இன்றைக்கு நாளிதழில் ஒரு செய்தியைப் படிக்க, மனதில் இந்தக் கேள்வி எழுந்தது. இந்தியாவில் இருக்கும் கைதிகளில் எத்தனை பேர், படித்த பட்டதாரிகள் மற்றும் படிக்காதவர்கள். படிப்புக்கும் கைதாவதற்கும் குறிப்பாகக் குற்றவாளியாகத் தண்டிக்கப்படுவதற்கும் சம்பந்தம் உண்டா? ஆங்கிலத்தில் சொல்லவேண்டும் என்றால் I was looking at the correlation and not the causation, அதாவது படிப்புக்கும் கைதியாக இருப்பதற்கும் இருக்கும் ஒட்டுறவு என்ன, அதன் காரண காரியத் தொடர்பு அல்லது விளைவிப்பு பற்றி அல்ல.

இதற்கான தரவுகள் இந்தியாவில் இருக்க வாய்ப்பு குறைவு என்ற நக்கலோடு தான் தொடங்கினேன். வழக்கம் போல ‘கூகுள் பார்ட்’ மற்றும் ‘பிங்க் சாட்’டையும் கேள்வி கேட்டதில் விடைக் கிடைக்கவில்லை. முதலில் நான் பயன்படுத்திய தூண்டி (Prompt) “what is the percentage of school seniors, graduates and post-graduates in incarceration in India”, இதையே மாற்றி “what is the total number of people in prison in india, can you further classify them to those who have a graduate degree and who don’t” என்று கேட்டவுடன் விடைகள் வரத் தொடங்கியது. முதலில் தெரிந்து கொண்டது, இந்தியாவில் இருக்கும் சிறைச்சாலைகளை, கைதிகளை, குற்றங்களைப் பற்றி ஆண்டுதோறும் National Crime Records Bureau (NCRB) என்னும் தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் பல தரவுகளைத் தனது ஆய்வறிக்கைகளில் கொடுக்கிறது,கீழே கருத்து பெட்டியில் இணைய முகவரியைக் கொடுத்துள்ளேன். கூகுள் பார்ட் இந்தத் தரவின் முகவரியைக் கொடுத்தாலும், அது தொகுத்த புள்ளி விவரங்கள் தவறாக இருந்தது. கிடைத்த இணைய முகவரியை ‘பிங்க் சாட்’டிடம் கொடுத்தவுடன் விடைகள் சரியாகக் கிடைத்தது.

சாட்-ஜி. பி. டி. (மற்றும் கூகுள் பார்ட் போன்ற ஈனும் செயற்கை நுண்ணறிவு நுட்பங்கள் ) மயக்கத்தில் தவறான தகவல்களை அதுவாகவே உருவாக்கக்கூடும் என்பதால் மூலக் கோப்புகளுடன் புள்ளி விவரங்களைச் சரிபார்த்து நான் தெரிந்து கொண்டது: டிசம்பர் 2021யின் நிலவரப்படி இந்தியாவில் இருக்கும் மொத்தக் கைதிகள் 5,54,034. இதில் பட்டதாரியாக, முதுநிலைப் பட்டதாரியாக அல்லது தொழில்நுட்பச் சான்றிதழ் பெற்றவர்கள் வெறும் 10 விழுக்காடு தான். எழுத்தறிவே இல்லாதவர்கள் 25 விழுக்காடு, பத்தாம் வகுப்புக்குக் கீழ் மட்டுமே படித்தவர்கள் 40 விழுக்காடு, பத்தாவதிலிருந்து பன்னிரண்டு வரை படித்தவர்கள் 24 விழுக்காடு. இதையே கைதானவர்கள், தண்டிக்கப்பட்டவர்கள் என்று பிரித்துப் பார்த்தால், பள்ளிக்கு மேல் படித்தவர்களில் விசாரணை(யின்றி) கைதிகளாக இருப்பவர்கள் சுமாராக அதே 10 விழுக்காடு தான், ஆனால் தண்டிக்கப்பட்டவர்கள் என்று பார்த்தால் இந்த எண்ணிக்கை 20 விழுக்காடாக அதிகரிக்கிறது.

தமிழ்நாட்டில் கைதிகள் எண்ணிக்கையில் எழுத்தறிவே இல்லாதவர்கள் என்று பார்த்தால் 2745 விசாரணை(யின்றி) கைதிகள், மேலும் 1258 தண்டனைக் கைதிகள் இருக்கிறார்கள். பத்தாவதற்குக் கீழே என்று பார்த்தால் 4188 விசாரணை(யின்றி) கைதிகள், மேலும் 1710 தண்டனைக் கைதிகள் இருக்கிறார்கள்.

இதிலிருந்து தெளிவாக எனக்குத் தெரிந்தது: கல்வி முக்கியம், அதோடு மேல் கல்வி இன்னும் முக்கியம்!

Education profile of prison inmates in India as on 31st December 2021 as per NCRB data

Education profile of prison inmates in India as on 31st December 2021 as per NCRB data

குறிப்பு: இந்தப் புள்ளி விவரங்கள் செய்த குற்றங்களின்படி பிரிக்கப்படவில்லை, எந்தவிதக் குற்றமானாலும், சிறையில் அடைக்கப்பட்டவர்களின் கல்வி அறிவை மட்டுமே சொல்கிறது. தேசியக் குற்ற ஆவணக் காப்பகம் ஆண்டறிக்கையில் சிறையில் இருக்கும் கைதிகளைப் பற்றி ஆண்கள், பெண்கள், மாநிலங்களின் தனி விவரங்கள் எனப் பல விதத் தரவுகள் இருந்தாலும் கல்வித் தகுதியைக் குற்றத்தின் தன்மையின்படி பிரித்த தரவை நான் பார்க்கவில்லை, மூலத் தரவாக data.gov.in தளத்தில் இருக்கலாம், நான் தேடவில்லை.

Tagged in:

, ,