சில வாரங்கள் முன்பு, நண்பர் திரு சுஜாதா தேசிகன் (Desikan Narayanan) அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தப் போது, ராயல்டி என்று பேச்சு வந்தது. என் தாத்தா லிப்கோ (LIFCO Publishers Pvt. Ltd.) நிறுவனர் திரு கிருஷ்ணசாமி சர்மா (LIFCO Sarmaji) அவர்களுக்கு திரு ராஜாஜி அவர்களோடு இந்த விசயத்தில் நடந்த ஒரு சம்பவம் நினைவுக்கு வந்தது, அதை திரு தேசிகனிடம் பகிர்ந்துக் கொண்டேன்.
சில தினங்களுக்குப் பின் மீண்டும் என்னைத் தொடர்புக் கொண்டு, நான் கூறியவற்றை கல்கி வாரயிதழில் தனது கடைசிப் பக்கம் கட்டுரையில் எழுதலாமா? எனக் கேட்டார். கரும்பு தின்னக் கூலியா, தாராளமாக என்றேன். திரு ராஜாஜியும் சரி, என் தாத்தாவும் சரி, மிக உயர்ந்த மனிதர்கள், அவர்களைப் பற்றி வழக்கில் பேசலாம், ஆனால் தவறாக ஏதாவது என்னால் அச்சில் வந்துவிடக் கூடாது என்ற எண்ணத்தில், என் தாத்தாவின் அந்தரங்கச் செயலாளராகப் பல வருடங்கள் பணிபுரிந்த எங்கள் குடும்ப நண்பர் (திருவஹீந்தரபுரம், கடலூர்) திரு வேணுகோபால் (Venugopal Desikan) அவர்களைத் தொலைப்பேசியில் அழைத்துச் சரிப் பார்த்துக் கொண்டேன். அப்போது அவர் திரு ராஜாஜியைப் பற்றி சர்மாஜியின் அறையில் வந்திருந்த விருந்தாளிகள் பேசிக் கொண்ட ஒரு தகவலையும் பகிர்ந்துக் கொண்டார், அதையும் நான் திரு தேசிகனிடம் தெரிவித்தேன். இரண்டு விசயங்களை மிக நேர்த்தியாக, சுவாரஸ்யமாக இந்த வார கல்கி இதழில் எழுதியுள்ளார். முழு விவரங்களை அங்கேப் படிக்கவும்.
டிசம்பர் 6, 2020 கல்கி இதழ், கடைகளில் (கல்கி) காகிதப் பதிப்பாக இப்போதில்லை. இணையத்தில் அவர்களின் தளத்தில் இலவசமாகக் கிடைக்கிறது; அல்லது உங்களிடம் ஜியோ எண் இருந்தால் ஜியோ நியூஸ் (Jio News) செயலியில் துல்லிய வடிவத்தில் இலவசமாகக் கிடைக்கிறது.
கட்டுரையிலிருந்து ஒரு பகுதி கீழே (நன்றி: கல்கி, திரு தேசிகன்):
//ராயல்டி பிரச்னை பற்றி எழுதாத தமிழ் எழுத்தாளர்களே இல்லை என்று கூறலாம். சமீபத்தில் என் நண்பர் வெங்கட்ரங்கனுடன்(லிஃப்கோ பதிப்பக ஸ்தாபகர் திரு. கிருஷ்ணஸ்வாமி சர்மாவின் பேரன்) பேசிக்கொண்டு இருந்த போது அவர் “சக்கரவர்த்தி திருமகன்”குறித்து ஒரு சம்பவத்தைப் பகிர்ந்துகொண்டர்.
கல்கியின் கிளாசிக் “பொன்னியின் செல்வன்” வரிசையில் கல்கியில் ராஜாஜி எழுதிய “சக்கரவர்த்தி திருமகன்” (ராமாயணம்) மற்றும் “வியாசர் விருந்து” (மஹாபாரதம்) இரண்டும் சேரும். இந்தப் புத்தகங்களும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பல பதிப்புகளைக் கண்டு இன்றும் சாதனை புரிந்து கொண்டுவருகிறது.
சக்கரவர்த்தி திருமகனின் தெலுங்குப் பதிப்பு உரிமை லிஃப்கோ பதிப்பகத்திடம் இருந்தது. அதற்கான “ராயல்டி” தொகையை (ராயல்டிக்குத் தமிழ் வார்த்தை என்ன?) மாதா மாதம் ராஜாஜிக்கு அனுப்பிக்கொண்டு இருந்தார்கள். ஒருமாதம் ராயல்டி தொகை ரூ. 1.50 என்று கணக்கு வந்தது. இந்தச் சிறு ராயல்டி தொகைக்குக் காசோலை எடுத்து தபாலில் அனுப்பும் போக்குவரத்துச் செலவுக்குப் பதில் அடுத்த மாதம் சேர்த்து அனுப்பிக்கொள்ளலாம் என்று இருந்துவிட்டார்கள்.
“ஏன் இந்த மாதம் ராயல்டிவரவில்லை?” என்று கேட்டு ராஜாஜி ஒரு தபால் கார்ட் அனுப்பினார். அதற்குப் பதிப்பகத்தார், “இந்த மாதம் ராயல்டி தொகை குறைவு, அடுத்த மாதம் சேர்த்து அனுப்பலாம் என்று இருந்தோம்” என்று பதில் அனுப்ப, அதற்கு ராஜாஜி, “மாதா மாதம் ராயல்டி அனுப்ப வேண்டும் என்பது ஒப்பந்தம். அதனால் தொகை எவ்வளவு சிறியதாக இருந்தாலும், ஒப்பந்தப்படி அதை அனுப்ப வேண்டும். ராயல்டி இல்லாத மாதம், “இந்த மாதம் ராயல்டி இல்லை” என்று ஒரு கார்ட் அனுப்ப வேண்டும்!” என்று எழுதியிருந்தார். “மன்னித்துவிடுங்கள்” என்று சர்மாஜி ராஜாஜிக்குப் பதில் அனுப்பினார். இன்று இந்தக் கடிதப் போக்குவரத்தைப் படித்தால் இப்படி எல்லாம் நடக்குமா என்று கற்பனைக்கு எட்டாத ஏதோ “சயின்ஸ் ஃபிக்ஷன்” படிப்பது போல இருக்கிறது.//