✈️சென்னையிலிருந்து மாலத்தீவுகள் செல்ல பெங்களூர் பன்னாட்டு விமான முனையம் வழியாகச் சென்றது போல, சென்னைக்குத் திரும்பிவர எனக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது கொச்சி பன்னாட்டு விமான நிலையம். கொச்சி விமான நிலையத்திற்குப் பல முறை சென்றிருந்தாலும், பன்னாட்டு விமான முனையத்திற்குப் போவது இது தான் முதல் முறை.

சுமார் இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்னர் திறக்கப்பட்ட கொச்சி விமான நிலையம், பல சிறப்புகளைக் கொண்டது என்று அவர்களின் இணையத்தளமும், விக்கிப்பீடியாவும் சொல்கிறது. சுதந்திர இந்தியாவில் முதல் தனியார் (அரசும் தனியாரும் கூட்டாக) விமான நிலையம் இது தான். இதற்குச் செலவான பெரும்பங்கை முப்பத்திரண்டு நாடுகளில் வசிக்கும் சுமார் பத்தாயிரத்திற்கும் அதிகமான வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (மலையாளிகள்) வழங்கியிருக்கிறார்கள். வெளிநாட்டிலிருந்து இந்தியாவிற்கு வரும் விமானப் பயணிகள் எண்ணிக்கையில் பார்த்தால், இந்த விமான நிலையம் நான்காவது இடத்தில் இருக்கிறது. இது முழுக்க சூரிய ஒளியில் இயங்கும் இயற்கை மின்சாரச் சக்தியைக் கொண்டு செயல்படும் விமான நிலையம் – வானத்திலிருந்து விமானம் இறங்குகையில் பார்த்தால் பல ஆயிரம் சூரிய-மின்சாரப் பலகைகள் தெரியும். எனக்குத் தெரிந்தவரையில் இந்தியாவில் இருக்கும் முக்கிய விமான நிலையங்களில் இதற்குத் தான் எந்தத் தலைவரின் பெயரும் சூட்டப்படவில்லை – எனக்கு இது பிடித்திருக்கிறது.

Transfers - Cochin International Airport
Transfers – Cochin International Airport
Conveyor Belt - Cochin International Airport
Conveyor Belt – Cochin International Airport
தீர்வையில்லா கடைகள் - கொச்சி பன்னாட்டு விமான நிலையம்
தீர்வையில்லா கடைகள் – கொச்சி பன்னாட்டு விமான நிலையம்

8 ஜுலை 2024 அன்று பன்னாட்டு முனையத்தில் இறங்கியவுடனே இந்தக் கட்டிடம் வித்தியாசமாக இருப்பது போலத் தோன்றியது, காரணம் சுவர்களுக்கு அவர்கள் தேர்வு செய்திருந்த மர வண்ணம் மற்றும் பல இடங்களில் இருந்த மர வேலைப்பாடுகள். சில நிமிடங்களிலேயே குடியேறல் மற்றும் சுங்கவரி சோதனைகள் முடிந்து, பைகள் சுற்றிவரும் ஓடும் நாடா (கன்வேயர் பெல்ட்) இடத்திற்கு வந்துவிட்டேன். பைகள் வரச் சுமார் பதினைந்து நிமிடங்கள் ஆனது – மாலத்தீவுகளிலிருந்து நான் வந்த விமானம் இன்டிகோ. பையை எடுத்துக் கொண்டு எப்படி உள்நாட்டு முனையம் செல்ல வேண்டும் என்று கேட்டதற்கு நிலைய உதவியாளர் கையைக் காட்டி தெளிவாகச் சொன்னார், “நடந்து போகலாம் சார், பத்து நிமிடத்திற்குக் குறைவான தூரம். சாலையில் இறங்கிச் செல்லாதீர்கள், கூரையிட்ட நடைபாதை இருக்கிறது அதில் போகவும்”.

