சென்னை செனோடாஃப் சாலையில், தமிழ் நாட்டு முதல்வர் வீட்டுக்கு அருகில் ஒரு அழகான காபி கடை இருக்கிறது. கடையின் பெயர் “ட்யூ ப்ரூ ரூம் பேக்ஹவுஸ்” (Dou Brew Room & Bakehouse).
ஒரு மாலை வேளையில் சாப்பிட இங்கே சென்றோம். காபி கடைக்கு இரவு உணவு சாப்பிடப் போகலாமா என்று எங்கள் மூவரை அழைத்துச் சென்ற நண்பரைப் பார்த்துக் கேட்டோம். இங்கே பீட்சா, பர்கர் எனப் பலவும் இருக்கும் என்றார். சரியென்று சென்றோம்.
பல முறை செனோடாஃப் சாலை வழியாகச் சென்றிருக்கிறேன். இந்தக் கடையைக் கவனித்ததே இல்லை. நண்பர் அழைத்துக் கொண்டு சென்ற போது தான் இப்படி ஓர் உணவகம் இங்கே இருக்கிறது என்பதைத் தெரிந்து கொண்டேன்.
சாலையில் இருந்து பார்த்தால் பழுப்பு நிறச் சுவர்களுக்கு நடுவில் இரண்டு மாடி உயரத்திற்குமே கண்ணாடிகள் பதித்த முகப்பு சுவர் நம்மை வரவேற்கிறது. ஸ்டார்பக்ஸ் கடை போன்ற தோற்றம். காரை நிறுத்தியவுடன் வாலே பார்க்கிங் செய்ய ஓட்டுநர் வந்தார். சாவியை அவரிடம் கொடுத்துவிட்டு உணவகத்தின் உள்ளே நுழைந்தோம்.
தரைத்தளத்தில் காபி வகைகளும், அடுமனை (பேக்கரி) உணவுகளும் இருந்தது. பெரிய திரையில் ஏதோ விளையாட்டுப் போட்டி ஓடிக் கொண்டிருந்தது. என் கவனம் சாப்பாட்டில் இருந்ததால் எனக்கு அது முக்கியமாகப் படவில்லை. நண்பர் முதல் தளத்திற்கு அழைத்துச் சென்றார். இது அமர்ந்து பொறுமையாக உணவருந்தும் இடம். நல்ல சௌகரியமாகவே இருந்தது.
முதலில் நாங்கள் சாப்பிட்டது தக்காளி சூப்.
அடுத்தது மத்திய தரைக்கடல் உணவு முறையில் (Mediterranean Diet) தயாரிக்கப்பட்ட காய்கறி தட்டு. இதில் இருந்தவை, பீட்டா (pita) ரொட்டி, பச்சைக் கீரை, பீட்ரூட் ஹம்மஸ், புதினா ஹம்மஸ், மிளகாய் ஹம்மஸ் (roasted pepper hummus), நறுக்கிய பாதாம் பருப்புகள், டபூலை (tabbouleh) சாலட், புல்கர் (bulgur) கோதுமை, ஆலிவ் காரட் பீட்ரூட் துண்டுகள், மற்றும் தயிரில் வெள்ளரிக்காய் கலந்த தழுவல் (tzatziki). வண்ணமயமாகப் பார்க்கவே அழகாக இருந்தது. ஆனால் எதை எதில் தொட்டு எப்படிச் சாப்பிடுவது என்று தெரியவில்லை. ஏதோ சம்பந்தம் சம்பந்தமில்லாத வகைகள் ஒரே தட்டில் இருந்தது போல எனக்குப்பட்டது. சட்னிகள் இருந்தளவு ரொட்டிகள் இல்லாததால் முழுவதையும் சாப்பிட முடியவில்லை. சுவையும் சுமாராகவே இருந்தது.
அதைத் தொடர்ந்து, இனி விபரீதத் தேர்வுகள் வேண்டாம் என முடிவு செய்து, வெஜ் பர்கர்கள், பேகல் (Bagel) மற்றும் நான்கு வகை சீஸ் பீட்சா ஆர்டர் செய்தோம். பேகல் பரவாயில்லை. ஆனால் பீட்சா சிறப்பாகவே இருந்தது. அதுவரை வந்தது அந்தளவு இல்லை என்பதாலா என்று தெரியவில்லை ஆனால் நாங்கள் நால்வருமே பீட்சாவை ரசித்துச் சாப்பிட்டோம்.




இந்தப் பக்கம் போனால் நிம்மதியாக அமர்ந்து பேசிக் கொண்டே காபி அருந்த, பேஸ்டரீஸ் சாப்பிட, பீட்சா சாப்பிட இங்கே செல்லலாம். விலை அதிகம் ஜெண்டில்மேன், அதனால் பார்த்து ஆர்டர் செய்யவும். நன்றி.
பொறுப்பு துறப்பு: இந்தப் பதிவில் எந்த விளம்பரமோ, நிதியுதவியோ பெறப்படவில்லை. முழுக்க நான் காசுக் கொடுத்து வாங்கி பயன்படுத்தும் பொருட்களை அல்லது சேவையைப் பற்றியது. இவை என் தனிப்பட்ட அனுபவம், இதன் பயனைப் பற்றி எந்தவித உத்தரவாதமும் நான் அளிக்கவில்லை. நன்றி.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.


Thanks for the info it is costly :), is it கொதுமை or கோதுமை?
Corrected the same. Thanks.
Thank you :)