நாம் வாழும் உலகம் எந்தளவு இன்றைக்குக் கணினி மயமாகி இருக்கிறது, மென்பொருள் இல்லாமல் இயங்க முடியாது என்பதை வெளிச்சம் போட்டுக்காட்டி இருக்கிறது எங்கோ அமெரிக்காவில் Crowdstrike என்கிற நிறுவனத்துப் பொறியாளர்கள் இன்று செய்த தவறு. இது விண்டோஸ் கணினிகளுக்கு மட்டும் வந்த வினை என்று பார்ப்பது முழுமையாக இருக்காது என்பது என் கருத்து. எந்த இயங்குதளம் சிறந்தது என்று பேசுவதும் முழுமையாக இருக்காது. ஒரே நேரத்தில் எப்படி இத்தனை ஆயிரம் கணினிகளுக்கு இந்த புதுப்பதிப்பு சோதனை செய்யாமல் சென்றது, அவர்களின் (மற்றும் பெரு நிறுவனங்களின் குறிப்பாக மென்பொருள் நிறுவனங்களின்) மென்பொருள் மேலாண்மை வழிமுறையில் என்ன தவறு நடந்தது என்று பார்க்க வேண்டிய தருணம் இது. செயற்கை நுண்ணறிவைக் கொண்டு இதைப் போன்ற நிகழ்வுகள் வருங்காலத்தில் வராமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டிய நேரமிது. விமானச் சேவை நிறுவனங்கள் மற்றும் பல பெரு நிறுவனங்கள் ஏன் அவசரக்கால மாற்றுவழிகள் (Backup emergency devices) வைத்துக் கொள்ளவில்லை என்றும் சிந்திக்க வேண்டும். மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்கு இதில் என்ன, அவர்கள் விண்டோஸ் இயங்குதளத்தில் என்ன செய்திருக்கலாம், செய்ய வேண்டும் என்பதை வரும் நாட்களில் ஆராய்ச்சியாளர்கள் சொல்வார்கள், அதுவும் ஆராய வேண்டியவை தான்.



மார்ச் 2025 Update:
சென்ற ஆண்டு ஜூலையில் உலகளவில் பல்லாயிரம் விண்டோஸ் கணினிகள் செயலிழந்து போனது. இதனால் விமானச் சேவைகள் மற்றும் பல பெரு நிறுவனங்களின் பணிகள் சில நாட்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இது நடந்ததற்கு அமெரிக்காவின் Crowdstrike நிறுவனத்தின் கவனக்குறைவு காரணம் என்றாலும் வல்லுநர்கள் மைக்ரோசாப்ட்டை குற்றம் சொன்னார்கள்.
இந்த மாதிரி பிரச்சனைகள் வரும் காலங்களில் வராமல் தடுக்க மைக்ரோசாப்ட் விண்டோஸ் 11 இயங்கு தளத்தில் புதுச் செயல்முறையை அறிமுகம் செய்கிறது. இந்த முறையில், இனி இயங்கு தளம் தொடங்கும் போது எந்த மென்பொருள், வன்பொருள் பிரச்சனை வந்தாலும் விண்டோஸ் நீல நிற அபாய (Blue Screen of Death) திரையைக் காட்டுவதோடு செயலிழந்து நிற்காது. விண்டோஸே மைக்ரோசாப்ட்டின் இணையத்தளத்தைத் தொடர்பு கொள்ளும். அங்கே இதற்கான தீர்விருந்தால் அதைப் பெற்று தன்னை தானே சரி செய்து கொண்டு தொடரும். அப்படித் தீர்வில்லை என்றால் நீங்களே சரி பார்க்கச் சில வசதிகளை வழங்கும்.
இந்த விசயத்தில் மைக்ரோசாப்ட் செய்ய வேண்டியது நிறைய இருந்தாலும் இது நல்ல தொடக்கமாகவே எனக்குப் படுகிறது. நீங்கள் இந்த மாற்றங்களை எப்படிப் பார்க்கிறீர்கள்?
இதோடு நிற்காமல், வரும் காலங்களில் பின்வரும் வசதிகள் வரும் என நான் எதிர்பார்க்கிறேன்: செயற்கை நுண்ணறிவைக் கொண்டு மூன்றாம் நிறுவனங்கள் எழுதிய நிரலிகளின் தரத்தை விண்டோஸ் சோதித்துப் பார்த்து இயக்கும்; அதோடு கணினியில் மென்பொருள் பிரச்சனைகளைத் தானாகவே தீர்க்க முயலும்.
அடிக்குறிப்பு:
இது ஏதோ விண்டோஸ் இயங்கு தளத்தில் மட்டுமே வரும் சிக்கல்கள் என எண்ணுவது தவறு. ஆப்பிள் மேக், லினிக்ஸ் கணினிகளில் இவை பொதுவாக வருவது இல்லை என்றாலும் அங்கேயும் வந்திருக்கிறது, வரும் காலங்களில் வரலாம்.
விண்டோஸ் இயங்கு தளத்தில் இவை அதிகமாக வரக் காரணம் ஆன்ட்ராய்ட் செல்பேசிகளைப் போலப் பல ஆயிரம் நிறுவனங்களும் தங்களின் கணினிகளில் விண்டோஸை இயக்குகிறார்கள். இவை அனைத்தையும் மைக்ரோசாப்டால் சோதித்துப் பார்க்க முடிவதில்லை. அதோடு நீங்களாகக் கணினி பாகங்களைத் தனித்தனியாக வாங்கி உருவாக்கிக் கொள்ளலாம் – இந்தப் பதிவை நான் எழுதும் மேஜைக் கணினியை நானாகவே ஒன்றுதிரட்டி வடிவமைத்தது என்பதைக் குறிப்பிட விரும்புகிறேன். லினிக்ஸ் இயங்கு தளத்தை எடுத்துக் கொண்டால் பொதுவாக இதைப் பயன்படுத்துபவர்கள் பொறியாளர்களாக இருப்பதால், இத்தகைய சிக்கல்கள் வந்தால் அவர்களால் சுலபமாகத் தீர்த்துக் கொள்ள முடிகிறது.

Discover more from Mangoidiots
Subscribe to get the latest posts sent to your email.

