விழுப்புரத்திற்கும், திருவண்ணாமலைக்கும் நடுவில் இருக்கும் கோயில் தலம் திருக்கோயிலூர். சில மாதங்களுக்கு முன்னர் உறவினர் அவரின் வீட்டுக் கல்யாணத்திற்கு அங்கே வரும்படி அழைத்த போது தான் அந்த ஊரின் பெயரை நான் கேள்விப்பட்டேன். தமிழகத்தின் பல பெரிய ஊர்களைப் பற்றியே எனக்குத் தெரியாது. அப்படியிருக்கையில், இந்த ஊரின் பெயரைக் கேட்டவுடன் எனக்குத் தோன்றியது: அது சின்ன கோயில் ஊராக இருக்கும், இரண்டு மூன்று தெருக்கள் இருக்கும், அங்கே வசிக்கும் எல்லோருக்கும் கோயிலைச் சுற்றித் தான் அடிப்படை பொருளாதாரம் இருக்கும் என்று. நேற்று அங்கே சென்றிருந்த போது தான், அந்த ஊர் அப்படி இல்லை, என் யுகம் எவ்வளவு தவறு என்று.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இருக்கும் திருக்கோயிலூர், பெரிய ஊர் என்றே சொல்லலாம். சுமார் ஓர் இலட்சம் பேர் அங்கே வசிக்கிறார்கள். பெரிய திரையரங்கு, நான்கு வழி சந்திப்பில் காந்தி சிலை, கோயில் தெருவில் சாட் மற்றும் பீட்ஸா ஹோட்டல், சென்னை சரவணா ஸ்டோர்ஸ் அளவு பெரிய பல் பொருள் அங்காடி, அப்போலோ மருந்துக் கடை, தெருவுக்குத் தெரு மருத்துவ ஸ்கேன் சென்டர் என எல்லாம் இருக்கிறது. அதோடு பெரிய ரிலையன்ஸ் டிரெண்ட்ஸ் துணிக் கடையும் இருக்கிறது – அவ்வளவு எளிதாகக் கடைக்கான இடத்தை ரிலையன்ஸ் தேர்வு செய்ய மாட்டார்கள், மக்கள்தொகை, அவர்களின் வரும்படி எனக் கணக்கிட்டுத் தான் செய்வார்கள், ஊரின் அளவுக்கு இதுவும் நல்ல எடுத்துக்காட்டு. மேலும் நான் சென்றிருந்த திருமண விழா நடந்த மண்டபமும் பெரியதாக இருந்தது (அதன் பக்கத்தில் இதே போன்று இன்னொன்றும் இருந்தது): இந்த மண்டபத்தில் சுமார் ஐந்நூறு பேருக்கு மேல் அமரலாம், அறுபது அடி அகல மேடை, இருநூறு பேர் ஒரே பந்தியில் சாப்பிடக்கூடிய அளவு உணவருந்தும் இடம்.

போகும் வழியில் (சென்னை-செஞ்சி-திருவண்ணாமலை) இருந்த வயல்கள் பச்சை பசேல் (கரும்பு மற்றும் அரிசி என்று நினைக்கிறேன்) என்று கண்ணில் பட்டது, மகிழ்ச்சியாக இருந்தது!

இந்த ஊரைப் பற்றி விக்கியில் படித்த போது, தெரிந்து கொண்ட சுவையான செய்தி: ஔவையார் அங்கவை மற்றும் சங்கவை என்ற பெண்களை திருக்கோயிலூர் அரசனுக்கு மணமுடித்து வைத்தாள், அந்தத் திருமண விழாவுக்குச் சேர, சோழ, பாண்டிய மன்னர்களை அழைக்க விநாயக பெருமாள் ஓலை எழுதினார் என்று. இதற்கான சங்க இலக்கியப் பாடல்களும் இருக்கிறது போல.

திருக்கோயிலூர்: நான்கு வழி சந்திப்பில் காந்தி சிலை, திருமண மண்டபம் மற்றும் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் [Tirukoilur]

திருக்கோயிலூர்: நான்கு வழி சந்திப்பில் காந்தி சிலை, திருமண மண்டபம் மற்றும் அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில் [Tirukoilur]

திருக்கோயிலூரில் மற்றும் அதன் அருகில் இருக்கும் இரண்டு புகழ்பெற்ற வைணவ ஆலயங்கள்: 

    1. அருள்மிகு உலகளந்த பெருமாள் கோவில், திருக்கோயிலூர்
    2. அருள்மிகு ஆதி திருவரங்கம் திருக்கோயில்

Categorized in:

Tagged in:

,