இந்த வாரம் ஒரு வேலை நிமித்தமாக சென்னை கோட்டூர்புரம் சென்றிருந்தேன், அங்கே எனது அலுவல் முடிந்தபின் நேரம் இருந்ததால் அண்ணா நூற்றாண்டு நூலகத்திற்குச் சென்றிருந்தேன். கடைசியாக இந்த நூலகத்திற்கு நான் சென்றது பெருந்தொற்றுக்கு முன், 2018ஆம் ஆண்டு எனக் கூகுள் சொல்கிறது. இப்பொழுது இன்னும் நிறைய வாசகர்கள் இருந்தார்கள், வளாகத்தின் உட்புறம், வெளிப்புறமும் நல்லமுறையில் பராமரிக்கப்படுகிறது, ஒப்பனை அறைகளும் (சென்னை மாநகராட்சி ரெஸ்ட் ரூமை இப்படித் தான் அழைக்கிறார்கள்) சுத்தமாக இருக்கிறது. மகிழ்ச்சி!

ஏழு மாடிக்கும் சென்றேன், நான் உள்ளே சென்ற பகுதிகளில் புத்தகங்கள் ஒழுங்காக அட்டவணைப்படி அடுக்கியிருந்தது, சுலபமாக எடுக்க முடிந்தது. பராமரிப்புக்கு நூலக ஊழியர்களுக்கு நன்றி. இந்த நூலகத்தின் கட்டட அளவுக்குப் புத்தகங்களின் எண்ணிக்கை குறைவு போலத் தோன்றியது. இன்னும் நிறையக் கிடைக்க அரிதான புத்தகங்களை, நிறைய உள்நாட்டு வெளிநாட்டுப் புத்தகங்களை வாங்கி வைக்க வேண்டுகிறேன். இன்றைக்கு இருக்கும் இணைய வசதியைக் கருத்தில் கொண்டு இதை வாசிப்பு (Reading and reference library) நூலகமாகவே வைக்கலாம், உறுப்பினர்களுக்கு (பிறகு இதையே ஆதார் அட்டை இருக்கும் அனைவருக்குமே இலவசமாக) இணைய வழியாக மின்-நூல்களை வழங்கலாம் – ஏற்கனவே தமிழக அரசின் நூலகத் துறை மின்-நூல்கள் கடனாக வழங்கும் திட்டம் ஒன்றை ஆராய்ந்து கொண்டிருக்கிறது எனக் கேள்வி.

சிங்கப்பூரில் இருக்கும் அவர்களின் தலைமை தேசிய நூலக கட்டடத்தைப் பார்த்து, உள்வாங்கி, அதை மாதிரியாகக் கொண்டு சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக கட்டப்பட்டதாகச் சிங்கப்பூரில் சொன்னார்கள். சில ஆண்டுகளுக்கு (2019இல்) சிங்கப்பூர் நூலகத்தைப் பார்த்தேன், அதை நினைவில் கொண்டு அண்ணா நூற்றாண்டு நூலகத்தைப் பார்க்கையில் ஒப்புமை தெரிகிறது, அவர்களைப் போலச் சிறப்பாக நிர்வகித்தால் தமிழர்களுக்குப் பெருமை.

நான் சென்றது புதன் கிழமை, மாலை 4:30 மணி. பெரும்பாலும் கல்லூரி, மேல் படிப்பு வயது மாணவ, மாணவிகள் தான் நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டிருந்தனர் – பலரும் படித்துக் குறிப்பு எடுத்துக் கொண்டிருந்தனர். சில பேரிடம் பலகைக் கணினி (ஐ-பேட் போன்றவை), மேலும் சில பேரிடம் மடிக்கணினி. கட்டிடத்தின் பின்புறம் ஓர் உணவுக் கூடம் இருப்பதாக வாகன நிறுத்தலிடத்தில் பார்த்தேன், உள்ளே செல்லவில்லை.

குறிப்பு: நூலகத்தில் இருந்த சில புத்தகங்களைப் பார்த்துக் கொண்டிருந்த போது வரலாற்றை வரைகதையாக, வேடிக்கையாக 1970களில் வந்த இந்தப் புத்தக வரிசையில் இருந்த மூன்றாம் பாகத்தில் [The Cartoon History of the Universe III by Larry Gonick] பார்வை நின்றது. எடுத்து, ஓரமாக மேஜையில் அமர்ந்து படித்துக் கொண்டிருந்தேன் நேரம் போனதே தெரியவில்லை, ஒன்றரை மணி நேரமாகியிருந்தது, புத்தகங்களின் மாயம் இது தான்!

Categorized in:

Tagged in:

,