தமிழ்நாட்டில் நடக்கும் பெருவாரியான பொது நிகழ்ச்சிகளில், நம்மூர் வெயிலுக்குக் கொஞ்சம் கூட உதவாத ஒரு பொருள் நம் தோளில் அணிவிக்கப்படும் – அது பட்டு ஜரிகை தரித்த பொன்னாடைகள். சில பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர்களிடமே பல நூறு சால்வைகள் சேர்ந்துவிடும், அப்படியென்றால் அரசியல் தலைவர்கள், பிரபல எழுத்தாளர்கள், பேச்சாளர்களின் நிலை எப்படியிருக்கும்? அவர்கள் வீட்டில் இதையெல்லாம் என்ன செய்வதென்றே தெரியாது. அவர்(கள்) நடத்தும் அடுத்த நிகழ்ச்சியில் வேறு ஒருவருக்குக் கொடுக்கப்படும் இந்த சால்வைகள், சுற்றிக்கொண்டே இருக்கும் என நினைக்கிறேன்.

ஏழைகள்

இதைக் குளிரில் கஷ்டப்படும் ஏழைகளுக்குக் கொடுக்கலாம் என நினைத்தால் அதுவும் வேலை செய்யாது. இது பட்டு, அதுவும் ஜரிகை (உண்மை பட்டா, ஜரிகையா என்றெல்லாம் கேட்கக் கூடாது) தரித்த சால்வைகள், இதை யாருமே போர்த்திருக்கக் கூட முடியாது. என் அப்பாவிடம் இருந்த பல சால்வைகளை வீட்டில் இருக்கும் அலமாரி தட்டிகளில் காகிதத் தாள்களுக்குப் பதிலாகப் போட்டு அதன் மேல் துணிகளை அடுக்கத் தான் பயன்படுகிறது.

போட்டோ ஃபிரேம்

புத்தகங்களை நினைவுப் பரிசாகக் கொடுக்கலாம், ஆனால் ஏற்கனவே என்னிடம் இருக்கும் புத்தகங்களைக் கொடுக்கிறார்கள், அவர்களுக்கு என்னிடம் இருப்பவை எப்படி தெரியும்? சிலர் ஓவியங்களை ஃபிரேம் செய்து கொடுக்கிறார்கள். வேறு சிலர் புதுமை என நினைத்து நடக்கும் நிகழ்ச்சியில் எடுக்கப்பட்ட படத்தை உடனடியாக அச்சு செய்து ஃபிரேம் செய்து கொடுக்கிறார்கள், நம்மையெல்லாம் நாடோடிகள் படத்தில் வரும் சின்னமணி (வானத்தைப் போல மனம்படைத்த கதாபாத்திரத்தில் வரும் நம்புங்கள் நாராயணன்) என நினைத்துவிட்டார்கள் போல. இந்த மாதிரி எத்தனைப்படங்களை வீட்டில் மாட்டுவது? அறையின் சுவரில் காலி இடமேயில்லை, இரவில் நடக்கும் போது எனக்கே என் மூஞ்சி பயமாக இருக்கிறது!

நாடோடிகள் படத்தில் வரும் சின்னமணி

நாடோடிகள் படத்தில் வரும் சின்னமணி

நன்கொடை

ஒரு சில நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சியில் இதற்குப் பதிலாக நன்கொடை பரிசு செலவுச்சீட்டுகளை அன்பளிப்பாகக் கொடுக்கிறார்கள். அந்த கிஃப்ட் வவுச்சர் அவர்கள் தேர்ந்தெடுத்த தொண்டு நிறுவனத்திற்குப் பணமாக சென்றுவிடம். வேறு சில நிகழ்ச்சிகளில் காபி மக்கென்று ஒரு வினோத குவளையைக் கொடுக்கிறார்கள். இது அமெரிக்காவினர் காப்பி குடிக்கும் பெரிய கோப்பை அளவில் இருக்கிறது. நம்மூரில் குடிக்கும் மூன்று டம்ளர் காபியை இதில் ஊற்றலாம். இதற்காகத்தான் பொருத்தமாக அதற்குக் காபி மக்கென்று பெயர் வைத்திருக்கிறார்கள், குளியலறையில் நாம் பயன்படுத்தும் மக்கை நினைவுபடுத்தும் விதமாக.

இப்படி உபயோகமில்லாத பொருளை அன்புப் பரிசாகக் கொடுப்பதைவிட, எதுவுமே கொடுக்க வேண்டாம். மேடைக்கு அழைக்கப்படும் பலரும் அதைத் தான் விரும்புவார்கள் என நினைக்கிறேன். மக்கள் ஜனாதிபதி டாக்டர் திரு கலாம் போன்றவர்கள் ஒரு நிகழ்ச்சிக்கு வரச் சம்மதிக்கும் போதே, அவரின் உதவியாளர் இதை (எதுவும் கொடுக்கக்கூடாது என்பதை) கட்டளையாகவே இடுவார்.

அடிக்குறிப்பு

சில வாரங்களுக்கு முன் புதுச்சேரி போயிருந்த போது, அங்கே அருங்காட்சியாகத்தின் வாயிலில் பட்டு ஜரிகை சால்வைகளை அழகாகச் சுருக்குப் பைகளாக தைத்து, ஒவ்வொன்றும் ரூபாய் 30 யிலிருந்து ரூபாய் 50க்கு விற்றுக்கொண்டிருந்தார்கள். சில  பைகளைப் பேரம்பேசி வாங்கிவந்து என் அம்மாவிடம் கொடுத்தேன். நம்மிடம் இருக்கும் சால்வைகளைத் தையல்காரரிடம் கொடுத்துத் தைக்கக் கொடுத்தால் கூலி முழுப் பையின் விலையைவிட அதிகமாகவிருக்கும்.

 

புதுச்சேரி அருங்காட்சியாகம் - பட்டு ஜரிகை சால்வைகள் ரூபாய் 30 முதல் ரூபாய் 50

புதுச்சேரி அருங்காட்சியாகம் – பட்டு ஜரிகை சால்வைகள் ரூபாய் 30 முதல் ரூபாய் 50

Tagged in: