1980களில் வெளிநாட்டிலிருந்து, குறிப்பாகச் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளிலிருந்து யார் திரும்பி வந்தாலும் அவர்களின் பெட்டிகளில் சில பரிசுப் பொருட்கள் இந்தியாவில் இருக்கும் நண்பர்களுக்கு, உறவினர்களுக்குக் கொடுப்பதற்காகக் கட்டாயம் வாங்கி வரப்படும். சில சமயம் இவற்றில் சிலவற்றைப் பயணிகளிடமிருந்து வானூர்தி நிலையங்களிலேயே ‘அன்பாக’ எடுத்துக் கொள்ளப்படும்.

இந்தப் பொருட்களின் வரிசையில் முதலில் வருவது ‘காமே’ குளியல்கட்டிகள் (சோப்), அதைத் தொடர்ந்து சிங்கப்பூர் என்றால் ‘டைகர்’ தலைவலிக்கான தைலம், மிட்டாய்கள், வாசனைத் திரவியங்கள் (சென்ட் பாட்டில்கள்), நீல நிற பெரிய ரெக்ஸின் பை, மற்றும் பல. என் அண்ணாவுக்கு (ஒன்று விட்ட சகோதரன்) இந்த ‘காமே’ குளியல்கட்டி என்றால் உயிர், யாரும் வெளியூரிலிருந்து வராத சமயங்களில் இதை வாங்க சென்னை பர்மா கடைவீதியில் (பஜார்) வாடிக்கையாக இவன் வாங்கும் கடை இருக்கும்.

அந்த முதலாளி எடுத்துக் கொடுக்கும் பல விதமான ‘காமே’ குளியல்கட்டிகளை இவன் ஒவ்வொன்றாக எடுத்து, தொட்டு, முகர்ந்து பார்த்து உண்மையான ‘காமே’ தயாரிப்பைக் கண்டுபிடிப்பான். பிராக்டர் அண்ட் கேம்பில் நிறுவனத்தின் தயாரிப்பு (1929இல் இருந்து) ‘காமே’. அவர்களால் கூட எந்த ‘காமே’ குளியல்கட்டி துபாயில் தயாரித்தது, இது சிங்கப்பூர் (மலேசிய) தயாரிப்பு, இது அமெரிக்கா தயாரிப்பு என்று சொல்ல முடியாது, இவனால் சொல்ல முடியும். பஜார் கடை முதலாளியும் இவனும் ‘பலவற்றை’ தடவிப் பார்த்து, பேரம் பேசி கடைசியில் இரண்டு கட்டிகளை வாங்கி, அதற்காகவே அவர் வைத்திருக்கும் வெண்ணிற வெண்ணெய் தாளில் சுற்றி, அதை நேற்றைய நாளிதழ் தாள்களில் சுற்றி, ரகசியமாகக் கொடுப்பார். இன்று இந்த காட்சி நடந்தால், பார்ப்பவர்கள் நானும் என் அண்ணாவும் ஏதோ மதிமயக்கப் பொருட்களை, திருட்டுத்தனமாக வாங்குவது போலத் தோன்றும் – ஆனால் அப்போதெல்லாம் இது தான் பஜாரில் வாங்கும் முறை.

வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் வீட்டில் அவர்கள் அங்கிருந்து கொண்டுவந்த பணத்தைப் பாதுகாப்பாக வைப்பார்களோ இல்லையோ இந்த ‘காமே’ குளியல்கட்டிகளையும் வாசனை குப்பிகளையும் கண்டிப்பாக ரகசியமாக வைப்பார்கள். பல வருடங்கள் இவை ஒவ்வொன்றாகப் பங்கிடப்படும், சில பேர்கள் தங்களின் உயில்களில் ‘காமே’ குளியல்கட்டிகளை அவர்களின் இளவயது காதலிகளுக்குப் பரிசாக எழுதி வைத்திருந்தாக அமெரிக்கா சி.ஐ.எ.வின் சமீபத்தில் திறக்கப்பட்ட கடிதங்கள் சொல்கிறது.

இதெல்லாம் எதற்காகச் சொல்கிறேன்? இன்றைய தமிழ் நாளிதழில் இந்த ‘காமே’ குளியல்கட்டிகளுக்கான விளம்பரத்தைப் பார்த்தவுடன் முதலில் எனக்குத் தோன்றியது இவை இன்னும் வெளிவருகிறதா? பல வருடங்களாகப் பார்த்த நினைவில்லையே என்று? இணையத்தில் தேடிப்பார்த்தால், பத்து ஆண்டுகளுக்கு முன் இந்த ‘காமே’ வணிகச்சின்னத்தை (பிராண்ட்) பிராக்டர் அண்ட் கேம்பில் நிறுவனத்திடம் இருந்து யூனிலீவர் வாங்கியது, அதிலிருந்து பல ஆண்டுகள் இதை அவர்கள் தயாரிக்கவில்லை போல, இப்போது தான் மீண்டும் சந்தையில் கொண்டு வருகிறார்கள். ஆனால் இந்தக் கட்டிகள் கிடைக்க அரிதாக இருந்தபோது இருந்த மோகம் இப்போது மீண்டும் வருமா என்ன? எல்லாவற்றுக்கும் ஒரு காலம் உண்டு, வயதாகிவிட்டால் பெரிய கதாநாயகன் கூட கௌரவ வேடம் தான் செய்ய முடியும் (செய்ய வேண்டும்).

Tagged in:

, ,