இன்று திரைக்கு வந்த படம் குக்கூ, தேவி திரையரங்கில் மாலைக் காட்சியாகப் பார்த்தேன்.  பெரிய பெயர்கள் இல்லாத ஒரு படம், முழுவதும் பார்வையில்லாதவர்கள் பற்றிய ஒரு படத்திற்கு அரங்கம் நிறையக் கூட்டம் இருந்ததைப் பார்த்து தமிழ் ரசிகர்களின் பண்பட்ட ரசனையை கண்டு மெச்சத்தான் வேண்டும்.

கதாநாயகன் தமிழ் (அட்டகத்தி தினேஷ்), நாயகி சுதந்திரக்கொடி (மாளவிகா) இருவரும் பார்வையற்றவர்கள், அவர்களின் நண்பர்கள் பெறும்பாலும் பார்வையற்றவர்கள், இவர்களின் தனியுலகில் வந்து போகும் சில பார்வையுல்லவர்கள் போல் நம்மையும் உலாவர செய்துள்ளார் இயக்குனர் “விகடன் வட்டியும் முதலும்” ராஜு முருகன். அவரின் முயற்ச்சிக்கு முதலில் ஒரு சபாஷ்.  இதை விடுத்து, கதை என்று பார்த்தால் பழைய பெருங்காய டப்பா தான்.

படம் முடிந்து வெளியில் வந்தவுடன் நண்பன் கோகுலிடம் சொன்னேன், பார்வையில்லாத இருவரை கதாநாயகன், நாயகியாக போட்டு வேளை வாங்கியிருக்கும் இயக்குனரை பாராட்ட வேண்டும் என்று, கோகுல் சிரித்துவிட்டான். டேய் தமிழ் ஆக வரும் நாயகன் பெயர் அட்டகத்தி தினேஷ் (Attakathi Dinesh), சுதந்திரக்கொடி ஆக வருவது மாளவிகா (Malavika Nair), இருவருக்கும் கண் நன்றாகத் தெரியும்,  நண்பனாக வரும் இளங்கோவிற்கு மட்டும் தான் பார்வை கிடையாது என்றான். அப்படிப்பட்ட ஆபாரமான நடிப்பை தந்தியிருக்கிறார்கள் நடிகர்கள் இருவரும்.

படத்தின் காட்சிகள் பல பெரம்பூர் ரயில் நிலைத்தில் காட்டப்படுகிறது, அதனால் ரயிலும் கூடவே வருகிறது. இன்றைய அவசர பொருளாதார நகர வாழ்க்கையில், சென்னைவாசிகள் பலரும் பார்க்க தவறும், பார்த்தாலும் பார்க்காமல் போகும் மனிதர்கள் பலரை ஒளியிட்டு காட்டியிருக்கிறார் ராஜு முருகன். ஆனாலும் இன்றைக்குப் பார்வையற்றவர்கள் கணினி துறையிலும் கால் செண்டர்களிலும் கலக்கி கொண்டு இருக்கும் போது, ரயில் பிச்சைகாரர்களுடன் காட்டி இருப்பது நடைமுறை என்றாலும், ஏனோ சிறிது நெருடுகிறது. அதே போல, நிமிர்ந்துப் பார்க்காமல் ஜன்னல் ஓரம் உட்காரும்  “பிரமாண” பயணி கதாப்பாத்திரம் சலித்துப் போனதாக தோன்றுகிறது.

படத்தில் எனக்கு பிடித்த விசயம், பார்வையற்ற தங்கையை பார்வையுள்ள நண்பனுக்கு கட்டாய கல்யாணம் பண்ண துடிக்கும் அண்ணன் கதாபாத்திரதை ஏதோ வில்லன் போல் காட்டாமல், அவனின் வலி, சூழ்நிலையை சிறிது விளக்கியுள்ளது. ATM நிலைத்தில் வரும் வாடிக்கையாளர் காவலரான நாயகி அண்ணினிடம் சண்டையிடுவது முட்டாள்தனமாக இருந்தாலும், நாட்டில் படித்த முட்டாள்களுக்கு பஞ்சமில்லை என்பதால் ரசிக்கலாம். அதோ போல இறுதியில் நாயகி தனியாக நட்டநடு இரவில் நெடுங்சாலையில் வரும்போது உதவும் ஒரு அரசியல் கட்சி தொண்டன், அவனே நாயகன் அடிப்பட்டு ரத்த வெள்ளதில் இருக்கும் போது அவனைத் தூக்கி மருத்துவமனையில் சேர்ப்பது, அந்த தொண்டனின் கூட இருக்கும் வேன் ஒட்டுனரே நிறுத்த மறுக்கும் போது, டேய் உங்களுக்கேல்லாம் மனசாட்சியே இல்லையா என்று கேட்டும் காட்சியில் இயக்குனர் ஜொலிக்கிறார், நல்ல மனிதர்கள் நாட்டில் இருக்கிறார்கள் என்பதை தமிழ் சினிமாவும், மீடியாவும் மறந்துவிட்ட காலத்தில் இது நல்ல உதாரணம். ஒரு காட்சியில் குடித்துவிட்டு பெண் இனத்தையே திட்டி கொண்டு இருக்கும் நாயகியின் அண்ணன் நண்பனிடம், உடன் இருக்கும் அரசியல் பிரமுகர், டேய் நான் கமிஷனுக்கு வேலை செய்தாலும் மனசாட்சிக்கு காட்டுப்பட்டவண்டா, உன் அம்மாவும் ஒரு பெண்தானே, உன் சகோதரியும் ஒரு பெண்தானே, அந்த கண்ணு தெரியாத பெண்ணை நீ ஒழுங்க வைச்சுக் காப்பாத்திட்டி உன்னை துளைத்து விடுவேன் என்று சொல்வது, தமிழ் சினிமா பார்காட்சிகளுக்கு ஒரு புதுமை!

குக்கூ (2014)

குக்கூ (2014)

குபேரன் ‘சந்திரபாபு’வாக வருபவரும், ‘எம்.ஜி.ஆர்’ஆக  வருபவரும் சில காட்சியில் வந்தாலும் பொருந்த செய்துள்ளார்கள். நாயகனின் பாட்டைக் கேட்டு ஆயிரம் ஆயிரமாக கொடுக்கும் பாத்திரத்தில் ‘ஆடுகளம்’ முருகதாஸ் கச்சிதமாக செய்திருக்கிறார். பாடல்கள் ஒவ்வொன்றும் கதையோடு ஒட்டி வருவது, நன்றாக இருந்தது.

நாமும் படத்தைப் பார்த்து சில முறை குக்கூ, குக்கூ என்று கூவலாம்.

Categorized in:

Tagged in:

, , ,