தியானம் செய்தால் நம் மூளையின் உருவ அமைப்பே (neuroplasticity) எப்படி மாறுகிறது என்று இந்த BBC காணொலி காட்டுகிறது. முதல் கருத்துரையில் இணைய முகவரியைக் கொடுத்துள்ளேன், நிச்சயம் பார்க்கவும்.

தியானம், மன அமைதிக்குச் சிறந்தது என்று நமக்கு நம் முன்னோர்கள் (உலகின் மற்ற சமுகங்களிலும் இருக்கும்) சொல்லாத புராணங்கள் இல்லை. அதெல்லாம் ஆன்மிகத் தேடலுக்கான வழி, அன்றாட வாழ்வில் அதற்கு நேரமும் அவசியமும் ஏது என்று சொல்லிக்கொண்டு நாம் மறந்து யுகங்கள் ஆகிவிட்டது. இப்போது அதே தியானத்தை, மந்திரங்களைத் தவிர்த்து, வெறும் மூச்சுப்பயிற்சி என்று யூட்யூப்பில் டாக்டர் போலத் தோன்றும் ஒருவர் சொன்னால் இது தான் நவீன வாழ்வில் மன அழுத்தத்தைக் குறைக்க ஏற்றவழி என்று ஏக்கமாக மட்டும் பார்த்துச் செய்யாமலே கடந்துவிடுவோம்.

என் யோகா குரு எனக்கு மந்திரங்களைச் சொல்லிச் செய்யும் சுலபமான (பதினைந்து நிமிடங்களில் செய்யும்) தியானத்தையும், மந்திரமில்லாமல் நாம் விடும் மூச்சில் மட்டுமே நம் கவனத்தை (mindfulness) ஒருமுகப்படுத்திச் செய்யும் தியானத்தையும் சொல்லிக்கொடுத்துள்ளார். இருந்தும் நான் அவற்றைச் செய்து வருடங்கள் ஆகிவிட்டது.

ஆனால் சமீப சில மாதங்களில் எப்போதாவது மன அழுத்தமாக இருந்தால், முந்திய நாள் தூக்கம் சரியாக இல்லை என்றால் சுலபமாகத் தியானம் செய்ய cult.fit என்கிற செயலியில் நிபுணர் ஷியாம் அவரின் இதமான குரலில் வழிகாட்டும் மிக எளிய விழிப்புணர்வு (mindfulness) பயிற்சிகளைச் செய்கிறேன். வெறும் ஏழில் இருந்து பத்து நிமிடங்கள் போதும் – அதிக வெளிச்சமும், சத்தமுமில்லாத இடம் வேண்டும், இயர்போன் இருந்தால் இன்னும் வசதி. உங்களுக்கு நம்மூர் ஷியாம் குரல் வேண்டாம், மேலை நாட்டுக் குரலில் தான் தியானப் பயிற்சி வேண்டும் என்றால் ஹெட்ஸ்பேஸ் (headspace) செயலியை முயற்சிக்கலாம். இந்த வகைச் செயலிகளைப் பற்றி எனது ‘நுட்பம்’ புத்தகத்தில் 21 மற்றும் 50ஆவது கட்டுரைகளில் விவரித்துள்ளேன்.

இறுதியாக mindfulness தியானம் என்பதை எல்லோரும், எந்த வயதிலும், எந்த உடல் உபாதைகள் இருந்தாலும், நாத்திகவாதிகளாக இருந்தாலும் செய்யலாம் – சில நாட்கள் செய்தாலே மன அழுத்தம் குறையும், இதை இந்த BBC காணொலி MRI scan மூலமாகச் சுட்டிக்காட்டுகிறது – மூளையில் இருக்கும் மன அழுத்தம் தொடர்பான பகுதிகளில் வீக்கம் குறைந்துள்ளதை, இது நல்லது, அதோடு படைப்பாற்றல் தொடர்பான பகுதிகள் வளர்ந்துள்ளதையும் பார்க்கலாம். வீடியோவைப் பார்த்ததிலிருந்து நானும் அடிக்கடி தியானம் செய்ய வேண்டும் என்ற தூண்டுதல் நிச்சயம் வந்துள்ளது.

Categorized in:

Tagged in:

, ,