நம்ம வீட்டில் மழை நீர்க் கசிவு சரிசெய்ய, மரப் பொருட்கள் பழுதுபார்க்க, வண்ணம் பூச என்று வேலைக்காரர்களை அழைத்தால் என்ன நடக்கிறது? ஒரு நாள் வருவார்கள், அடுத்த இரண்டு நாட்கள் காணாமல் போவார்கள். கேட்டால், “பொது விடுமுறை, வார இறுதி, மச்சானுக்கு அறுவை சிகிச்சை” என்று சாக்குப்போக்குகள் சொல்லுவார்கள். வேலைக்கு வருவதே காலை 10 மணிக்கு, மதியம் ஒரு மணி முதல் மூன்று மணி வரை சாப்பாடும் ஓய்வும், ஐந்து மணிக்கெல்லாம் முடித்துக் கிளம்பிவிடுவார்கள்.
இதெல்லாம் சகஜம் என்று மனதைத் தேற்றிக் கொண்டிருக்கும் போது, ஞாயிற்றுக்கிழமை காலை ஆறு மணிக்கு எழுந்து நிம்மதியாகக் காபி குடித்துக் கொண்டு நாளிதழைப் படிக்க ஆரம்பித்தால்… அப்போது எங்கிருந்தோ பெரும் இயந்திர அறுவை இரைச்சல்! அதிர்ந்துப் போய் பார்த்தால் பக்கத்து வீட்டு மாடியில் பைபர் கூரை அமைக்க, இரும்புக் கம்பிகளை மூன்று பேர் கொண்ட குழு அறுத்துப் பற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்த இரண்டு நாட்கள் இது தொடரும் என நினைக்கிறேன்.
சில வாரங்களுக்கு முன் வரை, எங்கள் வீட்டுக்கு பின்னால் இருக்கும் வீட்டை இடித்துக் கட்டிக் கொண்டிருந்தார்கள். அடாத மழை பெய்தாலும், விடுமுறை நாட்கள் என்று ஒரு நாள் விடாமல், காலை ஏழு மணி முதல் மாலை ஆறு வரை இயந்திர இரைச்சல் தொடர்ந்தது. வாரம் ஒரு பி-500 மாத்திரை அட்டை காலியாகிறது. இன்னும் வேலை முடியவில்லை, மீண்டும் எப்போது தொடங்கும் என்ற அச்சத்திலேயே இருக்கிறேன்.
இதெல்லாம் நம் நாட்டில் ஒழுங்குபடுத்த முடியாது என்று தெரியும். அரசியல் புரியும், ஆனால் என் கடுப்பு வேறு. நமக்கு வேலைக்கே வராத ஆட்கள், மற்றவர்களுக்கு எப்படிக் கடமை உணர்ச்சியோடு, கூடுதல் நேரம், எல்லா நாட்களும் வேலை செய்கிறார்கள்?
நகரமோ, கிராமமோ, இந்தியாவில் வாழ்க்கை என்பது இப்படித்தான் இருக்கும். நாம் சிரித்துக் கொண்டே தான் இதை ஏற்றுக் கொள்ள வேண்டும். இல்லையென்றால், பி-500 மாத்திரை அட்டை காலியாகும் வேகம் இரட்டிப்பாகும்!
உங்களுக்கும் இப்படி நடந்திருக்கிறதா? கருத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி.
குறிப்பு:
1️⃣இதைத் தமிழ்நாட்டு வேலைக்காரர்கள், இந்தி பேசும் வேலைக்காரர்கள் என்று பிரித்துப் பார்க்கவில்லை. இரண்டு வகையிலும் இருக்கும் சாதக பாதகங்கள் தெரியும்.
2️⃣தொழிலாளர்களின் உரிமைகள் மிக முக்கியம். எதிர் வீடு, பின் வீடுகளில் நடப்பதை நான் கண்டிக்கிறேன். எனக்கும் அப்படி வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. கொடுக்கும் காசுக்கு அவர்கள் ஒப்புக் கொண்டது போல, சட்டத்திற்கு உட்பட்டு வேலை செய்ய வேண்டும் என்று எதிர்பார்த்தாலே நடப்பதில்லை. அதுதான் வேதனை, கோபம் வர காரணம். கணினி தொழில் என்றாலும், நாய்ப்படாத பாடுபட்டுத்தான் நமக்கும் காசு வருகிறது.
3️⃣பொதுவாகவே இந்திய நிறுவனங்கள்—பெரும் நிறுவனங்களில் தொடங்கி, சுதந்திர ஒப்பந்தக்காரர்கள் வரை—விற்பனை செய்யும் வரை மட்டுமே கவனமாக இருக்கிறார்கள். அதற்குப் பிறகு, அவர்கள் செய்ய வேண்டிய சேவையைப் பற்றி அக்கரையே இல்லை. முன் பணம் கொடுத்த பின்னர், அவர்களிடம் இருந்து வேலையைப் பெறுவது குதிரைக் கொம்பு! இந்த விசயத்தில் நான் பார்த்தது வரை அமெரிக்கர்கள் சிறந்து விளங்குகிறார்கள், அதனால் தான் அவர்கள் வல்லரசு —இதைப் பற்றி இன்னொரு நாள் விரிவாகப் பேசுவோம். இவர்களைத் தாண்டி ஜப்பானியர்கள் எங்கேயோ இருக்கிறார்கள் – ஆனால் அவர்கள் பிரச்சனை வேறு.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

