எனது 🪟விண்டோஸ் கணினியில் நான் எப்போதும் இரண்டு வலையுலாவிகள் வைத்திருப்பேன். முதலாவது வலையுலாவி முக்கியமான தளங்களுக்கு, உதாரணமாக வங்கி இணையப் பரிவர்த்தனைகளுக்கும், சந்தா தளங்களுக்கும், அமேசான் போன்ற இணையக் கடைகளுக்கும். துணை வலையுலாவி மற்ற எல்லாப் பயன்பாட்டுக்கும் – சமூகத் தளங்களுக்கும், இணையப் பத்திரிக்கைகளுக்கும். இதனால் கொஞ்சம் (கொஞ்சம் தான்) பாதுகாப்பு கூடுதலாகக் கிடைக்கும், அதைவிட எனக்குத் தேவையான இரண்டுவிதமான பயன்பாட்டுக்கு ஏற்ற பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை (வலையுலாவியை நீட்டிக்கும் செயலிகள்) நிறுவ எளிதாக இருக்கும். எந்தளவு குறைவான எண்ணிக்கையில் பிரவுசர் எக்ஸ்டென்ஷன்களை 🧰வைத்திருக்கிறீர்களோ அந்தளவு இணையப் பயன்பாட்டில் வேகம் இருக்கும், அதிக பிரவுசர் எக்ஸ்டென்ஷன்கள் இருந்தால் ஏதாவது ஒன்றில் ஒரு பாதுகாப்பு குறையிருந்தாலும் மொத்தக் கணினிக்கும் பிரச்சனை தான். இப்படிப் பிரிப்பதால், ஒரே வலையுலாவியில் எல்லா எக்ஸ்டென்ஷன்களும் இருக்காது.

பல ஆண்டுகளாக நான் முதல் வலையுலாவியாக கூகுள் க்ரோம், இரண்டாவதாக மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸ், மூன்றாவதாக மைக்ரோசாப்ட் எட்ஜ் பயன்படுத்தி வந்தேன். 2020ஆம் ஆண்டு மைக்ரோசாப்ட் எட்ஜும் க்ரோம் பயன்படுத்தும் அதே அமைப்பைப் பயன்படுத்தத் தொடங்கியதிலிருந்து எனது முதல் வலையுலாவி மைக்ரோசாப்ட் எட்ஜ் என்றும் இரண்டாவதாக 🦊மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸ் என்றும் வைத்திருந்தேன் – கூகுள் க்ரோம்மை முழுவதும் நீக்கிவிட்டேன். தேவையில்லாமல் பல வலையுலாவிக்கள் இருப்பதும் நல்லதில்லை. சென்ற ஆண்டில், பல தளங்கள் குறிப்பாக பேஸ்புக், டிவிட்டர், யூட்யூப் போன்ற செயலிகள் மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸ்ஸில் மிகவும் மெதுவாக இருந்தது, அதனால் ஃபயர்ஃபாக்ஸ்ஸில் இருந்து இன்னொரு க்ரோம் அமைப்பைப் பயன்படுத்தும் ப்ரேவ் என்கிற வலையுலாவி எனது துணை பிரவுசராக வைத்துக் கொண்டுள்ளேன் – மொஜில்லா ஃபயர்ஃபாக்ஸ்ஸை முழுவதும் நீக்கிவிட்டேன்.

கடந்த சில வாரங்களாக ப்ரேவ்வும் பிடிக்கவில்லை. அதனால் க்ரோம், ஃபயர்ஃபாக்ஸ் போன்று பிரபலமாக இருக்கும் ஒபேரா என்கிற செயலியை எனது துணை பிரவுசராக நிறுவியுள்ளேன். மற்ற எல்லா வளையுலவிகளை விட ஒபேரா பார்க்க நன்றாகவும், வேகமாகவும் இருக்கிறது, உபயோகித்துப் பார்க்கவும். ஒபேராவில் க்ரோம் பிரவுசருக்கு இருக்கும் எல்லா எக்ஸ்டென்ஷன்களும் எட்ஜில் வேலை செய்வது போலவே செய்யும். ஒபேராவின் உள்ளேயே ஏரியா என்கிற சாட்-ஜி. பி. டி போன்ற ஓர் இயற்றறிவு (ஈனும் செயற்கை நுண்ணறிவு) இருக்கிறது.

ஏன் ஒபேராவை முதன்மை வளையுலவியாக நிறுவவில்லை என்றால், அந்தந்த கணினி இயங்கு தளங்களில், அதே நிறுவனத்து வளையுலவி தான் வேகமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் வாய்ப்புகள் அதிகம் – உதாரணம் ஐபோன் என்றால் சாஃபரி. விண்டோஸ்ஸை பொறுத்தவரை மைக்ரோசாப்ட் எட்ஜ் தான் குறைந்தளவு நினைவக இடத்தையும் எடுக்கும்.

Categorized in:

Tagged in:

,