“பல்லிசாமியின் துப்பு” என்கிற தலைப்பைப் பார்த்தவுடன் இதுவும் துப்பறியும் சாம்புவைப் போன்று ஒரு நகைச்சுவைச் சிறுகதைத் தொகுப்பாக இருக்கும் என நினைத்தேன். முதல் சில சிறுகதைகளைப் படித்தவுடனேத் தெரிந்துவிட்டது என் கணிப்பு தவறு என்று.

தமிழில் வந்த நகைச்சுவைக் கதைகளில் இன்றும் அதிகமாக பேசப்படுவது எழுத்தாளர் தேவன் அவர்களின் “துப்பறியும் சாம்பு“. அதில் ஒரு ஆஃபிஸ் குமாஸ்தாவாய் இருந்தவர் தனது திடீர் அதிர்ஷ்டத்தால், மற்றவர்களால், கண்டுப்பிடிக்க முடியாத பலத் திருட்டுக்களை சுலபமாகத் துப்புத்துலக்கி விடுவார். என் பையன் குழந்தையாக இருந்தப் போது அவனுக்கு இந்தக் கதைகள் மிகப் பிடிக்கும், பல நாட்கள் புதுக் கதைகளை நானே என் கற்பனையில் இட்டுக்கட்டிச் சொல்வேன். ஆனந்த விகடனில் பல ஆண்டுகள் (1942-1957) நிர்வாக ஆசிரியராக இருந்தார் திரு தேவன் அவர்கள். தமது நாற்பத்து நான்கு வயதிலேயே இறைவனடி எய்தினார், சுமார் இருபது ஆண்டுகளிலேயே எப்படி இவ்வளவு கதைப் படைப்புகளை அவரால் எழுத முடிந்தது என்பது ஆச்சரியம் தான்.

    1. அல்லயன்ஸ் கம்பெனி வெளியீடானப் “பல்லிசாமியின் துப்பு” சிறுகதைத் தொகுப்பில் முதலில் வருவது, ஒரு அற்ப பொருள் காணாமல் போக, அதைத் துப்புத் துலக்கும் கதை தான் – அதைப்படிக்கும் போது 2010ம் ஆண்டு வெளிவந்த நடிகர் சூர்யாவின் சிங்கம் படத்தில் நடிகை அனுஷ்கா வரும் ஒரு காட்சி இதிலிருந்து வந்தத் தழுவலோ என்று எண்ணவைக்கிறது. இந்தக் கதைக்கு அடுத்து வரும் இருபத்தியாறு கதைகள் ஒவ்வொன்றும், வெவ்வேறு சுவைகள், பலவித உணர்ச்சிகளைக் கொண்டவையாக இருந்தது. எழுத்தாளர் ஒருவர் எப்படி இவ்வளவு வகையான கதைகளை சிந்திக்க முடியும் என்று வியப்பாக இருக்கிறது.
    2. வாசகர்கள் என்றப் பெயரில் பல எழுத்தாளர்களின் உயிரை எடுக்கும் போக்கை வருத்தப்பட்டு காட்டியுள்ளார் ‘புதிய சிநேகிதர்’யில், தேவன் இன்று வாழ்ந்திருந்தால் சமூக வலைத்தளங்களில் என்னப்பாடுப்பட்டிருப்பாரோ? தொடர்ந்து, கதைகளை எழுதிப் பிரசுரமாகாமல் திரும்பி வரும் போது ஏற்படும் கோபத்தை வெளிப்படும் கதை ‘நான் எழுதிய நவீனம்’. ஒருவரின் கையெழுத்துக் கோணலாக இருந்தாலும் தலையெழுத்து நன்றாக இருந்தால் உச்சிக்கு செல்வதாய் சொல்லும் ‘கையெழுத்தும் தலையெழுத்தும்’. இன்று பயனாளர் சேவை என்று இல்லாத ஒன்றை இருப்பதாய் காட்டும் செல்பேசி மற்றும் மின்னணு சாதன நிறுவனங்களையும் நினைவுப்படுத்தும் ‘வர வர மாமியார்’ என்கிற தட்டச்சு இயந்திரம் பற்றியக் கதை. உறவினர்கள் என்கிற ‘பணப் பேய்கள்’.
    3. நல்ல சமையல்காரர்கள் வேலைக்குக் கிடைப்பது, இன்றும் அன்றும் என்றும் சிரமம் தான், அதை நறுக்கென்றுக் காட்டும் ‘ஒரே ஒரு வார்த்தை’. கருமியான மாமா நாராயணா அய்யர் அவரின் ‘போட்டோ மர்மம்’ என்கிற சாமர்த்தியம். கணவர் வீட்டிலேயே இருந்தாலும் தவறு, வெளியிலேயே சுற்றினாலும் தவறு என்கிற மனைவிகளின் ‘நமக்குப் புரியவில்லை’. தந்திரமாக புத்தகங்களை விற்கும் ‘மோசக்கார மச்சுனன்’.நல்ல டாக்டர் என்கிற கதை, இயக்குநர் ஸ்ரீதர் அவர்களின் ‘நெஞ்சில் ஓர் ஆலயம் (1962)‘ திரைப்படத்தை நினைவுப்படுத்தியது.
    4. புத்திசாலித்தனமாகத் திருடும் ‘நிலவில் நடந்த நாடகம்’. சாதாரண கிராமத்தை சுற்றலாத்தளமாக மாற்றிய ‘அதிசயம் நடந்தது’. ஜோதிடம் கேட்டதால் ‘வேண்டாம் விடுதலை’ என்கிறான் ஒரு கைதி. பெரிய மனிதர்களின் தொடர்புக்காக அலையும் ‘தெரியாத பேர் இல்லை’ ராமண்ணா. புருஷர்களை வைக்கிற இடத்தில் வைக்கும் மனைவியான லலிதாவின் ‘வெகுமதி வைர மோதிரம்’.
    5. வெளித்தோற்றமும், மார்க்கேட்டிங்கும் தான் ஒரு பொருளின் மீது நாம் வைக்கும் மதிப்பை தீர்மானிக்கிறது என்றுக்காட்டும் ‘கண்டெடுத்த முத்து மாலை’. பொன்னுரங்கக் கவுண்டரின் மகனான செல்வநாயகம், அவனின் உறவுக்காரப் பெண்ணான சுகுணா இருவரின் காதல் கதை ‘நம்பிக்கை துரோகம்’. அடுத்தவர் பேச்சைக் கேட்டு நம் படைப்பை நாம் மாற்றிக் கொண்டேயிருந்தால் எதுவும் நடக்காது என்கிற ‘உபயோகப்பட்டது’. தினம் ஒரே வழியில் ஆபிஸ்ஸுக்கு போகாமல் மாற்றிப் போனதால், வாழ்க்கையே மாறிய ‘போகாத வேளை’. பெற்றவர்கள் இல்லாமல், நடிக்க வரும் நடிகைகளின் வாழ்க்கையைப் பரபரப்பாகச் சொல்கிறது ‘வளையும் பயிர்’.
    6. நமக்கு கீழ் வேலை செய்பவர்களுக்கு நாம் தான் பொறுப்பு, நமது தவறான உத்தரவால், அவர்களுக்கு என்ன நடக்கும் என்பதை, இரயில் விபத்தை மையமாக வைத்து விளக்கும் ‘வீரபாகுவின் சஞ்சலம்’. என்றைக்கும் நல்லது தோற்காது, துரோகம் ஜெயிக்காது என்பதை, ஒரு மிகப் பெரிய சோகத்தைத் தொடர்ந்து ஒரு அழகானக் காதல் வரலாம் என்பதை சொல்லும் ‘பெண் புலி’ – இந்த சிறு கதையைக் கொண்டு ஒரு முழுநீள சினிமாவையே எடுக்கலாம், அவ்வளவு உணர்ச்சிகளை இதில் கொடுத்துள்ளார் தேவன். சாது மிரண்டால் காடுக் கொள்ளாது என்கிற பழமொழிக்கு உதாரணமாக, உழைத்து முன்னுக்கு வந்தவர்களைப் பார்த்தால் உறவுக்காரர்கள் பொறாமை தான் படுவார்கள் என்பதைக்காட்டும் ‘கோமதிக்கு வந்த கோபம்’. ஒரு சின்னப் பையன் தன் நடிப்பால், எப்படி நடிகையான தன் அக்காவையும் அவளின் காதலனையும் சேர்த்து வைக்கிறான் என்கிற ‘நடிகன் நாராயணன்’. எவ்வளவு புத்திசாலித்தனமாக செய்தாலும், பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான் என்பதைக் காட்டும் போலீஸ்-திருடன் கதை, சிங்கப்பூர் செல்வராஜின் ‘வைரமும் கண்ணாடியும்’. நண்பனின் பகை தான் ஆபத்தானது, நண்பர்களில் அவன் எவன் என்பதை சாதுரியமாகக் கண்டுப்பிடிக்கும் ‘குற்றவாளி யார்’.
திரு தேவன் அவர்களின் "பல்லிசாமியின் துப்பு"

திரு தேவன் அவர்களின் “பல்லிசாமியின் துப்பு”

தமிழ் வாசகர்கள் கட்டாயம் படிக்க வேண்டிய நூல் திரு தேவன் அவர்களின் “பல்லிசாமியின் துப்பு” சிறுகதைத் தொகுப்பு. அவரின் “ராஜத்தின் மனோரதம்” என்கிற புத்தகத்தைப் பற்றிய என் பதிவு இங்கே.

Categorized in:

Tagged in:

,