
Jodi Porutham
தமிழ் காமெடி நாடகங்கள் அதுவும் எஸ்.வி.சேகர் மற்றும் கிரேஸி மோகன் அவர்களின் நாடகங்கள் எனக்கு மிகப் பிடிக்கும். பல நூறு முறைகள் அவற்றை நான் ஒலிநாடாவில் (இப்போது டிஜிட்டல்) கேட்டிருக்கிறேன். இப்போதும் கூட, கடினமான ஒரு நாளின் முடிவில், விட்டிற்குத் திரும்ப வரும் போது, மனதை லேசாக, அவற்றில் ஏதாவது ஒன்றை காரில் கேட்டுச் சிரித்துக் கொண்டு வருவேன்.
அந்த வரிசையில் சற்று வித்தியாசமான ஒரு நகைச்சுவை நாடகம், 90களில் வெளிவந்த ஜோடிப்பொருத்தம் (Jodi Porutham). பல ஆண்டுகளுக்குப் பிறகு இன்று மீண்டும் கேட்டேன், திரும்பவும் மகிழ்ந்தேன், சிரித்தேன்.
டி.வி.வரதராஜன் (T.V.Varadharajen) மற்றும் நித்யா நடித்துள்ள இந்த நாடகத்தின் கதை வசனம் ரவி அவர்கள், இயக்கம் எஸ்.வி.சேகர் (S.Ve.Shekar).
டி.வி.வரதராஜன் மற்றும் நித்யா, இருவருக்கும் ஒருவரை ஒருவருக்குப் பிடிக்கும், ஆனால் யார் சொல்வது என்ற வரட்டுக் கௌரவத்தினால், பார்க்கும் போதெல்லாம் சண்டைப் போட்டுக் கொள்கிறார்கள், இந்த நிலையில் எஸ்.வி.சேகர் அவர்களைத் தொலைக்காட்சி நிகழ்ச்சியான “ஜோடிப்பொருத்தம்” என்பதில் தம்பதிகளாக நடிக்க வைத்து விடுவார். அதில் வரும் குழப்பம் தான் கதை.
வசனங்கள் அபாரமாக இருக்கும். எல்லாப் பாத்திரங்களுக்குள்ளும் ஒரு மெல்லிய நகைச்சுவை இருக்கும். எஸ்.வி.சேகரும், டி.வி.வரதராஜனும் அவர்களின் வசனங்களைக் கன கச்சிதமாகப் பேசியிருப்பார்கள். இவர்களை மிஞ்சும் அளவிற்கு நித்யா அவர்களின் நடிப்பிருக்கும் – தமிழ் நாடக/சினிமா உலகம் இந்தத் திறமையான நடிகையைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை என்பது ஒரு குறை.
எங்காவது கிடைத்தால் கேட்டுப்பார்க்கவும். மகிழ்ச்சி!

