ராஜத்தின் மனோரதம் – திரு தேவன்

நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த குடும்பஸ்தர் சொந்த வீடு கட்டுகிறார். அதில் அவர் எதிர்கொள்ளும் நடைமுறைச் சிக்கல்களை ஆசிரியர் திரு தேவன் சுவாரஸ்யமாகச் சொல்கிறார். நண்பர் ஸ்ரீ மான் ஜயத்தைப் போல் ஒருவர் கிடைக்கக் கொடுத்து வைத்திருக்க வேண்டுமா அல்லது அவர் ஓர் இடைஞ்சலா என்பது கதையின் முடிவு வரை ஓர் எதிர்பார்ப்பாகவே இருந்தது.

வீடு வாங்க தீர்மானிப்பது, இடத்தைத் தேர்ந்தெடுப்பது, காண்ட்ராக்டர் மற்றும் இன்ஜினீயரை ஒப்பந்தம் செய்வது, கிணறு எடுப்பது, காவலரைப் பணியில் அமர்த்துவது, மேஸ்திரியிடம் பேசி விசயங்களைத் தெரிந்து கொள்வது, தச்சரிடம் அலமாரிகளின் விபரங்களைச் சொல்வது, பரணை எங்கெங்கே போடுவது, கொல்லத்துக் காரர்களின் வேலையைச் சரி பார்ப்பது என்று பல பணிகள் நடந்து கடைசியில் ‘ஷண்முக விலாசம்’ என்று பெயர் வைத்துக் குடிபோவது வரை செல்கிறது புத்தகம்.

வீடு கட்டும் வேலைகளுக்கு நடுவில் சின்ன கண்ணனின் லூட்டிகள் நம்மைச் சிரிக்க வைக்கிறது.

‘முட்டாள்கள் வீடு கட்டுகிறார்கள்; அதில் புத்திசாலிகள் வாசம் செய்கிறார்கள்’

எழுதி அறுபது ஆண்டுகளுக்கு மேல் ஆனாலும் ஒவ்வொரு பக்கமும் இன்றைக்கும் நாம் உணரும்படி இருக்கிறது. சிமெண்ட் மற்றும் கம்பி வாங்க அரசாங்கத்தின் அனுமதி வேண்டும் என்று படிக்கும் போது வியப்பாக இருக்கிறது, அப்படியான ஓர் (கட்டுப்பாடான) காலத்தில் நம் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது இன்றைய நுகர்வோர் கலாச்சாரத்திற்கு அன்னியமாக இருக்கிறது. மூன்று நான்கு மாதங்கள் பொறுத்திருந்து ஒரு மழைக்குப் பிறகு தளங்கள் போடுவது, மரக் கதவுகள் மாட்டுவது என்று இப்போது மறந்தேப் போன முறைகளைப் படிக்க ஆச்சர்யமாக இருக்கிறது.

‘காடாரம்பமாக இருக்கிறதே!’ ‘இருக்கட்டுமே! மாம்பலம், அடையாறு எல்லாம் பதினைந்து வருஷத்துக்கு முந்தி அப்படித்தான் இருந்தது.’

வீட்டைக் கட்டிய அல்லது பழுதுப்பார்த்த எல்லோருமே இந்தப் புத்தகத்தை ரசிப்பார்கள். அவ்வளவு தத்ரூபமாக எழுதியுள்ளார் திரு தேவன்.

Categorized in:

Tagged in:

,