இன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் அறிவித்துள்ள பன்னாட்டுக் கணித்தமிழ் மாநாட்டு, கணித்தமிழ்24 (www.kanitamil.in) ஆலோசனைக் குழுவில் நானும் இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன் சென்னையில் தமிழ் இணையம்99 மாநாடு நடந்த போது, இந்தத் துறையின் முன்னோடிகள் பலரை அருகிலிருந்து ஓர் இளைஞனாகப் பார்த்து, கற்கும் பேறுப் பெற்றேன். பத்தாண்டுகள் கழித்து கலைஞரால் நடத்தப்பட்ட கோவை செம்மொழித் தமிழ் மாநாட்டுடன் நடந்த தமிழ் இணைய 2010 மாநாட்டின் போது, உத்தமத்தின் தலைவராக இருந்து, பேராசிரியர் திரு மு.ஆனந்தக் கிருஷ்ணன் அவர்களின் வழிகாட்டுதலில் நடத்தும் வாய்ப்பைப் பெற்றேன்.

இன்று அதையெல்லாம் திரும்பிப் பார்க்கும் போது கணினியில் தமிழ் வந்துள்ள தொலைவைப் பார்க்க எனக்கே பிரமிப்பாக இருக்கிறது. அன்று பன்னாட்டு நிறுவனங்களிடம் அவர்களின் செயலிகளில் தமிழைப் புரியவைக்கப் பலரும் கஷ்டப்பட்டோம், அவற்றுள் தமிழைச் சேர்க்க நாங்கள் கெஞ்ச வேண்டியிருந்தது. இன்று இந்தியாவும், தமிழ் நாடும் மிகப் பெரிய சந்தை, புறக்கணிக்க முடியாத பொருளாதாரம். இதற்கு நடுவில் செல்பேசி இந்தத் துறையையே புரட்டிப் போட்டுவிட்டது. 2010யில் தமிழ் இணைய மாநாட்டில் ஒருங்குறியைத் தமிழக அரசு ஏற்றுக் கொண்டு வெளியிட்ட அரசாணை இந்த வளர்ச்சியில் ஒரு மைல்கல். அன்றிலிருந்து தமிழக அரசின் தமிழ் இணையக் கல்விக்கழகம் ஒருங்குறி அமைப்பில் உறுப்பினர் கூட.

தமிழ் மற்றும் இந்திய மொழிகளின் கணினி ஆய்வாளர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் அனைவரும் பிப்ரவரியில் நடக்கும் கணித்தமிழ்24 மாநாட்டில் கலந்து கொண்டு உங்களின் கட்டுரைகளைப் படிக்கவும் என வேண்டுகிறேன். மேலும் விவரங்களுக்கு சென்னை கோட்டூர்புரத்தில் இருக்கும் தமிழ் இணையக் கல்விக் கழகத்தைத் தொடர்பு கொள்ளவும்.

#kanitamil #kanitamil24 #கணித்தமிழ்24

Categorized in:

Tagged in:

,