#கிளப்ஹவுஸ், நானும் வந்துவிட்டேன். பேசி பேசியே பொழுதைப் போக்குபவர்கள் நாம், அதனால் பேச (கேட்பவர்கள் எவ்வளவு பேர் என்று தெரியாது) இன்னுமொரு மேடையா? என்று தயங்கிக் கொண்டிருந்தேன். ஆனால் இன்று என்னை(யும்) பேச அழைத்து, இழுத்து வந்துவிட்டனர் சில நலன்(!) விரும்பிகள்.

என் முதல் #கிளப்ஹவுஸ்ஸில் பேசிய அனுபவம். இன்று (17 ஜூலை) மாலை 7 மணிக்கு (இந்திய நேரம்) SICCI நடத்திய “தமிழுக்கான தொழில்நுட்பத் தேவைகள்” என்ற தலைப்பில் பங்கெடுத்து, கேட்டவர்களுக்குப் பயனளிக்கும் விதமாக இரண்டொரு விசயங்களைச் சுருக்கமாகச் சொல்லி, நிறையக் கேட்டுத் தெரிந்துக் கொண்டேன். அமைப்பாளர்களுக்கு நன்றி.

நான் சொல்லியவை:

  1. முப்பது வருடங்களாகக் கடின முயற்சியால் இன்று கணினியும், இணையமும் இயல்பாகத் தமிழ் பேசுகிறது. நிற்க. இந்த நெடியப் பயணத்திலிருந்து எது வேலை செய்தது, எந்த முயற்சிகள் தோல்வியடைந்தது என்பதை எடுத்துக் கொண்டு, எழுத்துரு, விசைப்பலகை, வருடி (Scan), பேச்சு, மொழிப் பெயர்ப்பு என்ற நிகழ்காலத்தில் வந்துவிட்ட தொழில்நுட்பங்களை விட்டுவிட்டு, அடுத்த இருபது வருடங்களில் (2040) வரப் போகும் தொழில்நுட்ப சாத்தியங்களுக்கான (AR/VR/Robotics/NanoTech) இயக்க/வசதியானவற்றைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
  2. SICCI போன்ற தொழில்துறை அமைப்புகள், கல்வி (உ.த.: தமிழ் இணையக் கழகம்), மற்றும் தன்னார்வ நிறுவனங்களால் (உ.த.: உத்தமம்) செய்ய முடியாததைச் செய்ய முயல வேண்டும். [அரைத்த மாவையே அரைக்கக் கூடாது]. தற்போது தமிழை அவர்களின் கணினிகளில்/கருவிகளில் செயல்படுத்த இருக்கும் சிக்கல்கள் என்ன என்பதைத் தமிழகத்தில் /இந்தியாவில் இருக்கும் நிறுவனங்களைக் கேட்டு, அவற்றைத் தொகுத்து ஒரு ஆய்வை வெளியிடலாம். அவற்றில் இருந்து இரண்டொரு சிக்கல்களின் விடைகளுக்கு செயல்வடிவம் கொடுக்கலாம்.
  3. சில முக்கிய கொள்கைகளுக்கு (மற்றும் சட்டத்தால் மட்டும் செய்யக் கூடியவை) தமிழக அரசின் அதரவைக் கோரினால் போதும். அரசு வாங்கும் செயலிகளில், அரசு காசுக் கொடுத்து/அல்லது தானாகவே உருவாக்கும் மென்பொருட்கள் மற்றும் பல் ஊடக தொகுப்புகளை திறன்வெளியில் (அல்லது அளிப்புரிமையில்) வெளியிட ஊக்கப்படுத்துதல்.

#கிளப்ஹவுஸ் ஒரு வித்தியாசமானக் கலந்துரையாடல் முறை. இந்த செயலியில் ஒரு சில மணி நேரம் மேய்ந்ததில் புலப்பட்டது, வேலையை மறந்து, பொழுதைப் போக்க இந்த செயலி ஓர் வரப்பிரசாதம். சமுக வலைத்தளங்களைப் போல் நன்மைகள் பல தெரிகிறது, உலகமே கைக்குள் வந்த மாதிரி இருக்கிறது. அதே சமயம், சுயக்கட்டுப்பாட்டோடு நேரத்தையும், நாக்கையும் நாம் தான் அளந்து பயன்படுத்துதல் அவசியம் என்றும் தோன்றுகிறது.

அரட்டை அடிக்க நம்மை விட்டால் யார் இருக்கிறார்கள் – அதனால் நம்மூரில் இது வெற்றியாகும் என்று தான் நினைக்கிறேன்.

#SICCI #clubhouse

Tagged in: