குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் என்றாலே பலருக்கும் வைரம் நினைவிற்கு வரும். எனக்கு இனிப்புத் தான் நினைவிற்கு வரும். என் சகலை அடிக்கடி அந்த நகருக்கு அருகில் இருக்கும் தொழிற்சாலைக்கு வியாபார விஷயமாகச் சென்று வருவார்.
ஒவ்வொரு முறை போய் வரும்போதும் கட்டாயம் எனக்கு அந்த ஊர் இனிப்பு ஏதாவது வாங்கி வருவார். இப்படியெல்லாம் சகலை கிடைக்கக் கொடுத்துவைத்திருக்க வேண்டும்.
இந்த முறை அந்த நகரில் பிரபலமாக இருக்கும் மோகன் மித்தாய் கடையிலிருந்து அவர் வாங்கி வந்தது: பாதாம் பிஸ்தா ‘சூரத்காரி’ இனிப்பு.
வெளியே சர்க்கரையாலான மென்மையான ஒரு ஆடை. உள்ளே நெய் மணம் கமழும் கோவா. இதனுடன் பாதாம், பிஸ்தா கலந்திருக்கும். ஒரு கடி எடுத்தால் நாக்கில் உருகும். மிக இனிப்பு, நிறைவான சுவை.
ஒரு நாளில் இதை ஒன்றுக்கு அதிகமாகச் சாப்பிட முடியாது. அந்தளவு வயிறும், நாவும் நிறைந்துவிடும்.
அடுத்த முறை சூரத் சென்றால் இந்த இனிப்பைச் சுவைத்துப் பார்க்கவும்.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

