப்பட இயக்குநர் என்பவர் ஆசிர்வதிக்கப்பட்டவர் இல்லை, நம்மில் இருந்து வந்த ஒருவர் தான் சினிமா மேல் தனக்கு இருக்கும் அதீதக் காதல் அல்லது கதை சொல்வதில் இருக்கும் ஆர்வத்தினால் அங்கே இருக்கிறார். திருப்பூரில் சாதாரணக் குடும்பத்தில் பிறந்தவர், எந்தச் சினிமா பின்புலம் இல்லாமல், புத்தக வாசிப்பு குழுவில் கதை கேட்டதில், தன் பாட்டியோடு பல படங்களை அங்கே திருப்பூரில் ஆண்/பெண் என்று பிரித்து அமர வைத்த கொட்டகையில் படங்கள் பல பார்த்ததில் வந்த ஆர்வத்தினால் குறும்படங்கள் எடுத்து நாளைய இயக்குநர் மூலம் வாய்ப்புக் கிடைத்து அதைத் தன் முதல் படமான ‘இன்று நேற்று நாளை’யில் சரியாகப் பயன்படுத்திக் கொண்டவர் தான் திரு ஆர். ரவிகுமார்.

இன்று அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் 124ஆம் பொன்மாலைப் பொழுது தொடங்கும் முன் தலைமை நூலகர் திருமதி காமாட்சி அவர்கள் திரு ஆர். ரவிகுமார் அவரிடம் என்னை அறிமுகம் செய்தார் – நம்பவே முடியவில்லை அப்படியான ஓர் எளிமை ரவிகுமார் அவர்களிடம். சிறப்பு விருந்தினராக அழைத்து என் முன் ஒலிவாங்கியை வைத்தால் என்னிடம் அப்படியான எளிமை இருக்குமா என்றால் சந்தேகம் தான். நிகழ்ச்சியில் பேசும் போதும் அதே எளிமை, நிதானம், எங்கேயும் தான் பெரியவர் என்ற எண்ணம் துளியும் இல்லை. தன் பேச்சை முடித்தபின் ஒன்றரை மணி நேரம் பள்ளி மாணவன் முதல் முதியவர் வரை கேட்ட எல்லாவித (புரியாத சில கேள்விகளும் இருந்தன) கேள்விகளுக்கும் சிரித்துக் கொண்டே தனக்குத் தெரிந்த பார்த்தவற்றைப் பகிர்ந்து கொண்டார். இடதுசாரி குடும்ப பின்னணியிலிருந்து வந்தவர் என்று தன்னை அறிமுகம் செய்து கொண்டலும், தமிழ் சினிமா வணிகமானது தான் அதில் தவறு என்ன என்று அழுத்தமாகச் சொன்னார் – அது நிஜம் தானே – இப்படி வெளிப்படையாகப் பேசவே தனித் தெளிவு வேண்டும். ஒரு கதை சொல்லியாக தனக்குச் சுதந்திரம் நிச்சயம் இருக்கிறது – சினிமா ஒரு கூட்டு முயற்சி, ஆகையால் அந்தச் சுதந்திரம் என்பது நமது பிடிவாதமாக இல்லாமல், கதைக்குத் தேவையாக இருந்தால் நிச்சயம் அதைச் சொல்ல எந்தத் தடையுமில்லை என்றார். அதைப் போலவே சினிமாவில் கதாநாயகனுக்கு அதீத முக்கியத்துவம் இருப்பதில் தவறில்லை – பல நாயகர்கள் அதற்காகக் கடுமையாக உழைக்கிறார்கள் – மக்களும் அவர்களைப் பார்க்க ஆர்வமாக இருக்கும் போது இதில் என்ன தவறு என்று சுட்டிக் காட்டினார்.

‘இன்று நேற்று நாளை’ப் படத்தை வெறும் 43 நாட்களில் எடுத்து முடித்தேன் என்று அவர் சொல்லும் போது நம்பவே முடியவில்லை. இன்று தமிழில் நல்ல கதையுள்ள படங்கள் வராததற்குக் காரணம் நம் சமூகத்தில் நல்ல சிறுகதைகளும் நாவல்களும் வேண்டியளவு வருவதில்லை. இயக்குநராக நான் சினிமா எடுக்க வசதியாகத் தான் திரைக்கதையை எழுதுவேன், ஒரு கதாசிரியர் தான் எல்லையில்லா கற்பனையைக் கொண்டு புதிதாகச் சிந்திக்க முடியும், படைக்கமுடியும் – அப்படியான கதை உங்களிடம் இருந்தால் நேரடியாகத் தயாரிப்பாளரை அணுகினால் அதைப் படமாக எடுக்க இன்றைக்கு அவர்கள் தயாராக இருக்கிறார்கள், உங்களுக்கு ஓர் இயக்குநரின் ஒப்புதல் தேவையில்லை என்று விடையளித்தார்.

வாய்ப்புக் கிடைத்தால் இந்த நிகழ்ச்சியின் காணொளியைக் காணவும் (ஒரு வாரம் கழித்து யூ-ட்யூப் @ACLChennai சேனலில் பார்க்கவும்)

இயக்குநர் ஆர். ரவிகுமார்

இயக்குநர் ஆர். ரவிகுமார்

#இன்றுநேற்றுநாளை #திரைப்படம் #அண்ணாநூலகம் #AnnaCentenaryLibrary

Categorized in:

Tagged in: