இந்த படத்தின் (பண்ணையாரும் பத்மினியும்) பெயரைக் கேள்விப்பட்டதில் இருந்து இதைப் பார்க்க வேண்டும் என ஒரு ஆர்வம். போன வாரம் வெள்ளியன்று விஜய் சேதுபதி நடித்த ரம்மி  பார்த்தேன் என்றால் இந்த வெள்ளியன்று விஜய் சேதுபதி (Vijay Sethupathi) நடித்த இன்னொரு படமான பண்ணையாரும் பத்மினியும் பார்த்தேன், இதனால் நான் ஒன்றும் விஜய் சேதுபதியின் தீவிர ரசிகன் என்று எண்ண வேண்டாம். நிற்க!

தமிழ் சினிமாவிற்கு அதியசமாக இந்த படத்தில் வில்லனோ, அடிதடியோ, கிளாமரோ, மேஹா சிரியல் அழுகாச்சியோ, ஹீரோயிசமோ எதுவுமில்லை.  இதையெல்லாம் விடுத்து ஒரு தமிழ் படம் எடுத்தாலும் முதல் நாள் திரையரங்கிற்கு முழுக்காட்சி கூட்டத்தை வரவைக்க முடியும் என்று காட்டியதற்கு முதல்பட இயக்குனர் அருண் குமாருக்கு வாழ்த்துக்கள். அதே போல பண்ணையார் என்றாலே (எம்.ஜி.ஆர் எங்கள் வீட்டு பிள்ளை நம்பியார்) அவர்கள் கெட்டவர்கள், ஏழைகளை அடித்து சாப்பிடுபவர்கள் என்றில்லாமல் ஒரு நல்ல மனிதராக இந்த படத்தின் பண்ணையார் வருகிறார்.  படத்தை நான் பார்த்தது சத்யம் திரையரங்கில் மாலைக்காட்சிக்கு, அங்கே பலக்காட்சிகளில் விசில் வந்தற்கு காரணம் விஜய் சேதுபதி.

ரம்மிப் போலவே விஜய் சேதுபதிக்கு இதிலும் ஜோடி ஐசுவர்யா ராஜேஸ் (Aishwarya Rajesh), இதில் தன் பங்கு குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்துள்ளார். படத்தின் உண்மையான கதாநாயகன் அதில்வரும் பச்சை நிற ப்ரிமியர் பத்மினி கார் தான். ஒரு காரை எப்படி உறுகி உறுகி துடைக்க முடியும், உயிருள்ள ஒரு குழந்தைப் போல அதன் மீது அன்பு வைக்க முடியும் என்பதை நேரயடியாக நான் என் பள்ளிகாலங்களில் திருச்சியில் இருக்கும் என் பெரியப்ப  மகனிடம் பார்த்திருக்கிறேன்.  அதனால் படத்தில் வரும் பண்ணையாரின் கார் மீதான காதலை உணர முடிகிறது.

காதல் பாட்டு என்றாலே 18வயது  ஹீரோயின் தான் இருக்க வேண்டும் என்றில்லாமல், காதல் என்ற உணர்ச்சி ஐம்பது அல்லது அறுபது வயதிலும் கணவன் மனைவியிடம் கூட வரலாம், அவர்களும் காதல்பாட்டுப் பாடலாம் என்பதை அழகாகக்காட்டிகிறார் இயக்குனர். அந்தப் பாத்திரங்களை மிக இயல்பாக செய்துள்ளார்கள் ஜெயப்பிரகாஷ் (பண்ணையார்) மற்றும் துளசி (பண்ணையார் மனைவி). காமெடிக்காக வரும் பால சரவணன், பீடை என்ற பாத்திரத்தில் பொருத்தமான இடங்களில் நம்மை சிரிக்கவும் அதை ரசிக்கவும் வைக்கிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையில் பாடல்கள் நம்மை முணு முணுக்க வைக்கிறது.

Pannaiyarum Padminiyum (2014)

Pannaiyarum Padminiyum (2014)

Categorized in:

Tagged in:

, ,