இரா.முருகன் அவர்கள் எழுதிய கிழக்கு பதிப்பகத்தின் “மூன்று விரல்” புத்தகத்தைப் படித்ததில் இருந்து நான் அவரின் ரசிகராகவே ஆகிவிட்டேன். கடினமான ஒரு விஷயத்தை மிக இயல்பாக நகைச்சுவையோடு சொல்லும் அவரின் பாணி எனக்கு மிகவும் பிடித்துள்ளது. ஆதலால் இந்த ஆண்டு சென்னை புத்தகக் காட்சிக்கு சென்றவுடன் நான் நேரே சென்றது என் நண்பர் திரு.பத்ரி ஷேசாத்ரி அவர்களின் கிழக்கு பதிப்பத்தின் கடைக்கு தான். பத்ரி கூறிப்பிட்டார் இரா.முருகன் இதுவரை கிழக்குக்கு நான்கு புத்தங்கள் எழுதியுள்ளார் என்று – உடனே என்னிடம் இல்லாத மீதம் இரண்டு புத்தங்களை வாங்கிவிட்டேன். அதில் ஒன்று தான் “லண்டன் டயரி”. வாங்கி ஒரிரு நாட்களிலேயே படித்தும் விட்டேன். இதை படித்தயுடன் எனக்கு தோன்றியது – ஆங்கிலத்தை விட என்னால் தமிழ் புத்தங்களை வேகமாகப் படிக்க முடிகிறது என்று.
லண்டன் டயரியில் லண்டனின் சரித்திரத்தை ரோமானியர்களின் ஆரம்ப கால ஆட்சியிலிருந்து நமக்கு தெரிந்த விக்டோரியா மகாராணியின் ஆட்சி வரை சுவாரஸ்யம் குறையாமல் சுருக்கமாக சொல்கிறார் ஆசிரியர். சரித்திரத்தை ஒரேயடியாக சொல்லிக் கொண்டு போகாமல், ஒவ்வொரு பகுப்பிலும் ஒரிரு பக்கங்கள் எழுதிவிட்டு தற்கால லண்டனுக்கு வந்துவிடுகிறார். அதில் ஒரு சுற்றுலாபயணியின் கண்களுக்கு தெரியும் அழகான லண்டனைப் பற்றி நம் கண்முன்னே துல்லியமாக படம்பிடித்து காட்டியுள்ளார் திரு.இரா.முருகன்.
புத்தகத்தின் விமர்சனத்தில் சொல்லியிருப்பது மிகப் பொருத்தம் “உதடு விரிந்த புன்னகை குறையாமல் லண்டனின் சரித்திரத்தை உள்வாங்கவும், உட்கார்ந்த இடத்தில் இருந்தபடியே லண்டனின் குளிரை உணரவும் செய்கிறார் இரா. முருகன்”

London