
Kanchi Kailasanathar Temple
காஞ்சி கைலாசநாதர் திருக்கோயில்
இந்த வாரம் புதன் கிழமை நானும் நண்பன் இ.ரவியும், காரில் காஞ்சிபுரம் சென்றோம். சென்னையில் இருந்து காஞ்சி, சுமார் 75கி.மி., ஒன்றரை/இரண்டு மணி நேரமாகும். நாங்கள் காலை 9:30 மணிக்கு வீட்டைவிட்டு கிளம்பி, மதியம் 3:00 மணிக்கு வீடு திரும்பினோம். காஞ்சி செல்லும் சாலை, பிரதமரின் தங்க நாற்கர திட்டத்தின் கீழ் வருவதால், பல வழி (சில இடத்தில் ஆறு வழி, சில இடத்தில் எட்டு வழி) சாலையாக மாற்றும் பணி நடைப்பெறுகிறது. இதனால் பல இடங்களில் இடஞ்சல்கள் இருந்தும், வேலை முடிந்த சில இடங்களில் 100 கி.மி.க்கு மேல் செல்லமுடிகிறது. முழுப்பணி முடிந்தால் நாட்டிலுள்ள சிறந்த சாலையாக இது வரலாம்.
திடிரென்று நாங்கள் காஞ்சிக்கு போன காரணம், இந்த வாரம் சக்தி விகடனில் காஞ்சி கைலாசநாதர் திருக்கோயிலின் சிறப்பைப் படித்து, கைலாசநாதரை தரிசனம் செய்யவே. திருக்கோயிலின் சிறப்பைப் படிக்க சக்தி விகடனின் இந்த வலைப்பக்கதிற்கு செல்லவும்.
காஞ்சி மடத்திலிருந்து 2 கி.மி.க்கு குறைவான தொலைவில் கோயிலுள்ளது (மடத்தையொட்டிய சாலையில் சென்று வலது திரும்பி நேர் செல்ல வேண்டும்). கோயில் மிக அழகாக இருக்கிறது, மிகச்சுத்தமாகவும் பராமரிக்கப்படுகிறது – நன்றி இந்திய அரசின் தொல்பொருள் துறை (ASI). கோயில் சுமார் 1600 ஆண்டுகள் பழமையானது. இன்றும் சில இடங்களில் அந்த பழைய வர்ணங்களை நாங்கள் பார்த்தோம் (கீழ் படம்).
நாங்கள் சென்ற சமயம் கோயிலில் வெளிநாட்டினர்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது (ஏன் நம் இந்தியர்கள் இங்கே வருவதில்லை?).
கைலாசநாதரின் மூலச்சந்நிதி மற்றும் தினப்படி பூஜைக்கள், 1600 ஆண்டுகளாக ஒரே குடும்பத்தினர்களால் செய்யப்படுக்கிறதென்று எங்களுக்காக அர்ச்சனைச் செய்து, அழகான பிழையில்லாத பிரிட்டிஷ் ஆங்கிலத்தில் விளக்கிய கோயில் குருக்கள் சொன்னார் (1600 ஆண்டுகள், ஆச்சரியம் தானே?).
ஒரு விடுமுறை நாளில், சென்னையில் இருப்போர் சுற்றிவிட்டு வர காஞ்சி ஒரு அருமையான இடம். சென்றுவிட்டு வந்து, உங்கள் அனுபவத்தை கீழேயுள்ள கருத்து தொடுப்பில் எழுதவும்.
இந்தக் கோயிலின் விபரங்களைத் தெரிந்துக்கொள்ள 2014இல் “கல்லில் ஓர் கவிதை–காஞ்சி கைலாசநாதர் கோவில்“ என்னும் தலைப்பில் திரு. R. கோபு (R.Gopu) அவர்கள் தமிழ் இணையக் கழகத்தின் மாதாந்திர தொடர் சொற்பொழிவில் பேசியிருக்கிறார்.

