இந்தியர்கள் சிங்கப்பூருக்குச் சென்றால் லிட்டில் இந்தியாவுக்குச் சென்றாக வேண்டும். அங்கே சென்றவுடன் சேரங்கூன் சாலையில் இருக்கும் அருள்மிகு வீரமாகாளியம்மன் கோயிலுக்கு அல்லது ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் கோயிலுக்குச் சென்று தரிசனம் செய்கிறோமோ இல்லையோ கட்டாயம் செல்ல வேண்டியது முஸ்தபா பல்பொருள் அங்காடிக்கு, அங்கே சுற்றிச் சுற்றி களைப்பான பிறகு (சாப்பாட்டில்) ஒரு கட்டுக்கட்டப் போக வேண்டியது கோமள விலாஸ் சைவ உணவகத்துக்கு.

நமக்குத் தேவையோ இல்லை முஸ்தபாவில் விற்கப்படும் பல்லாயிரம் பொருட்களில் எதையாவது வாங்கி நமது பெட்டியில் இடமில்லாமல், கஷ்டப்பட்டு அதிக எடையைத் தூக்கிக் கொண்டு இந்தியா வர வேண்டும். இதைச் செய்யாவிட்டால் சிங்கப்பூர் சாமி குத்தமாகிவிடும். இந்த முஸ்தபாவில், பொம்மையிலிருந்து நகைகள் வரை எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும், இரண்டு மூன்று தெருக்களைக் கடந்து செல்லும் வணிகக் கடல் இது. ஒரு காலத்தில் சிங்கப்பூருக்குச் சென்றபோதெல்லாம் நான் இங்கேயே குடியிருந்திருக்கிறேன், இந்த முறைப் போன போது ஒரு தண்ணீர் புட்டி, அதுவும் நகை பகுதியில் இலவசமாகக் கொடுத்தார்கள், வேறு எதுவும் வாங்கவில்லை. எல்லாமே நமது சிங்கார சென்னையில், அமேசான் இணையக் கடையில் கிடைக்கிறது. அதோடு இந்தியாவில் விலை மட்டாக இருக்கிறது, அவர்களே நம் வீட்டுக்குக் கொண்டு வந்து கொடுக்கிறார்கள், பின் எதற்குத் தூக்கிக் கொண்டு வர வேண்டும்? நம் பாரதப் பிரதமரும், தமிழக முதல்வரும் கூட இந்தியாவில் வாங்கவும், தமிழகத்தில் வியாபாரம் செய்யவும் என்று கதறுகிறார்கள், அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டுமே!

நினைவில் கொள்க ஒரு சிங்கப்பூர் வெள்ளி, 62 இந்திய ரூபாய்! அதனால் எல்லாமே சிங்கப்புரில் இந்திய ரூபாய்க்கு விலை அதிகம் தான்.

Mustafa Jewellery, Singapore

Mustafa Jewellery, Singapore

Camera section - Mustafa Centre, Singapore

Camera section – Mustafa Centre, Singapore

Watch section - Mustafa Centre, Singapore

Watch section – Mustafa Centre, Singapore

முஸ்தபாவில் சுற்றிக் களைத்தவுடன் சாப்பிடச் செல்லத் தனது புதிய கிளையைத் திறந்திருக்கிறது கோமள விலாஸ். பழைய முஸ்தபா நகைக் கடையிருந்த இடத்தில் இப்போது சென்டரியம் ஸ்கோயர் என்கிற வணிக வளாகம் வந்திருக்கிறது – அதில் நமக்குப் பழகிய தனிஷ்க், மலபார், ஜோய்அலுக்காஸ் என்று பல நகைக் கடைகள் கண்ணில்படும், மனதைக் கட்டுப்படுத்தி, சாப்பாடே குறி எனச் சாலையைக் கடந்தால் எதிரில் தெரியும் இந்த புதிய கோமள விலாஸ் சைவ உணவகத்தின் கிளை. வழியில் A2B உங்களை இழுக்கும், அங்கேயும் நல்ல உணவு கொடுப்பார்கள் ஆனால் காலை உணவு, தோசை சாப்பிடச் சிறந்த இடம் அது, அதனால் A2Bயை தவிர்த்து மதிய உணவுக்குப் பெயர் போன கோமள விலாஸ் போகவும். இரண்டு வாரங்களுக்கு முன் நானும் மனைவியும் போன போது ஓர் ஆந்திரா மீல் (SGD 12.50), அதோடு ஒரு வெஜிடபுள் பிரியாணி (SGD 12) சாப்பிட்டோம்.

ஓர் எச்சரிக்கை: கோமள விலாஸ்ஸில் வாழை இலையில் மதிய உணவு என்பது ஒரு மயக்க வஸ்து, சாப்பிட்டவுடன் என்னதான் நீங்கள் மதியத்தில் தூங்கவே தூங்காத வீரர் என்றாலும் உங்களின் கண்கள் சொருகி, தூங்கிவிடுவீர்கள். என்ன முக்கிய வேலையென்றாலும் அதை ஒதுக்கி ஒரு அரை மணி நேரச் சக்தி உறக்கம் உறங்கி உங்களைப் புதுப்பித்து சிங்கப்பூரில் இருக்கும் மற்ற இடங்களைப் பார்க்கவும். இந்த மதிய உணவை என் பயணங்களில் பல முறை சாப்பிட அனுபவத்தில் சொல்கிறேன், அலட்சியம் செய்ய வேண்டாம்.

Komala Vilas, Singapore - Menu

Komala Vilas, Singapore – Menu

Vegetable Biryani - Komala Vilas

Vegetable Biryani – Komala Vilas

Andhra Meal - Komala Vilas Vegetarian Restaurant, Singapore

Andhra Meal – Komala Vilas Vegetarian Restaurant, Singapore

Komala Vilas Vegetarian Restaurant, Singapore - Menu

Komala Vilas Vegetarian Restaurant, Singapore – Menu

#singaporefoodies #serangoonroad #komalavillas #singaporemustafa #singaporeshopping #littleindiasingapore

Tagged in:

, ,