பலவிதமான இணைய மோசடிகள், ஒரு தொலைப்பேசி அழைப்பிலிருந்து தான் ஆரம்பிக்கிறது.

இன்று எனக்கு இந்த தெரியாத எண்ணிலிருந்து ஓர் அழைப்பு. ட்ரூகாலர் அதை அடையாளம் காணவில்லை, எனவே நான் அதை எடுத்தேன். தொலைப்பேசி துறையிலிருந்து பேசுகிறோம் என்று ஆங்கிலத்தில் ஒரு தானியங்கி கணினி பெண் குரலில் அறிமுகம் செய்து கொண்டது. அடுத்த ஒரு மணி நேரத்தில் உங்களின் பெயரில் இருக்கும் அனைத்துச் செல்பேசி இணைப்புகளும் துண்டிக்கப்படும் என்று மிரட்டலாகத் தொடங்கி, மேலும் விவரம் தெரிய எண் ஒன்றை அழுத்தவும் என்றது. உடனே நான் “உன்னால் முடிந்ததால் செய்து கொள்ளவும்” என்று பீட்டர் ஆங்கிலத்தில் சொல்லி இணைப்பைத் துண்டித்தேன்! பின்னர் நம்மால் முடிந்த சமூகத் தொண்டு என்று – ட்ரூகாலருக்கு சென்று இந்த உத்தரப் பிரதேச பி. எஸ். என். எல். எண்ணைப் போலி தொலைப்பேசி துறை என்று சிகப்பு வண்ணத்தில் பதிவு செய்தேன்.

நம்ம ஊர் அரசாங்கத் துறைகள் நேராகப் போனாலே பதில் சொல்ல மாட்டார்கள், துண்டிப்பெல்லாம் செய்துவிட்டு, நாம் போய் கேட்டால் தான் சொல்வார்கள், அவர்கள் போய், முன்பே நமக்கு அழைக்கிறார்களாம்! ஆரம்பமே பிசிறு தட்டுதே!

ரூம் போட்டு, இல்லை, வீடு கட்டி வித விதமாக யோசிக்கிறார்கள்!

குறிப்பு: இது தெரிந்த விஷயம் தான் என்றாலும் அப்பாவிகளின் பாதுகாப்புக்காக மீண்டும் மீண்டும் சொல்லலாம். நீங்களும் பகிரவும்.

Tagged in: