இரண்டு வாரங்களுக்கு முன் சென்னையில் வந்த பெருவெள்ளம், மழை முடிந்து சில நாட்கள் கழித்துத் தான் கவனித்தேன்: வீட்டில் இருக்கும் சேமிப்பு அறை பரணையிலும், புத்தக அடுக்கினுளிலும் தண்ணீர் வழிந்து கொண்டிருப்பதை. அடுக்குகள் கதவுப் போட்டு முடியிருப்பதால் கண்ணில் படவில்லை. கவனித்தவுடன் திறந்து பார்த்தால் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றெண்ணி வைத்திருந்த, வாழ்வின் முக்கிய நிகழ்வுகளின் புகைப்பட ஆல்பம்கள், முன்னர் நான் காசுக் கொடுத்து வாங்கிய தமிழ்த் திரைப்படக் குறுந்தகடுகள், பாடல் குறுந்தகடுகள், வெளிநாட்டிலிருந்து வாங்கிய ஆங்கிலத் தொலைக்காட்சி தொடர்களின் குறுந்தகடுகள் எனப் பல பொருட்களின் மேலும் தண்ணீர், சில தொகுப்புகள் முற்றிலும் ஈரமாக இருந்தது. கடந்த சில நாட்களாக மின்-விசிறியில் காயவைத்து பெரும்பாலானவற்றை உலர்த்திவிட்டேன். ஒருசில ஆல்பம்களில் இருந்த படங்கள் எல்லாமே சேதமாகிவிட்டது – நல்ல வேலை பெரும்பாலானவை என்னிடம் கணினியில் எண்ணிம வடிவில் பாதுகாப்பாக இருக்கிறது.

இதோடு பொக்கிஷமாகக் கருதி நான் வைத்திருப்பது, நல்ல நிலையில் இருந்த ஆப்பிள் ஐ-மேக் முதல் பதிப்பு. இதன் கீழேயும் தண்ணீர். இன்னும் இரண்டு நாட்கள் காயவைத்தவுடன் தான் மின்சாரம் செலுத்தி இயக்கிப் பார்க்கப் போகிறேன். ஒன்றும் கேட்டுப் போய் இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொண்டிருக்கிறேன்.

Chennai Rains and Floods 2023: Apple iMac first edition and CDs water damaged

Chennai Rains and Floods 2023: Apple iMac first edition and CDs water affected

என் இப்படித் தண்ணீர் உள்ளே வந்தது என்று தண்ணீர் தடுப்பு பொறியாளரை அழைத்து இன்று கேட்டதில் வீட்டின் மொட்டைமாடியில் இருக்கும் ஒரு தூணில் உருவாகியிருக்கும் விரிசல், அதில் உள்ளே செல்லும் தண்ணீர், மொட்டைமாடி தரையில் இருக்கும் சிறு வெடிப்புகளில் சென்று, பரணையில் உருவாகியிருக்கும் விரிசல்களின் வழியே வழிந்திருக்கிறது. அவர் பார்த்தவரை கட்டுமான உறுதியில் எந்தப் பாதிப்பும் இல்லை, இரண்டு நாட்கள் வேலை செய்து, தண்ணீர் தடுப்பு ரசாயனக் கலவையைப் பூசினால் எல்லாம் சரி செய்துவிடலாம் என்றார். அதிகம் செலவு இருக்காது என்று தோன்றுகிறது. உளுத்துப் போன பலகைகளை மாற்ற மரவேலை தச்சர் தான் பெரிய செலவு வைப்பார் என்று நினைக்கிறேன்.

இதெல்லாம் பெரிய வேலையில்லை, இனி இந்த ஈரமான புகைப்பட ஆல்பம்கள், குறுந்தகடுகளை நான் வைத்திருக்கத் தான் வேண்டுமா? என்ன பெரிய பயன் என்ற கேள்விக்கு என்னிடம் சரியான பதிலில்லை. மேலும், இந்த வாரம் திருநெல்வேலியில் மழை வெள்ளத்தையும் பார்த்தால் நாம் வாழும் வாழ்க்கைக்கு அத்தியாவசியத் தேவையாக இருபத்தை மட்டும் வைத்துக் கொள்வது புத்திசாலித்தனம் தோன்றுகிறது. இருந்தும் பல ஆண்டுகளாகச் சேமித்து வைத்ததால் தூக்கிப் போட மனசு வரவில்லை, அப்படியே செய்வதாக இருந்தாலும் ஒவ்வொரு பொருளாக எடுத்து வேண்டுமா வேண்டாமா என்று முடிவு செய்ய வேண்டும், அதை நினைத்தாலே கண்ணைக் கட்டுகிறது. உங்களின் யோசனை என்ன?

Chennai Rains and Floods 2023: Photo Albums water damaged

Chennai Rains and Floods 2023: Photo Albums water damaged

#ChennaiRains #photoalbums #சென்னைவெள்ளம் #compactdisccollection

Tagged in:

,