
Painting Religious symbols on Public Walls
இன்று வந்த இந்து தமிழ் நாளிதழில் வந்த (கீழேயுள்ள) செய்தியைப் பாருங்கள். இந்த விஷயத்தில் அமெரிக்கர்கள் ரொம்பத் தாமதம் தான் – வீடு மற்றும் கடைகளின் வெளிப்புற சுவற்றில் சிறுநீர் கழிப்பதும் குப்பைகளைக் கொட்டுவதையும் தடுப்பதற்காக, அந்தச் சுவற்றில் கடவுளின் உருவங்களை வரைவது என்பது தமிழர்களின் பண்டைய கண்டுபிடிப்பு!
ஒரு பழைய சம்பவம் நினைவுக்கு வருகிறது. 1980களில் எங்கள் வீடும் புத்தகக் கடையும் தி.நகர் ரங்கநாதன் தெருவில் இருந்தது. அப்போது வெளிப்புற சுவற்றின் மேலே கண்ணாடி ஜன்னல் அமைத்து உள்பக்கமாகப் புத்தகங்களைப் பார்வைக்கு வைத்திருந்தோம். போவோர் வருவோர், அதன் கீழே சிறுநீர் கழிப்பதாக இருந்தது. இதைத் தடுக்க என் தந்தை சுவர் ஓவியரை அழைத்துக் கடவுள் உருவங்களை வரையத் சொன்னார். ஓவியர் திறமைசாலி, பிள்ளையார் முருகன் என வரைவார் என்று நினைத்தார் போல என் தந்தை, அதனால் அவருக்கு எந்த யோசனையும் சொல்லவில்லை. எம்மதமும் சம்மதம் என்ற கொள்கையை நம்புபவர் போல ஓவியர், அவர் அறுபடை வீட்டு முருகனையும் வரைந்து இயேசு, வேளாங்கண்ணி மாதாவையும், புத்தரையும், மற்றும் இஸ்லாமிய மதச் சின்னங்கள்/குறியீடுகளையும் (பிறைநிலா என நினைக்கிறேன்) வரைந்து விட்டார். பார்க்க நன்றாக இருந்தது, என் தந்தைக்கும் பிடித்து விட்டது, ஒன்றும் சொல்லவில்லை.

அன்றைய தினமே தெருவில் இருந்த சில இஸ்லாமிய சகோதரர்கள், முக்கியமாக எதிரில் இருந்த ஒரு கடையின் உரிமையாளர் வந்து என் தந்தையிடம் சண்டை போட ஆரம்பித்து விட்டார் – எப்படி நீங்கள் இஸ்லாமிய மதக் குறியீடுகளை உங்கள் சுவற்றில் வரைய முடியும்? அது எங்களுக்குப் புனிதமானது, அது வெளிப்புற சுவற்றில் இருப்பது கூடாது என. “சரி”, என்று சொல்லி விட்டார் என் தந்தை, இருந்தபோதும் அன்று இரவு சில கற்கள் அந்தக் கண்ணாடி ஜன்னலில் எறியப்பட்டு, அது உடைக்கப்பட்டது. யார் எறிந்தார்கள் எனத் தெரியவில்லை.
அடுத்தத் தினமே என் தந்தை, ஓவியரை மீண்டும் அழைத்து இஸ்லாமிய குறியீடுகளை மட்டுமன்றி எல்லா இறைவன் படங்களையும் அழித்துவிட்டு, எங்கள் புத்தகங்களில் இருக்கும் மேல் அட்டைகளையே படமாக வரைய சொல்லி விட்டார்.
இந்தக் கதையிலிருந்து நான் சொல்ல வருவது அந்த எதிர் கடை நபரின் கோபத்தைப் பற்றி அல்ல, அது அவரது மதத்தின் மீது அவருக்கு இருக்கும் பற்றுதலை காட்டிகிறது, நான் சொல்ல வருவது – நாம் எப்போதும் நம் மதத்தையோ, வேறு மதத்தையோ பற்றிப் பேசும்போதோ எழுதும்போதோ வரைந்தாலோ அவற்றை வேண்டிய அளவு படித்துத் தெரிந்து கொண்டு, பின்பு செய்தல் நலம் – தெரியாமல் செய்தால் மற்றவரின் மனதை புண்படுத்தலாம்.
இந்த நிகழ்ச்சி இன்றைய தலைமுறையினருக்கும், சமுதாய வலைத்தளங்களில் பதிவு செய்பவர்களுக்கும் ஒரு பாடமாக இருக்கலாம் என நினைக்கிறேன். அதுமட்டுமல்ல இந்த மாதிரி பிரச்சினைகள் ஏதோ சமூக வலைத்தளங்களால் மட்டுமே வந்தது போலவும் நாம் நினைத்துவிடக்கூடாது, ஆண்டாண்டு காலமாக மனித சமுதாயத்தில் இத்தகைய பிரச்சனைகளை எதிர்நோக்குகிறோம். விட்டுக் கொடுத்தலும், அடுத்தவரை மதித்தலும் நம் அனைவருக்கும் வர வேண்டும்.