அப்படியே போனேன். வழி எங்கும் அழகான கேரள முறையிலான கலைப் பொருட்களைப் பார்க்க முடிந்தது – கடவுளின் நாடல்லவா, யானைகள் இல்லாமல் எப்படி? – இதற்கு விடையாக இரண்டு இடங்களில் மிக அழகான, உயிரோட்டமான தங்க-கவசம் அணிந்த யானை சிலைகள், அவற்றின் மேல், குடை ஏந்திய நடனக் கலைஞர்கள். ஓரிரு இடங்களில் புதிய அறைகளுக்கான வேலை நடந்து கொண்டிருந்தது. உலகத்திற்கே, குறிப்பாக மத்திய-கிழக்கு மற்றும் அரபு நாடுகள் அனைத்திற்கும் வேலைக்கு ஆட்களை அனுப்பும் மலையாளிகளின் சொந்த விமான நிலையத்தில் வேலை செய்பவர்கள் (என் காதில் விழுந்தவரை) பேசிக் கொண்டது ‘இந்தி’. இதிலிருக்கும் சமூக-அரசியலை உங்கள் கற்பனைக்கு விட்டுவிடுகிறேன். வரும் வழியில் நின்று, நான் இறங்கிய பன்னாட்டு முனையத்தைத் திரும்பிப் பார்த்தால் கண்ணைக் கவர்ந்தது வெளிப்புறம் முழுவதும் பூசியிருக்கும் சுடுமண் (டேரக்கோட்டா) நிறம் – பொதுவாக உலகம் முழுவதும் விமான நிலையங்களின் வெளிப்புறம் பழுப்பு நிறத்தில் கண்ணாடிகளைக் கொண்டிருக்கும், அப்படி இல்லாமல் இங்கே மாறுபட்டிருப்பது இந்தக் கட்டிடங்களுக்கென்று தனியான அழகையும், பார்க்கும் நமக்கு ஒருவித அமைதியையும் கொடுக்கிறது. ️ உள்நாட்டு முனையத்தின் வாசலில் ஓர் உணவுக் கூடம் இருந்தது – அதனுள் சென்று, சுலைமானி டீ என்கிற மூலிகைத் தேநீரைப் பருகினேன் – சென்னை விமான நிலையத்தை விட உணவு உருப்படிகள் இங்கே விலைக் குறைந்தே இருப்பதாகத் தோன்றியது.

உள்நாட்டு விமான முனையத்தினுள் சென்று, பாதுகாப்பு சோதனைகளை முடித்துச் சென்றால், இருக்கும் விமானக் கதவுகள் சென்னையைவிடக் குறைவு தான். ஆனால் சுத்தமோ சுத்தம். என் கண்ணில் முதலில்பட்டது ஒரு புத்தகக்கடை, அதைப் பார்த்துவிட்டு, அடுத்திருந்த தேங்காய்க் கடைக்குச் சென்றேன் – தேங்காயிலிருக்கும் மூலப் பொருளை எடுத்துச் செய்திருந்த பல பொருட்கள் (சோப்பு, எண்ணெய், இனிப்புகள்) அங்கே விற்பனைக்கு இருந்தது. அடுத்து அருகில் இருந்த சில கடைகளையும் பார்த்துவிட்டு நான் ஏற வேண்டிய விமானம் புறப்படுவதாக வந்த அறிவிப்பைத் தொடர்ந்து குறிப்பிட்ட கதவுக்குச் சென்றேன்.

கொச்சி உள்நாட்டு விமான முனையம் - Terminal 1
கொச்சி உள்நாட்டு விமான முனையம் – Terminal 1
யானைகளும் வெங்கடரங்கனும் - கொச்சி பன்னாட்டு விமான நிலையம்
யானைகளும் வெங்கடரங்கனும் – கொச்சி பன்னாட்டு விமான நிலையம்
சுலைமானி டீ என்கிற மூலிகைத் தேநீர்
சுலைமானி டீ என்கிற மூலிகைத் தேநீர்
DC Books - Cochin International Airport
DC Books – Cochin International Airport
Coconut store and more
Coconut store and more

மொத்தத்தில் கொச்சி பன்னாட்டு விமான நிலையம் ஓர் அமைதியான அனுபவம். நன்றி.


Discover more from Mangoidiots

Subscribe to get the latest posts sent to your email.

Leave a Reply

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading

Discover more from Mangoidiots

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading