“வீழ்வேன் என்று நினைத்தாயோ” எழுத்தாளர் திரு. மாலன் அவர்கள் எழுதியிருக்கும் இந்த அருமையான புத்தகம். இன்று மதிய உணவுக்குப் பிறகு கையில் எடுத்த இந்தப் புத்தகத்தைக் கீழே வைக்க முடியவில்லை, இடைவெளி இல்லாமல் படித்து முடித்தேன். அந்த அளவு சுவாரஸ்யம், ஒரு நாவலைப் போல் சிங்கப்பூரின் வரலாறு (History of Singapore) சொல்லப்பட்டுள்ளது.

திரு மாலன் அவர்கள் சிங்கப்பூரில் ஆறு மாத காலம் தங்கி, லீ கெங் சியான் ஆய்வாளராக (Dr Lee Kong Chian Research Fellowship) இருந்த போது அங்கே அவர் பார்த்து, கேட்டு, தெரிந்துக்கொண்ட விசயங்களை நமக்கு எளிதாகக் கொடுத்துள்ளார். மேலும் அவர் வாசித்த சிங்கப்பூர் தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகளை உதாரணம் காட்டும் போது சரித்திர நிகர்வுகள் நம் கண் முன்னே விரிவடைகிறது.

புத்தகம் தொடங்குவது ஆகஸ்ட் ஒன்பது 1965ஆம் நாள் – “சிங்கப்பூர் .. சுதந்திரமான, ஜனநாயகக் குடியரசாக மலர்கிறது” என்ற (சிங்கப்பூரின் தந்தை எனப் போற்றப்படும்) திரு லீ குவான் யூவின் (Lee Kuan Yew) அறிவிப்பில் இருந்து. மலேசியாவில் இருந்து பிரியும் போது சிங்கப்பூருக்கு வேறும் 1000 பேர் கொண்ட தன்னார்வ பாதுகாப்புப்படை தான் இருந்தது என்று படிக்கும் போது, நமக்குப் பயமாகவும் ஆச்சர்யமாகவும் இருக்கிறது. மலேசியா ஏன் இதற்கு ஒப்புக்கொண்டது, இந்தோனேசியா தன்னை விழுங்காமல் எப்படிச் சிங்கப்பூர் பார்த்துக்கொண்டது (அல்லது விலை கொடுத்து வாங்கியது) என்ற விவரங்களைத் சுறுக்கமாகத் தெரிந்துக்கொள்ளுகிறோம்.

வறுமையிலிருந்த ஒரு சிறிய சதுப்பு இடத்தை, இன்று உலகத்தின் பத்து முன்னேரிய நாடுகளில் ஒன்றாக சிங்கப்பூர் உருமாற திரு லீ குவான் யூவிற்கு உற்ற துணையாகச் சுற்றி நின்ற ஒன்பது தலைவர்களைப் பற்றியும் படிக்கிறோம். சிங்கப்பூர் முன்னேற டெமாக்ரசியை (ஜனநாயகம் – Democracy) விட ‘மெரிட்டோக்ரசி” (Meritocracy) அவசியம் என ஏன் அவர்கள் நினைத்தார்கள், என்பதை ஆசிரியர் விளக்கியிருப்பது இந்தப் புத்தகத்தின் சிறப்பு. பிறகு அந்தத் தலைவர்கள் சிலரோடு திரு லீ குவான் யூவிற்கு ஏற்பட்ட கருத்து மோதல்களைப் பற்றியும் தெரிந்துக் கொள்கிறோம்.

திரு மாலன் பல இடங்களில் இந்தியாவோடு ஒப்பீட்டு சிங்கப்பூரைப் பற்றி எழுதியுள்ளது நன்றாக இருந்தது. எதைப் படித்தாலும் அதிலிருந்து பாட(ங்கள்)ம் வேண்டும், அதற்கு இந்த ஒப்பீடுகள் மிக அவசியம். சிங்கப்பூரை வியந்துப் பாராட்டவேண்டிய இடங்களில் பாராட்டி எழுதும் ஆசிரியர், அவர் பார்த்த, படித்த குறைகளையும், (வருங்கால) அச்சங்களையும் மழுப்பாமல், மறைக்காமல் எழுதியுள்ளார். இந்தியாவில் தொழிற்சங்கங்கள் என்றாலே வேலை நிறுத்தம், சம்பள உயர்வு,கடையடைப்பு என்று பார்த்துப் பழக்கப்பட்ட நமக்கு, சிங்கப்பூர் அரசு ஆரம்பத்தில் இருந்து எப்படித் தொழிற்சங்கங்களைக் கையாண்டிருக்கிறது என்பதைப் படிக்கும் போது ஆச்சரியமாக இருக்கிறது. இன்று சிங்கப்பூரில் இருக்கும் ஒரே ஒருதொழிற்சங்க கூட்டமைப்புத் தன்னை ஒரு வணிக நிறுவனமாக, இன்ஷூரன்ஸ் நிறுவனமாக, டாக்ஸி கம்பெனியாக மாற்றிக் கொண்டிருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுகிறார் ஆசிரியர். சரித்திரத்தை இறுக்கமாகத் தான் எழுத வேண்டும் என்பதைத் தளர்த்தி அங்கங்கே சில நகைச்சுவைத் துணுக்குகளையும் சேர்த்து நமக்கு விளக்கும் போது நமக்கு நன்றாகப் புரிகிறது.

இந்தப் புத்தகத்தின் ஒரே குறை அது 128 பக்கங்களோடு முடிந்துவிட்டது என்பது தான். மேலும் சொல்லுங்கள், இன்னும் படிக்க வேண்டும் என்ற ஆர்வத்தை ஆசிரியர் தூண்டிவிட்டுவிட்டார்.

சிங்கப்பூருக்குப் புதிதாகச் செல்லும் தமிழர்கள் அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம் இது. கடந்த இருபது ஆண்டுகளில் நான் பலமுறை சிங்கப்பூருக்குச் சென்று இருந்தாலும், எனக்குத் தெரிந்திராதப் பல விஷயங்களை இந்தப் புத்தகம் சொல்லுகிறது. இனி சிங்கப்பூருக்கு நான் போகும் போது அந்த நாட்டைப் பற்றிய எனது பார்வை விரிவடைந்து இருக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

"வீழ்வேன் என்று நினைத்தாயோ" - எழுத்தாளர் திரு. மாலன்

“வீழ்வேன் என்று நினைத்தாயோ” – எழுத்தாளர் திரு. மாலன்

Categorized in:

Tagged in:

, ,