வேலை அதிகமாக இருந்ததால் சில வாரங்கள் கழித்து நேற்று தான் சினிமா, சிரீயல்கள் பக்கம் வந்தேன். புதிதாக ஒரு சிரீயல் பார்க்கத் தொடங்கலாம் என்று தேடி, ஹொட்ஸ்டாரில் சமீபத்தில் வந்துள்ள “ஹர்ட் பீட்” (Heart Beat) என்கிற மருத்துவமனையில் நடக்கும் தொடரைத் தேர்வு செய்தேன். இதுவரை ஆறு அத்தியாயங்களை முடித்துள்ளேன். பார்க்கத் தொடங்கும் போது, நம்மூர் சிரீயல் என்பதால் ஹாலிவுட் “குட் டாக்டர்”, “கரே அனடோமி ” போன்றவற்றின் அப்பட்டமான நகலாக இருக்கும் என்று தான் தோன்றியது, முதல் சில அத்தியாயங்கள் பெரும்பாலும் அப்படித் தான் இருக்கிறது. ஆனாலும் போகப் போக “ஹர்ட் பீட்” தனக்கென்று ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள முயல்வது தெரிகிறது.

தலைமை மருத்துவர் ரதி என்கிற முக்கியப் பாத்திரத்தில் வரும் அனுமோல் “ஒரு நாள் இரவு” படத்தில் சத்யராஜ் அவர்களோடு அருமையாக நடித்திருப்பார், அதனால் நன்றாகச் செய்வார் என்று எதிர்பார்க்கிறேன். புது மருத்துவர்களாக வரும் பெண் பாத்திரத்திரங்களில் வரும் இருவரும் நன்றாகச் செய்கிறார்கள், அதே போல மூத்த மருத்துவர்களாக ஜோடி நடிகர்களின் நடிப்பும் கவருகிறது. நல்ல திரைக்கதைக்கு முக்கிய பாத்திரங்களுக்கு ஆழ் மனதில் ஒரு சோகம், அல்லது குற்றவுணர்ச்சிகள் இருத்தல் அவசியம் – அது இங்கே விடுபடாமல் சேர்த்திருந்திருக்கிறார்கள்.

இருந்தாலும் நிறைய இடங்கள் கற்றுக்குட்டி தனமாக இருக்கிறது. முதலாவதாக டப்பிங் பல இடங்களில் சரியாகவில்லை, குரல்களும் ஒட்டவே இல்லை. ஷர்மிளா தப்பா, சேவிலியராக வருகிறார், அவருக்குக் குரல் வேறு யாரோ, அது ஏனோ இடிக்கிறது. சிறு காயங்களுக்கு, உடல் வலிக்கு மருத்துவம் பார்ப்பவரே, இருதய அறுவை சிகிச்சையும் செய்கிறார் – இது மாதிரி நடைமுறையில் இன்று (தமிழ்நாட்டில்) நடக்க வாய்ப்பேயில்லை. ஒரு மருத்துவமனை சார்ந்த கதையில் காட்டப்படும் நோய்கள், அதை மருத்துவர்கள் எப்படிக் கண்டறிகிறார்கள், சிக்கல்கள் இடையுருகளைக் கடந்து அதை எப்படிக் கையாள்கிறார்கள் என்பது தான் இதில் சுவையான பகுதிகள், அது “ஹர்ட் பீட்” மிக மிக குறைவாக வருகிறது – அறுவை சிகிச்சை அறை தான் “குட் டாக்டர்”இல் முக்கியமான இடம், இங்கே அது ஓரிரு நிமிடங்கள் தான் வருகிறது. சிக்கலான மருத்துவத்தைக் காட்டுவதற்குப் பதில் மனைவி கணவனை அடிப்பதைக் கண்டுபிடிப்பது தான் இதுவரை காட்டப்படுகிறது!

இது போலப் பல சொதப்பல்கள் இருந்தாலும் இந்த சிரீயல் குழுவின் முயற்சியைப் பாராட்டித் தொடர்ந்து பார்க்கவிருக்கிறேன்.

Tagged in:

, ,