இன்று முகநூலில் நண்பர், எழுத்தாளர் திரு நா கண்ணன் அவர்கள் ஒரு வினாவை எழுப்பிருந்தார். அதன் சுருக்கும் ‘சலங்கை ஒலி (1983)’ திரைப்படத்தின் அளவிற்கு, ஏன் சமீபத்தில் வெளிவந்த மற்றொரு நடனப்படமான “லக்ஷ்மி (2018)” வெற்றிப் பெற, பேசப்படவில்லை என்பது தான்.

அதற்கு என் தாழ்மையான கருத்து கீழே:

நண்பர் கண்ணன் அவர்களே, இந்த படத்தை  வந்த போதே நான் பார்த்து என் (shameless plug) பதிவை எழுதியுள்ளேன் – நல்ல படம், அந்த சிறுமி மிக அற்புதமாக தனது பாத்திரத்தை செய்திருந்தாள்.


இந்தப் படத்தை ‘சலங்கை ஒலி’யோடு ஒப்பிட்டு, பரதநாட்டியத்திற்கு, இருக்குமளவிற்கு இப்போது இருக்கும் நடனங்களுக்கு மவுசு இல்லை என்பதெல்லாம், “மொட்டைத்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு” போடுவது போல என்பது என் எண்ணம்.

1.“லட்சுமி (2018)” ஒரு நல்ல படம் தான்! ஆனால் சலங்கை ஒலி அளவிற்கு, அபாரமான படம் கிடையாது, அந்த அளவுக்கு அழுத்தமான ஒரு காதலோ, பாடல்களோ,  அற்புதமான இசையோ, இந்த படத்தில் கிடையாது. நீங்கள் ஒரு சிறந்த எழுத்தாளர், உங்களுக்கு தெரியாதது இல்லை- கதையிலேயே ஒரு ஆழம் இருக்க வேண்டும், இந்த படத்தில் அது நிச்சயம் இல்லை, கதாப்பத்திரங்களோடு நாம் அந்தளவு ஒற்றமுடியவில்லை!

2.இன்னொன்று, “சலங்கை ஒலி” வந்த போது அன்றிருந்த மக்களுக்கு, அது ஒரு புதுமையான படமாக இருந்திருக்கும், ஆனால் செல்லும் இடமெல்லாம் கையில் செல்பேசியோடு சுற்றிக்கொண்டிருக்கும், இன்றைய சமுகத்தினர், தினம் தினம் பல நூறு கதைகளையும், சிறு படங்களையும் பார்த்து கொண்டு இருக்கிறார்கள், அதில் “வாழ்க்கையில் போராடி வெற்றி பெறும்” கதைகளும் அடக்கம்.  இப்படி இருக்கும் சூழ்நிலையில், எந்த ஒரு படமும் தனித்து தெரிய வேண்டும் என்றால், அது மிக மிக கடினம் -பாகுபலி போன்ற ஒரு சில படங்களே தனித்து இருக்கிறது – ஆனால் அதற்கான உழைப்பு மிக மிக அதிகம்.

3.“சலங்கை ஒலி” எடுத்த அதே குழுவினரே, அதே வயதில்,  அதே முயற்சியோடு அந்த காலத்திலிருந்து இன்று வந்தார்கள் என்றாலும் கூட, அவர்கள் அப்போது போட்ட உழைப்பு இப்போது பத்தாது, அதைவிடப் பல நூறு மடங்கு உழைத்தால் தான் இன்று தனித்து இருக்க முடியும், போட்டி அப்படியாகிவிட்டது.

என்ன செய்ய? இதுவும் நல்லது தானே!

நன்றி.

Categorized in:

Tagged in: