ஒரு காலத்தில் தமிழ் (தமிழ்-ஆங்கிலம்) அகராதி என்றால் சென்னை பல்கலைக்கழகத்தின் அகராதி, லிப்கோ தமிழ்-ஆங்கில அகராதி போன்றவை தான். இணையத்தில் எதுவுமே இருக்காது. லிப்கோ அகராதியை சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன் என் தந்தையின் அனுமதியோடு சோதனை முயற்சியாக செய்து பார்த்தேன். அது அப்போது வெற்றிப் பெறவில்லை, அதனால் கைவிடப்பட்டது. மீண்டும் கொண்டு வர வணிகரீதியாக வாய்ப்புகள் தெரியவில்லை.
இருபத்தைந்து வருடங்களாகவே ஆங்கில அகராதிகள் கணினியில் சுலபமாக கிடைக்கிறது. சுமார் பத்தாண்டுகளாக இணையத்தில் கூகுள், அமேசான் கிண்டல் போன்றவர்கள் தருகிறார்கள். ஆனால் தமிழ் அகராதிகள், அதுவும், பிழையில்லாத, நிரம்ப வார்த்தைகள் இருக்கும் அகராதிகள் இணையத்தில் இருக்கவில்லை. பல முயற்சிகள் நடந்தும், நிலைக்கவில்லை (நான் மேலே சொன்ன லிப்கோ இணைய அகராதி ஒரு சிறிய உதாரணம் தான்).
ஆனால் கடந்த மூன்று அல்லது நான்கு ஆண்டுகளாக பல நல்ல தமிழ் அகராதிகள் இணையத்தில் சுலபமாகக் கிடைக்கிறது. அமேசான் கிண்டலில் புத்தகம் வாசிக்கும் போது ஒரே ஒரு தொடுதலில் மந்திரம் போல், தமிழ் அர்த்தம் தோன்றுகிறது. மைக்ரோசாஃப்ட் வேர்ட்டில் (Microsoft Word) கூட இரண்டு சொடுக்கில் வருகிறது. கூகிள் குரோம் (Google Chrome) அல்லது மைக்ரோசாஃப்ட் எட்ஜ் (Microsoft Edge) உலாவிகளில் நிறுவக்கூடிய கூகிள் அகராதியின் (Google Dictionary extension) உதவியால் ஒரு சுட்டியில் அர்த்தங்கள் தெரிகிறது. இப்போதெல்லாம் ஆங்கில வாரத்தையை (உ. த. “Smartphone in Tamil”) என்று கூகுளில் தேடினாலே தமிழ் வார்த்தை வந்துவிடுகிறது. ஆனால் பல சமயங்களில் கூகுள் செய்யும் பரிந்துரை எனக்குச் சரியாகப்படாது. இதற்காகவே நான் சில அகராதி தளங்களைக் குறித்து வைத்திருக்கிறேன்.
இந்த அமெரிக்க பெரிய நிறுவனங்களைத் தவிர உள்ளூரிலும் பலர் (ஆத்ம நிர்பார் பாரத் / சுய சார்பு இந்தியா?) பல தமிழ் தன்னார்வலர்கள், மற்றும் தமிழக அரசும் பலவற்றைப் படைத்து இலவசமாக வெளியிட்டுள்ளார்கள் – அதிலும் சில, படைப்பாக்கப் பொதுமங்கள் (Creative Commons) உரிமத்தில் கிடைக்கிறது – அவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். இந்தத் துறையை 25 ஆண்டுகளுக்குப் பார்த்து வருகிறேன் என்கிற முறையில் எனக்கு மிக மகிழ்ச்சி. இதை இப்படித் தான் திறந்தவெளியில், விலையில்லாமல் செய்ய முடியும்.
எனக்குத் தெரிந்து இணையத்தில் இருக்கும் சில தமிழ் மற்றும் தமிழ்-ஆங்கிலம் அகரமுதலிகளின் பட்டியல் கீழே. உங்களுக்குத் தெரிந்தவை விடுபட்டிருந்தால் கீழே கருத்திடவும்.
List to the dictionaries
- தமிழக அரசின் சொற்குவை: நான் தினம் அடிக்கடி பயன்படுத்துவது, சில ஆண்டுகளுக்கு முன் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக நிறுவப்பட்ட சொற்குவை தளம். இங்கே ஒரே தேடுதலில், ஆங்கில வார்த்தைக்கோ, தமிழ் வார்த்தைக்கோ பல திறவுகளிலிருந்து விளக்கமும், இணைச்சொற்களையும் (synonyms) கொடுக்கிறார்கள். தளம் வேகமாகவும் இருக்கிறது. இதில் புதுப் புது வார்த்தைகளை அடிக்கடி சேர்க்கவும் செய்வதாக டிவிட்டரில் வருகிறது. பாராட்டுக்கள். அரசைக் குறைமட்டுமே செய்யும் நாம், அவர்களின் நல்ல முயற்சிகளையும் பாராட்ட வேண்டும்.
- தமிழ் இணையக் கல்விக்கழகம் – இதில் சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்ப் பேரகராதி, பால்ஸ் அகராதி மற்றும் பல அகராதிகள் இருக்கிறது
- விக்கிமூலம் தமிழ் அகராதிகளைத் தொகுப்பு
- அகரமுதலி.com: உள்ளே எச். டி.எம். எல். லில் தெரியும் இணைய முகவரியைப் பார்த்துப் பயப்பட வேண்டாம், இது சரியானது தான். இருப்பது தமிழில், நீங்கள் இதை அகரமுதலி.com என உள்ளீடுச் செய்தால் அதுவாகவே மாறிவிடும்
- மதன் கார்க்கியின் சொல் – இதைப் பயன்படுத்த இலவச பதிவுத் தேவை.
- தமிழ்ப் பேழை
- வாணி சொல்திருத்தியின் அகராதி
- அகராதி.com
- European dictionary for world languages
மேலும் சில:
- இராம கி ஐயாவின் வளவு
- திரு மணவை முஸ்தபா அவர்களின் கணினி களஞ்சிய அகராதி, இதன் இரண்டு பாகமும் தமிழ் இணையக் கல்விக்கழகத்தின் தளத்தில் விலையில்லாமல் கிடைக்கிறது: பாகம் ஒன்று, பாகம் இரண்டு
- How to get Tamil meaning in Microsoft Word?
- How to get Tamil meaning in Google Search?
- Google Dictionary Chrome Extension
Check solalvallan.com