சிறிய உதாரணம், நிறுவனங்களுக்கான மென்பொருள், குறுஞ்செயலி விசயமாக 1000 இந்திய தலைமை செயல் அதிகாரியை நம்மால் (எப்படியும்) சந்தித்துவிட முடியும். ஆனால் ஒரு 10 லட்சம் பேரை சென்றடைய வேண்டுமெனில் நம்மால் செய்யமுடியுமா? எனவே B2C துறையில் நாம் மிகுந்த அனுபவத்தினை பெறவேண்டும்.

இன்று நண்பர் திரு செல்வ முரளி என்னைத் தொடர்பு கொண்டு பத்திரிகை.காம் இணையத்தளத்திற்காக ஒரு பேட்டி எடுத்தார், அதில் அவர் என்னைக் கேட்ட கேள்வி “சமீபத்தில் பிரபலமாக இருக்கும் டிக்-டாக் போன்ற செயலிகள் எதுவும் ஏன் இந்தியாவில் தயாரிக்கப்படுவதில்லை?“, அதற்கு அந்தக் கட்டுரையில் நான் கூறிய பதில் கீழே:

//தொழில்நுட்ப முனைவு எல்லாமே பி2பி (B2B – ஒரு நிறுவனம் இன்னொரு நிறுவனத்திற்கு) நிறுவனங்கள் இருக்கிறது. தகவல் தொழில்நுட்ப துறையில் உள்ளவர்கள் இணைந்து  தொழில் துறைக்குத் தேவையானவற்றை உருவாக்குகிறார்கள், ஆனால் உண்மையில் தேவை, B2C எனப்படும் நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்பதில் தான் இருக்கிறது.

நம்முடைய மென்பொருள், குறுஞ்செயலி போன்றவற்றினை உருவாக்கிட நம்மிடையே உள்ள தயாரிப்பு மேலாளர்களுக்கு (Product Managers) B2B முறையில்தான் அனுபவம் இருக்கிறது, ஆனால் B2C எனப்படும் நிறுவனத்திலிருந்து வாடிக்கையாளர்களுக்கு என்ற துறையில் அனுபவம் குறைவு.  சிறிய உதாரணம், நிறுவனங்களுக்கான மென்பொருள், குறுஞ்செயலி விசயமாக ஒரு ஆயிரம் (இந்திய) தலைமை செயல் அதிகாரிகளை நம்மால் சந்தித்துவிட (அதன் பின் அதில் ஒரு நூறு பேருக்கு விற்கவும்) முடியும். ஆனால் நமது செயலியை ஒரு பத்து லட்சம் பேரை சென்றடைய வேண்டுமெனில் நம்மால் செய்யமுடியுமா?

எனவே B2C துறையில் நாம் அனுபவத்தினைப் வளர்த்துக் கொள்ள வேண்டும். புதியதாகத் தயாரிப்பு மேலாளர் என்ற வேலையை உருவாக்கப்படவேண்டும், அவ்வாறு உருவாக்கப்பட்டு, அவர்கள் இன்னமும் பல பேருக்குப் பயிற்சி அளிக்கும்போது நமக்கு மிகச்சிறந்த செயலிகள் கிடைக்கும்.

சந்தைப்படுத்துதல்
ஒரு செயலிக்கு ஒர் வாடிக்கையாளரை பெற மார்க்கெட்டிங் செலவு 2-3 டாலர் (ரூபாய் 140-210) ஆகிறது, அப்படியெனில் 10 லட்சம் பேரை சென்றடைய தேவைப்படுவது 20 லட்சம் டாலர் , 1 மில்லியன் பேரை சென்றடைய தேவைப்படுவது 3 மில்லியன் டாலர், இந்த பெரும் தொகையை சிறிய நிறுவனங்கள் எப்படித் திரட்டிட முடியும்?

பிராண்டிங்
இந்தியாவில் பிரமாதமான பொருட்கள் இருந்தாலும், அவர்கள் கோட்டை விடுவது சந்தைப்படுத்துவதிலும், பிராண்டிங்கிலும் தான். ஆப்பிள் நிறுவனத்தைப் பற்றி இந்தியாவில் கேட்டால் அதன் பெயர் எல்லாருக்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவர்களி தயாரிப்பை வாங்கும் ஆட்கள் மிகக்குறைவு தான். இந்தியாவில் டாடா நிறுவனத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் நிறுவனங்களின் பெயர்கள் நமக்குத் தெரியுமா? என்றால் கிடையாது. ஆனால், வெளிநாட்டுத் தயாரிப்புகள் நம்மிடையே எப்படியும் வந்து சேர்க்கின்றது – ஹெலோ, வாட்ஸ்அப், பேஸ்புக் எல்லாமே தங்களின் பிராண்டிங் / விளம்பரப்படுத்துதலால் மக்களிடையே சென்று சேருகின்றன. இந்தியர்கள், பிராண்டிங்கை கவனமாகக் கற்றறிந்தால் நமக்கும் பெரிய சந்தை காத்திருக்கிறது.

இந்த விசயத்தில் அமெரிக்க நிறுவனங்கள் சிறந்து விளங்குகிறது, உலகமெங்கும் தங்கள் சேவைகளை இலவசமாகக் கொடுத்து வாடிக்கையாளர்களைப் பெறுகின்றன. இப்போது, சீனா அமெரிக்காவை பார்த்து வேகமாக கற்றுக்கொண்டு வருகிறது. அதனால்தான் நம்மிடையே ரெட் மீ (Redmi) பொன்றவை பிரபலமாகியிருக்கிறது.

இந்திய மக்களின் எண்ணம்
இங்கே நிச்சயமாக மக்கள் கொஞ்சமாவது தங்களின் (பழைய) மனநிலையை மாற்றிடவேண்டும். சமீபத்தில் சிங்கப்பூர் சென்றபோது, உறவினர் டைகர் பாம் வாங்கி வாங்க என்றார், நானும் வாங்கிக்கொடுத்தேன், பார்த்தால் அதில் மேட் இன் இந்தியா (Made in India) என்று இருந்தது. என்னதான் இந்தியாவில் உற்பத்தி செய்தாலும் வெளிநாட்டில் இருந்து வந்தால் தான் அதற்கு சிறப்பு என்ற எண்ணம் நம் மக்களிடையே இருக்கிறது. அது மாறவேண்டும். உள்ளூரில் விலை போகாதது எப்படி வெளியூரில் விலை போகும்?

சீன பொருட்கள் இந்தியாவில் தான் அதிகம், ஏன் சீனா திடீரென இந்தியாவில் அதிக முதலீடு செய்கிறது என்றால் சீனாவிற்கு வெளியே அதிக மக்கள் தொகையுள்ள நாடு இந்தியாதான், எனவே தம் பொருட்களை இந்தியாவில் எல்லாரிடமும் கொண்டு சேர்க்க அவர்கள் சந்தைப்படுத்துகிறார்கள். ஆனால் நாம் அதைச் செய்வதில்லை, இந்த விசயத்தில் நாம் சீனாவை விட 10-20 வருடம் பின்தங்கியிருக்கிறோம்.
//

நன்றி, திரு செல்வமுரளி மற்றும் பத்திரிகை.காம்

Tagged in: