சில நாட்களுக்கு முன் நண்பர் திரு செல்வ முரளி, பிபிசி இந்தியாவில் தான் எழுதும் ஓர் கட்டுரைக்கு என் பேட்டியைக் கேட்டார். தலைப்பு கணினி துறையில் இன்றைக்கு இருக்கும் ‘வேலைக்கு சரியான ஆட்கள் இல்லை’ என்கிற நிலையைப் பற்றி. “இஞ்ஜினியரிங் படிக்காமலேயே சாஃப்ட்வேர் இஞ்ஜினியர் ஆவது எப்படி?” என்றத் தலைப்பில் முழுக் கட்டுரையும் இன்று வெளிவந்தது.

திறமையானவர்கள் சம்பளம் அதிகம் கேட்கிறார்கள், இன்னொரு பக்கம் கல்வித்தரம் குறைவாக இருப்பதால் பல்லாயிரம் பொறியாளர்கள் படித்து வந்தாலும், அவர்களில் பலர் நிறுவனங்களால் தேர்வு செய்யப்பட முடியாத அளவுக்கு இருக்கிறார்கள். உண்மையில் என்னதான் நடக்கிறது?

இதுதொடர்பாக சென்னையை சேர்த்த மென்பொருள் ஆலோசகரும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கௌரவ மேலாண்மை இயக்குநருமான தி.ந.ச.வெங்கடரங்கன் கூறியதாவது:

இனி எதிர்காலம் ‘No Code Low Code’:

“கொரோனா காலத்தில் இரண்டு வருடமாக பல தொழில்கள் முடங்கிவிட்டன. ஆகையால் ஒட்டுமொத்தமாக பார்க்கும்போது பல்வேறு துறைகளிலும் புதிய வாய்ப்புகள் குறைவாக இருந்தன. இப்போது கொரோனாவின் தாக்கம் குறைந்துவிட்டதால் எல்லா நிறுவனங்களும் இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கிவிட்டன. ஆகையால், நிறைய வேலை வாய்ப்புகள் உருவாகி வருகின்றன. அதே சூழ்நிலையில் கொரோனா காலக்கட்டத்தை நிறுவனங்கள் தங்களை மீண்டும் மறு பரிசோதனை செய்துகொள்ளும் ஒரு வாய்ப்பாக எடுத்துக்கொண்டன. எல்லா பெரு நிறுவனங்களும் புதிய நுட்பங்களில், முக்கியமாக எண்ணிமத் தொழில்நுட்பங்களில், எந்திரவழிக் கற்றலில் முதலீடு செய்தார்கள். இதோடு பல புத்தொழில்களும் ஆரம்பிக்கப்பட்டன. அவற்றுக்கு வானளவு முதலீடுகளும் வந்து குவிந்தன. அதனால் மென்பொருள் உருவாக்கம் முன்னெப்போதுமில்லாத அளவுக்கு அதிகரித்தது.”

இதனால் மென்பொருள் வல்லுநர்களின் தேவை அதிகரித்த வண்ணம் உள்ளது. மறுபுறம் திறமையான பணியாளர்களை அவர்கள் அதிக சம்பளம் கேட்டாலும் கார்ப்பரேட் நிறுவனங்கள் பெரிதும் யோசிக்காமல் அவர்களை வேலைக்கு எடுத்து வருவதால் அது சிறிய நிறுவனங்களுக்கு மிகுந்த சிரமத்தை ஏற்படுத்தி வருவதை பார்க்க முடிகிறது.

“மென்பொருள் வேலை என்றாலே பொறியாளர்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள்.” அப்படியென்றால் இந்த பிரச்னைக்கு உடனடி தீர்வே இல்லையா என்று கேட்கிறீர்களா? ஆம், இருக்கிறது என்கிறார் வெங்கடரங்கன்.

“மென்பொருள் வேலை என்றாலே பொறியாளர்களால் மட்டும் தான் முடியும் என்று நினைக்கிறீர்களா? அப்படியென்றால் அந்த எண்ணத்தை மாற்றிக்கொள்ளுங்கள். எந்த செயற்கை நுண்ணறிவு நுட்பங்களை உருவாக்க மென்பொருள் வல்லுநர்கள் அதிகமாக தேவைப்படுகிறார்களோ, அதே தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மென்பொருள் உருவாக்கம் என்பது, கடந்த சில ஆண்டுகளாக சுலபமாகி வருகிறது. இதில் இந்தியாவில் இருக்கும் சில புத்தொழில்களும் கூடப் பல முன்னேற்றங்களை செய்துக் கொண்டு வருகிறார்கள். இன்றைக்கே மென்பொருள் நிரல்களை (கணினி நிரல்) பொறியாளர்களால் எழுதப்படமாலே, செயலிகளை நாம் எவ்வளவு எளிதாகப் பயன்படுத்துகிறோமோ அதுப் போலவே சுலபமாக மென்பொருளை உருவாக்க முடியும். இந்த நுட்பங்கள் அதிவேகமாக வளர்ச்சியடைந்துக் கொண்டேயிருக்கிறது.

இதனால் அடுத்த 10 ஆண்டுகளில், என் கணிப்பின்படி, அதிகமான மென்பொருட்கள் நிரல்களை எழுதாமலே உருவாக்கப்படும். மீதமுள்ள, மிகவும் சிக்கலான, கடினமான மென்பொருட்கள் மட்டும் தான் மனிதர்களால் நிரல்கள் பக்கம் பக்கமாக எழுதி உருவாக்கப்படும்.

இந்த சூழ்நிலைக்கு நம் உள்ளூர் நிறுவனங்கள் இப்போதே தயாராகி, நிரல் இல்லா மென்பொருள் உருவாக்கத் (No Code, Low Code) தொழில்நுட்பகளில் முதலீடு செய்து, அதில் அவர்களின் பணியாளர்களை பயிற்றுவிக்க முடியும். இதன் மூலம் கணிப்பொறியி்யல் மட்டுமின்றி பட்டயப்படிப்பு, கலை அறிவியலில் கல்லூரிப்படிப்பு முடித்தவர்கள் கூட திறம்பட மென் பொருட்களை உருவாக்க முடியும். சுருங்க சொன்னால் புதியதை கற்றுக்கொள்ளும் மனப்பான்மை மட்டுமே போதும். எல்லோரும் பொறியாளர்களாய் இருக்க வேண்டியதில்லை. எல்லோருக்கும் பொறியியல் பாடங்கள் புரியாது, பிடிக்காது. கொஞ்சம் புத்திசாலித்தனம், கொஞ்சம் ஆர்வம் இருந்தாலே எவராலும் மென்பொருட்களை உருவாக்க முடியும்.

பொறியாளர் இல்லாத மென்பொருள் துறை:

இந்த புதிய (பொறியாளர் அல்லாத) மென்பொருள் வல்லுநர்களை உருவாக்கும் திட்டத்தினை அரசே முன்னெடுத்து சென்றால் அருமையாக இருக்கும். இது சாத்தியம் என்று மாணவர்களுக்கு, தமிழ்நாட்டு புத்தொழில்களுக்கு அரசு எடுத்துக்காட்டலாம். இதில் சில ஆரம்ப சிக்கல்கள் வரும், அதை நம் முயற்சியாலும், திட்டமிட்ட செயல்பாடுகளாலும் நாள்தோறும் வளர்ச்சியடைந்து வரும் தொழில்நுட்பத்தாலும் எளிதில் கடந்துவிடலாம். இது தான் வருங்காலம் என்பதை புரிந்துகொள்ள வேண்டிய தருணம் இது.

கணித சூத்திரங்கள் இல்லாமல், நிரல்கள் இல்லாமல் மென்பொருட்களை எப்படி உருவாக்கலாம் (No Code, Low Code) என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும்.

கடந்த முப்பது ஆண்டுகளில் கணினித் துறையில் பொறியாளர்கள் மட்டும் தான் வேலை செய்ய முடியும், அதனால் அதிகளவு கணிப்பொறியாளர்களை உருவாக்க வேண்டும் என்பதைக் கடந்து, எல்லோரும் அவரவர் துறையைக் கற்பதோடு, கணித சூத்திரங்கள் இல்லாமல், நிரல்கள் இல்லாமல் மென்பொருட்களை எப்படி உருவாக்கலாம் (No Code, Low Code) என்பதைக் கற்றுக் கொள்ள வேண்டும். இது காலத்தின் கட்டாயம்.

தொலைநோக்கு சிந்தனையுடன் கூடிய கூட்டுமுயற்சி:

மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்ப, தொலைநோக்கோடு சிந்தித்து அரசாங்கம், தொழில்துறை நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகியவை ஒன்றிணைந்து காலத்துக்கு ஏற்றார்ப்போல் பாடத்திட்டத்தை, நிறுவனங்களின் செயல்பாட்டை மாற்றியமைக்க வேண்டிய நேரமிது” என்று அவர் கூறுகிறார்.

[Thanks to BBC News Tamil and Mr Selva Murali]

Categorized in:

Tagged in:

, ,