இஸ்ரோவின் சந்திரயான்-3 வெற்றியைப் பற்றி நமக்குத் தெரியும். ஆனால் அதே திட்டத்தில்  முன் யோசிக்காத ஒரு புது முயற்சியைச் செய்து அசத்தியிருக்கிறார்கள் இஸ்ரோவின் மென்பொருள் வல்லுநர்கள். விக்ரம்/பிராகியன் வாகனங்களின் சிறப்பான பணியினால் அதன் மூன்று மாத வேலைகளையெல்லாம் முடித்தும், சுமார் 100 கிலோ எரிபொருள் மிச்சமாக இருந்திருக்கிறது.
எரிபொருளை வீணடிக்காமல் அதைப் பயன்படுத்தி  வாகனங்கத்தின் “உந்துதல் கலத்தை” (Propulsion Module) மட்டும் மேலெழுப்பி, நிலவின் பாதையைத் தாண்டி, பூமியின் பாதைக்குச் செலுத்தியிருக்கிறார்கள். அதனுள் இருக்கும் அறிவியல் கருவியை (SHAPE) கொண்டு பூமிக்கு அருகில் இருப்பதையும் ஆராய்ந்து அதன் விவரங்களை சேகரிக்கவுள்ளார்கள். இந்த முயற்சியினால்  பூமியின் பாதைக்குத் திரும்பி வரக்கூடிய ஒரு வாகனத்தைச் செலுத்துவதில் இருக்கும் சிக்கல்களை இஸ்ரோவுக்கு கற்றுக் கொடுக்கும், வருங்காலத் திட்டங்களுக்குப் பாடமாக அமையும் -அதுவும் இலவசமாக (என்று நினைக்கிறேன்).
இது எதுவும்  சந்திரயான்-3  திட்டத்தில் இடம்பெறவேயில்லை என்பது தான் சிறப்பு – எரிபொருள் கையில் இருக்கிறது என்று தெரிந்தவுடன், அவசரமாக யோசித்து, புதிய திட்டத்தைச் சில நாட்களில் வடிவமைத்து இதைச் செய்துள்ளார்கள். இதற்காகவே  புத்தம் புதிய மென்பொருள் நிரல்களை எழுதியிருக்கிறார்கள். ஆச்சரியமாக இருக்கிறது. இதற்காகவே இவர்களுக்கு இந்திய அரசின் உரிய விருதுகள் கொடுக்கப்பட வேண்டும்.
இது இந்தியப் பொறியாளர்களின் மென்பொருள் திறமையின் எடுத்துக்காட்டு என்று பிரிட்டனிலிருந்து வரும் தி ரிஜிஸ்டர் பத்திரிகை பாராட்டியுள்ளது.
[7 டிசம்பர் 2023, அன்று இந்தப் பதிவைத் திருத்தியுள்ளேன், பூமியில் தரையிறங்கும் என்று முன்னர் தவறாக எழுதியிருந்தேன், பூமியின் பாதைக்குத் திரும்பும் என்பது தான் சரி. மன்னிக்கவும்].

Tagged in:

, ,