இந்தியாவைப் பற்றிய சுமார் ஆறு லட்சம் நூல்கள் அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக்கழக ஆராய்ச்சி நூலகத்தில் எப்படிச் சேர்ந்தன? பி.பி.சி.யின் இந்தச் சுவாரஸ்யமான கட்டுரை அதை விளக்குகிறது.
1950 மற்றும் 1960களில், இந்தியாவில் உணவுப் பஞ்சம் நிலவிய காலகட்டத்தில், அமெரிக்க அரசு தங்களின் PL-480 சட்டத்தின் கீழ், இந்தியா அமெரிக்கத் தானியங்களை ரூபாய் மதிப்பில் வாங்கிக் கொள்ள அனுமதித்தது. அமெரிக்காவின் பார்வையில், அந்த பல கோடி ரூபாய்களுக்கு மதிப்பே இல்லாததால், அந்தப் பணத்தை என்ன செய்வது என்று தெரியாமல், தங்களின் பல்கலைக்கழகங்களுக்கு இலவசமாக வழங்கி, “எதை வேண்டுமானாலும் வாங்கிக் கொள்ளுங்கள்” என்று கூறினர். அவர்கள் தேர்வு செய்து வாங்கியவை ஆயிரக்கணக்கான இந்திய நூல்கள். இந்த நூல்களில் பல இன்று இந்தியாவில் கிடைக்கவே இல்லை; அவற்றைப் பார்க்க சிகாகோவுக்கே செல்ல வேண்டும்.
இதில் என்னை மிகவும் ஆச்சரியப்பட வைக்கும் விஷயம் என்னவென்றால், 2025ல் கூட நமது (மத்திய, மாநில, உள்ளூர்) அரசு wiki நூலகங்கள் புத்தகங்களை வாங்குவதற்குத் திணறிக் கொண்டிருக்கும் போது, கணினியோ இணையமோ இல்லாத 1960களில், அதுவும் வேற்று நாட்டு அலுவலர்கள், நம் நாட்டின் பல்வேறு மொழிகளில் எப்படி ஆறு லட்சம் (ஆராய்ச்சி) நூல்களைக் கண்டறிந்தார்கள்? அதுவும் அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, அந்த நூல்கள் இன்றும் ஆராய்ச்சிக்குப் பயன்படும் வகையில் உள்ளன என்றால், அந்தத் தேர்வு எவ்வளவு சிறப்பாக இருந்திருக்க வேண்டும்! அது எப்படி அவர்களால் முடிந்தது? அதே செயலை நாம் இன்று கூடச் செய்ய முடியவில்லையே!
இந்த நூற்றாண்டின் இறுதிக்குள், இதுபோன்ற நூலகங்கள் இந்தியாவில் உருவாக வாய்ப்புண்டா? உங்கள் கருத்து என்ன?

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

