பொதுவாகப் புத்தகங்களில் வந்த கதையை, அதுவும் சரித்திர இலக்கியப் புனைவுகளை மேடை நாடகமாகத் தயாரிப்பது மிகக் கடினம். ஒன்று நேரம் இருக்காது, சினிமா அளவு பொருட்செலவில் கணினி ஜாலங்களெல்லாம் சேர்க்க முடியாது, மேடையில் சண்டைக் காட்சிகளைக் கொண்டுவருவதும் சிரமம், அதோடு நீண்ட தமிழ் வசனங்கள் வரும், ஆடம்பர ஆடை அலங்காரங்களை மேடையில் சுமந்து பல நேரம் நடிப்பது எளிது இல்லை என்று அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனால் இதையெல்லாம் சவாலாக எடுத்து கல்லூரி மாணவிகள் மட்டுமே கொண்ட ஒரு குழு அவர்களின் ஆசிரியர்களின் துணையோடு சிறப்பாக ஒரு நாடகத்தை ஆழ்வார்பேட்டை நாரத கான சபாவில் இன்றைக்கு (சனிக்கிழமை, 5 ஆகஸ்டு 2023) மேடையேற்றியிருந்தார்கள்.

சாகித்திய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர், மதுரை நகரப் பாராளுமன்ற உறுப்பினர் திரு சு. வெங்கடேசன் அவர்களின் புனைவு வீரயுக நாயகன் வேள்பாரி (2019), சென்னை புத்தகக் காட்சியில் அதிகம் விற்பனையான வெற்றி புத்தகம் இது. இந்தக் கதையை அவரின் அனுமதியோடு, நேர்த்தியாகத் தொகுத்து, சிறிது மாற்றி சென்னை தி.நகர் மேட்லி சாலையில் இருக்கும் ஸ்ரீ சங்கர்லால் சுந்தர்பாய் (ஷாசுன்) ஜெயின் மகளிர் கல்லூரி மாணவிகள் நடித்த நாடகம் வேள்பாரி. மாலை ஆறே முக்காலுக்கு ஆரம்பித்து, இடைவேளையே இல்லாமல் தொடர்ந்தது நாடகம், இரண்டரை மணி நேரம் போனதே தெரியவில்லை. திரு நல்லி குப்புசாமி அவர்களின் தலைமையில், நீதியரசர், உயர் அரசு அதிகாரிகள் எனப் பிரபலங்கள் வந்திருந்தாலும், ஒரு வருத்தம் இந்த முயற்சிக்கு ஆதரவாக அரங்கில் நூறுக்குக் குறைவான பார்வையாளர்கள் மட்டுமே இருந்தது, இது தமிழ் ரசிகர்களின் இழப்பு.

மாணவர்கள்  என்றாலும் உச்சரிப்பில், வசனங்களில் எந்தத் தடங்களும் இல்லை, இன்றைக்கு அதுவே பெரிய விஷயம். கொஞ்சம்  ஆங்காங்கே சின்ன சின்ன சில தடுமாறல்கள், மேடை திரைக்குக் கீழே சிக்கிக் கொள்வது, ஒலிவாங்கிக்குத் தொலைவிலிருந்து வசனங்களைப் பேசுவது, ஒரு காட்சிக்கு அடுத்ததற்கும் தொடர்பு நேர்த்தியாகச் சில இடங்களில் இல்லாமல் போனது என்று சில சரி செய்ய வேண்டியவை இருந்தும், பெரிய குறையாக எதுவும் இல்லை. மேடையின் பின்புலமாகப் பெரிய கணினித் திரையில் அழகான வண்ணப் பின்புலக்காட்சிகள் அசத்திவிட்டார்கள் – சில காட்சிகள் தமிழ் நாடு போன்றில்லாமல் அமெரிக்கச் சினிமாவில் பார்த்தது போல இருந்தது என்றாலும் மன்னிக்கலாம், பொன்னியின் செல்வன் திரைப்படத்திலேயே தமிழ்நாட்டு அரண்மனைகள் இல்லையே, இதில் எதிர்பார்ப்பது சரியில்லை தானே!. சரித்திரக் கதை என்பதால், கதையின் சிறு குறிப்பை, நடக்கும் இடத்தை பற்றிய ஒரு வரி, கதையின் காலம் இவற்றைத் தொகுத்து ஒரு முன்னுரை கொடுத்திருக்கலாம். அதோடு முக்கிய காட்சிகளுக்கு முன், அதில் வரப் போகும் நாயகர்களின் பெயர்களை அறிமுகம் செய்திருக்கலாம். எப்படி இருந்தும் 1500 பக்கங்கள் கொண்ட புத்தகத்தை இரண்டரை மணி நேரத்தில் கொடுத்ததே பெரிய வெற்றி.

தேரில் வரும் புலவர் கபிலர்

தேரில் வரும் புலவர் கபிலர்

வேள்பாரியின் குடும்பம் - வேள்பாரி, மனைவி ஆதினி, மகள்கள் அங்கவை மற்றும் சங்கவை

வேள்பாரியின் குடும்பம் – வேள்பாரி, மனைவி ஆதினி, மகள்கள் அங்கவை மற்றும் சங்கவை

கதைக்கு வருவோம். கடைச்சங்கக் காலத்தைச் சார்ந்த புலவர் கபிலர், இவர் பறம்பு மலையைத் தலைமை இடமாய் கொண்டு ஆட்சி செய்த குறுநில மன்னரான வேள்பாரியை பார்க்க ஆறு, காடு, மலைகளைத் தாண்டி வருகிறார். அந்த இயற்கை சூழ்நிலையை, கள்ளம் கபடமற்ற மக்களை, குறிப்பாகத் தன்னை அரசன் என்று எண்ணாமல் இயற்கையின் காவலர் என்று கருதும் வேள்பாரியை பார்த்துப் பழகியதில் அங்கேயே தங்கிவிடுகிறார். வேள்பாரி தனது மனைவி ஆதினியின் மேல் இருக்கும் அன்பைக் காட்ட வரும் காதல் பாட்டை அழகாகச் செய்திருந்தார்கள். இவர்களுக்கு இரண்டு மகள்கள், அங்கவை மற்றும் சங்கவை. நாடகத்தில் வரவில்லை, ஆனால் இணையத்தில் படித்து நான் தெரிந்து கொண்டது, பாரியின் காலத்திற்குப் பிறகு மகள்கள் இருவரையும் திருக்கோயிலூர் அரசனுக்கு ஔவையார் மணமுடித்து வைத்தார் என்று. அக்காலத் தமிழகத்தை ஆண்ட சேர, சோழ, பாண்டிய மன்னர்களின் பேராசையின் காரணமாக, அவர்கள் அழித்த பதினாறு வம்சங்களின் எஞ்சிய வாரிசுகளுக்குத் தஞ்சம் அளித்திருக்கிறார் பாரி. வருடா வருடம் அவர்கள் பாடி ஆடும் நிகழ்ச்சியைக் கண்டு வியக்கிறார் கபிலர், மூன்று வம்சத்தினரின்  நடனங்களை மாணவி குழுக்கள் நன்றாக ஆடினார்கள், அதுவும் நாக வம்ச ஆட்டம் அபாரம். அந்த வம்சங்களில் ஒன்றான அதிகையை ஒரு வைகை ஆற்று விழாவின் போது, தந்திரமாகக் கொடூரமாகப் பாண்டிய மன்னன் அழித்தான் என்று பார்க்கும் போது நம் குலை நடுங்கியது உண்மை. அதிகை வம்சத்தின் வாரிசாக, பாரியின் தளபதியான நீலன் வேடத்தில்  வரும் மாணவியின் நடிப்பு அருமை. பிறகு தனது இளவரசன் திருமணத்திற்குப் பரிசாகப் பறம்பு மலையில் இருந்து திருடி வரப்பட்ட தெய்வ சகுன விலங்கின் மந்திரச் சிறப்பை அறிந்த பாண்டிய மன்னன், அந்த விலங்கினத்தையே வேட்டையாடிப் பிடிக்க ஆசை கொள்கிறான். தன் காட்டில் இருக்கும் எந்த உயிரையும் பலிகொடுக்க மறுக்கும் பாரிக்கும் மூவேந்தர்களுக்கும் நடக்கும் பல சண்டைகளை, சமாதான தூதுகளைப் பற்றிச் சொல்லிச் செல்கிறது கதை.

பாண்டிய நாட்டில் இருக்கும் சிறப்புச் சிலை ஒன்றை கொற்றவை இளவரசி பார்க்கிறார், காதலர்கள் பின்னியிருப்பது போன்ற நிழல் வரும் வகையில் செதுக்கப்பட்ட அந்தச் சிலையின் உண்மையை அவர் கண்டறியும் காட்சி நன்றாகவிருந்தது. எல்லா மாணவிகளும் நன்றாக நடித்திருந்தாலும், வேள்பாரி, கபிலர் வேடங்களில் வந்த மாணவிகள் இருவரும் அற்புதமாக நடித்தார்கள், அவர்களுக்குப் பாராட்டுகள். இயக்கிய திரு ராணி மனோகரன் அவர்களுக்கும் பாராட்டுகள்.  தமிழில் இது போன்ற இலக்கியக் கலைப் படைப்புகள் இன்றும் வருவது நம்பிக்கை அளிக்கிறது. குழுவினருக்கு நன்றி.
பதினாறு வம்சங்களின் எஞ்சிய வாரிசுகளின் ஆட்டம் பாட்டம்

பதினாறு வம்சங்களின் எஞ்சிய வாரிசுகளின் ஆட்டம் பாட்டம்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், மூவேந்தர்கள் மற்றும் புலவர் கபிலர்

சேர, சோழ, பாண்டிய மன்னர்கள், மூவேந்தர்கள் மற்றும் புலவர் கபிலர்

Tagged in:

,