சென்னையில் சீக்கியக் கோயில் (Gurudwara) எங்கே இருக்கிறது என்று எனக்குத் தெரியும். சமணக் கோயிலும் (Jain Temple) தெரியும்; ஏன், பார்சி நெருப்புக் கோயில் (Fire Temple) கூடப் போயிருக்கிறேன். எல்லாப் பகுதிகளிலும் மசூதிகளும் தேவாலயங்களும் இருப்பது நாம் அறிந்ததே.
ஆனால், சென்னையில் எங்கே புத்தக் கோயில் இருக்கிறது? நேற்றைய தினம் ‘புத்த பூர்ணிமா’ என்று படித்தவுடன் எனக்கு இந்த ஐயம் எழுந்தது. ஆனால் கூகுளில் தேடுவதற்கு முன்பே அந்த எண்ணம் மறந்தும் போனது. அதற்கு விடை இன்று நாளிதழில் வந்த ஒரு படத்தில் ஒளிந்திருந்தது.
சென்னையில் எழும்பூர் கென்னத் லேனில் (Kenneth Lane) இலங்கை அமைப்பின் சார்பாக ஒரு புத்தக் கோயில் இருக்கிறதாம்.
சென்னையில் பிறந்து ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வாழும் நான், இதைப் பார்த்ததே இல்லை. இதைத் தவிர வேறு இடங்களில் புத்தக் கோயில் சென்னையில் இருப்பதாக எதுவும் என் நினைவிற்கு எட்டவில்லை. உங்களுக்கு ஏதேனும் தெரிந்திருந்தால் சொல்லவும்.
இதில் எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், தெற்காசியாவின் நகரங்களுக்குச் (கொழும்பு, கண்டி, சிங்கப்பூர், கோலாலம்பூர், ஹாங்காங், நோம் பென், பாங்காக்) சென்றபோதெல்லாம் புத்தக் கோயில்களுக்குச் சென்று வழிபட்டுள்ளேன். நம் நாட்டிலும் பிற மாநிலங்களுக்குப் போகும்போது சில புத்தக் கோயில்களுக்குப் போயிருக்கிறேன். ஆனால் அப்பொழுதெல்லாம் சென்னையில் எங்கே ஒரு புத்தக் கோயில் இருக்கிறது என்ற எண்ணம் தோன்றியதே இல்லை. அதே சமயம், வெளியூர்களில் சாப்பிடும் உணவு நன்றாக இருந்தால், அது சென்னையில் எங்கே கிடைக்கும் எனத் தேடும் என் ‘சாப்பாட்டு’ ஆர்வம் மட்டும் குறைந்ததில்லை!
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

