பெங்களூர் கெம்பெகவுடா விமான நிலையத்திற்குப் பல முறை சென்றிருந்தாலும், பன்னாட்டு விமான முனையத்திற்குப் போவது இது தான் முதல் முறை. சென்ற வாரம் சென்னையிலிருந்து மாலத்தீவுகள் செல்ல பெங்களூர் உள்நாட்டு முனையம் ஒன்றில் (Terminal 1) இறங்கி, பிறகு முனையம் இரண்டுக்கு (பன்னாட்டு விமான முனையம்) சென்றேன். இது மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்ட முனையம் என்று நண்பர்கள் சொன்னது உண்மை தான்.
நம் நாட்டில் இருக்கும் எல்லா விமான நிலையங்கள் போலத் தான் உள்நாட்டு முனையம் ஒன்றும் இருக்கிறது. வெளியில் வந்தவுடன் கண்ணில்பட்டது, எனக்குத் தேவையேயில்லாத வெளிநாட்டு மதுக்கடை, அதற்கு அடுத்து அமெரிக்க ஸ்டார்பக்ஸ், பக்கத்தில் தென்னாட்டுத் துரித உணவுக் கடை – ஊரூ காண்ட்டின். காலை வேளை என்பதால் அங்கே நான் தேர்வு செய்தது “தமிழ்நாட்டுச் சிற்றுணவு” (TamilNadu Breakfast). விலை ரூபாய் 410, இதில் ஒரு குமிழளவு பொங்கல், ஒரு வடை, ஓர் இட்லி, சட்னி, சாம்பார் மற்றும் மோர். சுவை பரவாயில்லை, உப்பும் காரமும் குறைவு தான், கொஞ்சம் இனிக்கவும் செய்தது – இருந்தும் அடுத்து விமானத்தில் கொடுக்கும் கேவலமான உணவுக்கு இது மேல் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டு சாப்பிட்டு முடித்தேன்.

முனையம் ஒன்றிலிருந்து முனையம் இரண்டுக்கு (பன்னாட்டு முனையம்) செல்ல இலவசப் பேருந்து வசதி இருக்கிறது. பகல் வேளைகளில் சில நிமிடங்களுக்கு ஒரு வண்டி வருகிறது, பயணம் ஐந்து நிமிடங்களுக்குக் குறைவாக ஆகிறது. கூட்டம் அதிகமில்லை, பெரிய பெட்டிகள் கூடக் கொண்டு செல்லலாம், நாம் தான் தூக்கி ஏற்றி இறக்க வேண்டும் என்பதை நினைவில் கொள்ளவும். என் பெட்டி சென்னையிலிருந்து நேரடியாக (Through Check-In) மாலேவுக்கு பதிவு செய்திருந்ததால் என் கைக்கு அதுவரவில்லை, விமான நிறுவனமே (இண்டிகோ) சென்னையிலிருந்து வந்த வண்டியிலிருந்து மாலே வண்டிக்கு அனுப்பிருந்தார்கள். திரும்ப வரும் போது (அதாவது இந்தியாவுக்குத் திரும்பும் போது) இப்படிச் செய்ய முடியாது, நீங்கள் முதலாவதாக நாட்டுக்குள் தரை இறங்கும் நிலையத்தில் பெட்டிகளை எடுத்து சுங்கத் துறை சோதனையை முடித்துத் திரும்பவும் உள்நாட்டு முனையத்திற்கு நீங்களாகவே தான் கொண்டு செல்ல வேண்டும். நான் திரும்பியது கொச்சி விமான நிலையம் மூலமாக, அங்கே இந்த முறை தான் – இப்படித் தான் பெங்களூரில் இருக்கும் என்று நினைக்கிறேன்.




பெங்களூர் கெம்பெகவுடா பன்னாட்டு விமான முனையத்தைப் பற்றிப் பார்ப்போம். மும்பை, டில்லி அளவு பெரியது இல்லை. சுவர்கள், கூரைகள் எல்லாம் மூங்கில் மரத்தில் செய்தது போன்ற தோற்றம், பார்க்கவே அழகாக இருக்கிறது. முனையத்தில் நுழைந்து உங்கள் நுழைவுச் சீட்டைப் பெற்றுக் கொண்டவுடன், நீங்கள் செல்ல வேண்டிய கதவைத் தேடினால் தீர்வையில்லா கடைகள் தான் இருக்கிறது. வெளிநாடுகளில் சுற்றுலா தளங்களில், டிஸ்னி பொழுதுபோக்கு பூங்காக்களில் எல்லாம் வெளியில் வரும் வழி, கடைகளினுள் சென்றுவரும் படி தான் அமைத்திருப்பார்கள், அது போலவே இங்கேயும் கடைப் பகுதிக்குள் நுழைந்து தான் உங்கள் விமானம் இருக்கும் கதவுக்குச் செல்ல முடியும். மதுக் கடைகளையும், மிட்டாய்க் கடைகளையும் தாண்டி பெரியதாகச் சொல்லிக் கொள்ளும்படி என் கண்ணில் எதுவும் படவில்லை. ஆனால் மிகச் சுத்தமாக, சென்னை விமான நிலையத்தைவிடப் பல மடங்கு சிறப்பாக இருக்கிறது. பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு வரை ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்குச் சென்று திரும்பும் போதும், அங்கேயிருக்கும் வானூர்தி நிலையங்கள் போல நம்மூரில் என்றாவது வருமா என்று ஏக்கமாக இருக்கும் – இப்போது இந்தியாவில் இருக்கும் வானூர்தி நிலையங்கள் வசதியாக, நவீனமாக இருப்பது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை எடுத்துக்காட்டுகிறது.
பாதுகாப்பு சோதனையில் நான் போன போது (வெள்ளிக்கிழமை சுமார் பகல் 11:30 மணி) என்னைத் தவிர யாருமே இல்லை, அதனால் மிக சீக்கிரம் முடிந்தது – தாண்டியவுடன் ஒரு செயற்கை அருவி இருக்கிறது. அதைத் தாண்டிவந்தால் உணவுக் கடைகள் மற்றும் இளைப்பாறுமிடங்கள் (Lounges). விமானக் கதவுகள் இருக்கும் இடத்தை அடைந்துவிட்டால் கடைகள் எதுவும் கிடையாது, அதனால் அதற்குச் செல்லும் முன்னரே தண்ணீர் புட்டிப் போன்றவற்றை வாங்கி வரவும். இப்போதெல்லாம் இண்டிகோவில் தண்ணீர் குவலையில் தான் தருகிறார்கள் – முன்பே கேட்டு வாங்கி வைத்துக் கொள்ள முடியாது, சிந்திவிடும், சீட்டுப்பட்டி விளக்கு எறிந்தால் தரமாட்டார்கள்.





மொத்தத்தில் பெங்களூர் கெம்பெகவுடா பன்னாட்டு விமான நிலையம் வசதியான அனுபவம். அடுத்த பதிவில் கொச்சி நிலையம் இதைவிட அழகாக (ஆனால் சிறியது) இருந்ததைப் பற்றிப் பார்க்கலாம்.
Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

