🎥தமிழ் ராக்கர்ஸ் (2022), சோனி லைவ் தொடர். நாயகன்: அருண் விஜய் . நாயகிகள்: ஐஸ்வர்யா மேனன், வாணி போஜன். 👮🏾தமிழ்ப் படங்களில் (தொடர்களில்) நாயகன் பெரிய காவல் அதிகாரியாக இருந்தால்:
– அவருக்குக் காதல் கல்யாணம் தான் ஆகியிருக்க வேண்டும்,
– மனைவி கொஞ்சம் நாளிலேயே வில்லனால் (கடத்தி) கொல்லப்பட்டு விடுவார்,
– நாயகன் இறந்த மனைவியின் மேல் இருக்கும் காதலை நினைத்து நினைத்து குடிப்பார், ஆனாலும் மிக நல்லவர், நிலை தடுமாற மாட்டார் – அப்போ எதற்கு பாட்டில் பாட்டிலாகக் குடிக்கிறார்?
– காதல் மனைவி நகைச்சுவையாக பேசுவார், எல்லோரிடமும் நன்றாக பழக கூடியவர், கருணையே வடிவானவர்,
– பல சமயங்களில் காதலை, காதலி தான் சொல்வார்,
– நாயகன் கடமையே கண்ணாக இருப்பார், இரவு பகல் பாராமல் உழைப்பார்,
– மனைவியை சினிமாவுக்கு அழைத்து சென்றால், கடமை அழைக்க பாதியில் மனைவியை அம்போ என்று விட்டுவிட்டு செல்வார்,
– நாயகன் எவ்வளவு பெரிய அதிகாரியாக இருந்தாலும் நாயகன் மற்றும் அவரின் மனைவிக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்காது – என் என்றால் இவரே ஒரு ஆள் ராணுவம் அதனால்!,
– நாயகன் துளிக்கூட லஞ்சம் வாங்க மாட்டார். தானும்,தனது குழுவும் குடிக்கும் டீ, காபிக்குக் கூட அவர் தன் சொந்த காசு தான் கொடுப்பார், அரசின் பணத்தை செலவு செய்ய மாட்டார்,
– நாயகனிடம் இருக்கும் கை துப்பாக்கி மட்டும் குண்டுகளைச் சுட்டு கொண்டே இருக்கும், எதிரிகளின் கை துப்பாக்கி ஆறு குண்டுகள் என்ற சத்தியத்திற்க்கு கட்டுப்பட்டு சீக்கிரமே செயல் இழந்துவிடும்,
– மனைவியைக் கொன்ற வில்லன், தற்போது செத்துவிட்டார் என போலீஸ் பதிவுகள் சொல்லும்,
– யாராலும் தீர்க்க முடியாத குற்றத்தை, நாயகன் தான் தீர்க்க முடியும் என நம்பி, தமிழ்நாட்டின் ஏன் அமெரிக்க ஜனாதிபதிக் கூட குடிகார நாயகனைத் தேடி அவரின் வீட்டிற்கு வருவார். வந்த மிக உயர் அதிகாரிக்கு இறந்த மனைவியை நன்றாக தெரிந்திருக்கும், அவர் கையால் இவர் சாப்பிட்டு இருப்பார்,
– நாயகன் எந்த வழக்கை எடுத்தாலும் மேலே சொன்ன இறந்த வில்லனின் தொடர்ப்பு இருந்து கொண்டே இருக்கும்,
– எடுக்கப்பட்ட புது வழக்கில் நாயகனுக்கு உதவ ஓர் பெண் உயர் அதிகாரி தான் உடன் வருவார், ஆண் அதிகாரிகள் உதவ வரலாம், ஆனால் எக்காரணம் கொண்டும் எல்லா இடத்திற்கும் உடன் வர கூடாது,
– நாயகன் பேசவே மாட்டார். அவரின் உதவியாளர் தான் பேசுவார், அவரிடம் தான் இரண்டாவது நாயகி, ஏன் நம்ப சார் இப்படி இருக்கிறார் என்பார், அதற்கு உதவியாளர், சார் ரொம்ப நல்லவர் மேடம், முன்னெல்லாம் காபிக் கூட குடிக்கா மாட்டார், ஆனால் எல்லாம் அவர் மனைவியை அவர் கண் முன்னாடியே கொல்லும் வரை, அதற்கு பிறகு தான் மாறிவிட்டார். இதை கேட்ட இரண்டாவது நாயகி, உடனேயே நாயகன் மேல் காதல் கொள்வார்,
– முதலில் நாயகனுக்கு யார் யார் வேலை கொடுத்தார்களோ, உதவினார்களோ,இறுதியில் அவர்களையே சந்தேகப்படுவார்,
– எவ்வளவு தூரம் என்றாலும், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி என்றாலும், பல நாட்கள் என்றாலும் நாயகன் தான் காரை ஓட்டுவார். போலீஸ் ஆர்டர்லி முறைக்கு எதிரானவர் நம் நாயகன்.
– ஷெர்லாக் ஹோம்ஸ் கண்ணில் படாத துப்பு கூட, ஏன், அணுக்களுக்கு உள்ளே இருந்தாலும் கூட நம் நாயகனுக்கு வெறும் ஒரு நொடி நோக்கியதில் தெரிந்துவிடும்.

நிற்க. இப்படி சொல்லி கொண்டே போக, நிறைய இருக்கிறது, ஆனால் போதும்.

மேலே சொன்னவற்றில் பலவும் தமிழ் ராக்கர்ஸ் (2022) தொடரில் வரும் அருண் விஜய் கதாபாத்திரத்திற்கும் பொருந்தும். முதல் அத்தியாயம் நன்றாகவே இருந்தது, இரண்டு கூட பரவாயில்லை, ஆனால் அடுத்த ஆறும், எப்போட இது முடியும் என் தோன்ற வைக்கும் ரகம். கடைசி ஐந்து அத்தியாயங்களில் நாயகன் ஜீப்பிலேயே போய் கொண்டு இருக்கிறார், நிஜத்தில் அவ்வளவு நேரம் ஓட்டினால் ஆந்திரா-தமிழக எல்லையிலிருந்து சென்னை இல்லை, சிங்கப்பூரே வந்துவிடும். அதிசயம் இந்த முழு பயணத்திலும், காட்டில் கூட இவர்கள் குழுவில் இருக்கும் அனைவரின் செல்பேசிகளுக்கும் சிக்னல் கிடைக்கிறது – எந்த மொபைல் நிறுவன சேவை என்று தெரியவில்லை.

🎭அருண் விஜய் நன்றாகவே நடித்துள்ளார், அவருக்கு அடுத்து அழகம் பெருமாள் மற்றும் வினோதினி வைத்தியநாதன் இருவரும் நன்றாக செய்துள்ளார்கள் – தயாரிப்பாளராக வரும் அழகம் பெருமாளின் பாத்திரத்திடம் இன்னும் நிறைய வரும் என எதிர்பார்த்து ஏமாந்தேன். எது இருந்தாலும், யார் நடித்தாலும் கதை என்று ஒன்று வேண்டுமே, அது இரண்டாவது அத்தியாயத்திலேயே தொலைந்துவிட்டது, தமிழக காவல் கண்டுபிடிக்க வேண்டியது அதை தான். இன்று தமிழ் சினிமா பார்க்கும் குழந்தைகளுக்குக் கூட தமிழ் ராக்கர்ஸ்ஸைப் பற்றி இந்தத் தொடரில் வந்ததைவிட நிறைய தெரிந்திருக்கும், தெரியாத விசயம் ஒன்று கூட இல்லை எனலாம்.

ஏன் தளபதி விஜய் சாயலில் வரும் கதாபாத்திரத்தின் மேல், அவரை சுற்றியுள்ளார்களாக வருபவர்களின் மேல் இவ்வளவு எதிர்மறை காட்சிகள்? விஜய் மட்டுமா தமிழ் சினிமா? அவரை மட்டுமே காட்டுவது ஒரு தலைப்பட்சமாக தோன்றுகிறது.

இதுவரை தமிழில் பார்த்திராத, தமிழ் சினிமா உலகுக்கு அருகில், அதிலுள்ள பலரின் முகமூடியை கிழித்திருக்க வேண்டிய தொடர் சாதாரண வில்லன்-போலீஸ் கதையாக போனது ரசிகர்களின் இழப்பு.

#tamilrockerzsonyliv #TamilrockerzOnSonyLIV #webseriesreview #ArunVijay

Categorized in:

Tagged in:

, , ,