பல சமயங்களில் உங்கள் கணினித் திரையில் பார்க்கும் ஒரு காட்சியில் அல்லது புகைப்படத்தில் இருக்கும் வரிகளை, காப்பி அண்டு பேஸ்ட் (பிரதி) செய்ய முடியாது. அதைப் பார்த்து, படித்து, மீண்டும் நாமே தட்டச்சு அல்லது குரல்வழி உள்ளீடு செய்ய வேண்டும், இது நேரம் எடுக்கும். இதைச் சுலபமாகச் செய்ய விண்டோஸ்ஸில் புதிய வசதி வந்திருக்கிறது.

🪟 உங்களிடம் விண்டோஸ் 11 (வெர்ஷன் 23H2) அல்லது அதற்கு மேலிலிருந்தால் இந்த வசதி வேலை செய்யும், உங்களிடம் இருக்கும் விண்டோஸ் 11 பதிப்பைப் பார்க்க “Winver” (மேற்கோள் குறிகளை விட்டுவிடவும்) என்று ஸ்டார்ட் பட்டனை அழுத்திக் கட்டளையிடவும்.

📷திரையில் நீங்கள் பார்க்கும் கட்சியை அல்லது படத்தை ஸ்கிரீன்-ஷாட் (திரை ஒளிப்படம்) எடுக்கவும், இதைச் செய்யச் சுலபமான வழி, இந்த மூன்று விசைகளையும் ஒரே சமயத்தில் அழுத்தவும் – விண்டோஸ் விசை, ஷிப்ட் விசை, ஆங்கில எழுத்து எஸ் (S) விசை. இப்படிச் செய்தவுடன் வரும் திரையில் எதைப் படம் எடுக்க வேண்டும் என்று வரும், அதில் முழுக் கணினித் திரையுமா, அல்லது ஒரு ஜன்னலை மட்டுமா என்று சொல்லி, வேண்டிய பகுதியைத் தேர்வு செய்து படம் எடுத்தால், அது சினிப்பிங்க்-டூல் (Snipping Tool) என்கிற செயலியைத் தொடங்கி, அதில் எடுக்கப்பட்ட படம் வரும். படத்தின் மேலே (அல்லது கீழே) வரும் பட்டியில் பேனா, அழிப்பான், அளவுகோல் இவற்றைத் தொடர்ந்து இரண்டரை கோடுகள் ஒன்றன் கீழ் ஒன்றாக, ஒரு சதுர அடைப்புக்குறி போன்ற சின்னத்திற்குள் இருக்கும், அந்தச் சின்னத்தை அழுத்தி, வரும் காப்பி-ஆல்-டெக்ஸ்ட் (Copy all text) என்று கட்டளையிட்டால் போதும். திரையில் நாம் எடுத்த படத்தில் இருக்கும் எழுத்துக்களை விண்டோஸ் தானாகவே செயற்கை நுண்ணறிவைக் கொண்டு எழுத்துணர்ந்து, பிடிபலகையில் (Clipboard) உள்ளீடு செய்துவிடும். நமக்கு வேண்டிய செயலி அது வாட்ஸ்-ஆப்பாக இருக்கலாம், ஜி-மெயிலாக இருக்கலாம், அல்லது நோட்பாடாக இருக்கலாம் அங்கே சென்று ஒட்டிக் கொள்ளலாம். நாமாக மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டாம்.

இதில் சிறப்பு, விண்டோஸ் 11 இருக்கும் இந்த சினிப்பிங்க்-டூல் வசதி தமிழ் எழுத்துகளையும் நன்றாக உணர்கிறது. இணைத்த படங்களைப் பார்க்கவும். 99%க்கும் மேலாகச் சரியாக வந்து இருப்பதாய் தோன்றுகிறது. இந்த வசதியைக் கொண்டு PDF கோப்பில் இருப்பதைக் கூட படம் எடுத்து, எழுத்துக்களாக மாற்றலாம், ஆனால் ஒவ்வொரு பக்கமாகத் தான் செய்ய முடியும். விரைவில் தமிழ் வரிகளைக் கொண்ட முழு பிடிஎஃப் கோப்பையும் எழுத்துக்களாக மற்றும் வசதி விண்டோஸ்ஸிலேயே வரும் என்று எதிர்பார்க்கிறேன் – தற்போது இதைச் செய்யும் முறையை நான் முன்னையே எழுதியிருக்கிறேன்.

முதல் அடி: திரையில் வேண்டிய பகுதியைத் தேர்வு செய்து படம் எடுத்தல், பிறகு சினிப்பிங்க்-டூல் செயலியைக் கொண்டு எழுத்துணர்ந்து பிடிபலகையில் (Clipboard) உள்ளீடு செய்தல்.

முதல் அடி: திரையில் வேண்டிய பகுதியைத் தேர்வு செய்து படம் எடுத்தல், பிறகு சினிப்பிங்க்-டூல் செயலியைக் கொண்டு எழுத்துணர்ந்து பிடிபலகையில் (Clipboard) உள்ளீடு செய்தல்.

இரண்டாம் அடி: நோட்பாட்டில் ஒட்டிக் கொள்ளலாம். நாமாக மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டாம்.

இரண்டாம் அடி: நோட்பாட்டில் ஒட்டிக் கொள்ளலாம். நாமாக மீண்டும் தட்டச்சு செய்ய வேண்டாம்.

Categorized in:

Tagged in: